மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

– மரபின் மைந்தன் முத்தையா

ஒரு மனிதன் எட்ட வேண்டிய இலட்சியத்தை மலையுச்சி என்று கற்பனை செய்து கொண்டால், அதை எட்டுவதற்கான தடைகள் பெரும்பாலும் மனதிலேதான் இருக்கிறது என்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். உங்கள் கவனம் எதை நோக்கிக் குவிகிறது என்பதைப் பொறுத்தே அந்தத் தடையைத் தாண்டுவதும் தடையிலேயே தேங்குவதும் இருக்கிறது.

இலட்சியத்தைப் பற்றியே சிந்திப்பவர்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி, இலக்கை எட்டுவதற்கு ஆயத்தமான மனநிலையில் இருப்பார்கள். தடைகளைப் பற்றியே கவலைப் படுபவர்கள், தங்களையும் அறியாமல், தங்கள் இலட்சியத்தை எட்டுவதற்கான தடையின் அங்கமாகவே மாறிப் போவார்கள்.

ஒருவருக்கு, தன் உழைப்பிற்கான ஊதியத்தை உயர்த்திக் கேட்க வேண்டுமென்று ஆசை. அதற்கான நியாயங்களும் அவர் பக்கம் உண்டு. நிர்வாகமும், அவராகக் கேட்கட்டும் என்று காத்திருந்ததே தவிர, தரக்கூடாது என்று துளியும் கருதவில்லை. ஆனால், தான் கேட்டால் தர மாட்டார்களோ என்று அவர் நினைத்தார். “மறுத்துவிட்டால் மானக்கேடு.” தொடர்ந்து அங்கே வேலை பார்க்க முடியாது. என்ன செய்யலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டேயிருந்தார். அதன் விளைவாக, தான் எதிர்பார்ப்பது கிடைக்காது என்ற எண்ணமே அவருக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டது.

இதற்கிடையில், அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படத் தொடங்கினார். எல்லா மருத்துவர்களிடமும் காட்டியாகிவிட்டது. வயிற்று வலிக்கான காரணம் புலப் படவே இல்லை. அந்த வலி இரவு நேரங்களில்தான் தொடங்குகிறது என்பது மட்டும் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. பிறகு உளவியல் நிபுணர் ஒருவர், ஹிப்னாட்டிசம் மூலம் உண்மையைக் கண்டறிந்தார். மறுநாள் நிர்வாகத்திடம் தன் ஊதிய உயர்வு பற்றிப் பேசலாம் என்று அவர் முடிவெடுத்த போதெல்லாம், முந்தைய இரவே அவருக்கு வயிற்றுவலி தொடங்கியது. விடுப்பெடுக்கத் தூண்டியது.

எல்லோருக்கும் வயிற்று வலி வயிற்றில்தான் உருவாகும். இவருக்கு மட்டும் மனதில் உருவாகி வயிற்றுக்கு வந்து சேர்ந்தது. தடை மனதில் இருந்ததால் ஊதிய உயர்வு கேட்பதைத் தள்ளிப் போட இப்படி ஓர் ஏற்பாட்டை மனம் செய்தது. அந்தத் தடையை மனதிலிருந்து அகற்றிய பிறகு அவர் உரிமையுடன் கேட்டார். உயர்வுகள் பெற்றார். உற்சாகமாக வேலையைத் தொடர்ந்தார்.

நம்மில் பலரும் நாமறியாமலே இப்படி உள்நிலைத் தடைகளை உருவாக்கி வைத்திருப்போம். எந்த ஒன்றாய் இருந்தாலும் அதை எட்ட முடியாது என்ற எண்ணத்தாலேயே கைவிடுபவர்கள் தங்களைத் தாங்களே கை விட்டவர்கள் ஆவார்கள்.

உலகம் உங்களைக் கைவிட்டாலும் நீங்கள் உங்களைக் கைவிடாமல் இருந்தால் போதும். உலகையே ஜெயிக்கலாம். ஆனால் பெரும்பாலும் என்ன நடக்கிறது? உலகமே எதிர்பார்த்திருக்கும் போதுகூட பலர் தம்மைத் தாமே கை விடுகிறார்கள். கூழாங்கல்லைக்கூட மலையென்று நினைத்துக் குழம்பிப் போய்விடுகிறார்கள்.

ரூத் என்றொரு பெண். பள்ளிப் படிப்புக்கு மேல் தொடரவில்லை. பெரிய நாட்டியத் தாரகையாக உருவாக வேண்டுமென்று ஆசை. நடனம் பயின்றார். நடன ஆசிரியையாகவும் ஆனாள். சம்பளம் போதவில்லை. வீட்டை அடகு வைத்திருந்தார். கூடுதல் வருமானம் வேண்டும் என்பதற்காக, வார இதழ் ஒன்றில் விளம்பரம் சேர்க்கும் வேலையில் சேர்ந்தார். விறுவிறுப்பாக உழைத்து விளம்பர மேலாளர் ஆனார். வீட்டை மீட்க முடிந்தது. எல்லாம் நன்றாகப் போவது போல் இருந்தது. வார இதழ் உரிமையாளர்கள் அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் வரை….

தங்கள் வார இதழை விற்றுவிடப் போவதாக அவர்கள் அறிவித்தனர். புதிய நிர்வாகம் தன்னைப் பணியில் வைத்திருக்குமா என்று ரூத் கலங்கினார். அதிரடியாய் ஒரு முடிவெடுத்தார். வீட்டை மறுபடியும் அடகு வைத்தார். 65000 டாலர் செலுத்தி அந்தப் பத்திரிகையைத் தானே வாங்கினார். இப்போது ரூத் வெற்றிகரமான பத்திரிகையாளராக விளங்குகிறார்.

மனதின் தடையை அகற்றினாலே இலட்சியத்தை மறைத்திருக்கும் தடையை அகற்ற முடியும் என்பதற்கு ரூத் சரியான உதாரணம். மனதின் தடைகளை அகற்றுவது பற்றிய மனப் பயிற்சியை மேல்நாட்டு உளவியல் நிபுணர் ஒருவர், நீண்ட காலங்களுக்கு முன்னர் தந்திருந்தார்.

உங்கள் மனதில் ஒரு யானையைக் கற்பனை செய்து கொள்ளவேண்டும். அதன் மேலிருந்தோ அருகிலிருந்தோ வழிநடத்திச் செல்லும் யானைப் பாகனின் தோற்றத்தையும் கற்பனை செய்து கொள்ள வேண்டும். யானைப்பாகன் தர்க்க ரீதியான சிந்தனைகளுக்கும், யதார்த்தமான சிந்தனைகளுக்கும் அடையாளம். யானை, நம் கனவுகள், கட்டுக்கடங்காத உணர்வுகள் ஆகியவற்றுக்கு அடையாளம்.

யானைப்பாகனை விடவும் பலமடங்கு வலிமை கொண்டது யானை. ஆனாலும் அதைவழிநடத்துவதற்குப் பாகன் தேவைப்படுகிறான். பாகனில்லாத யானைக்கு பாதையைப் பயன்படுத்தத் தெரியாததுபோல நம் உணர்வுகள் நம் உலகியல் அறிவால் வழிநடத்தப்பட வேண்டும். தன்னினும் வலிய யானையைப் பாகன் வழி நடத்துவது போல, நம்மினும் பெரிய தடைகளை நாம் நகர்த்த முடியும். நம் கனவுகளை நாமே வழி நடத்த இயலும்.

இதில் முக்கியமான மூன்று அம்சங்களை கவனிக்க வேண்டும். போகும் இடம் பாகனுக்குத் தெரிய வேண்டும். யானையை வழிநடத்தும் பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். மூன்றாவதாக பாதை சரியாக இருக்க வேண்டும். நீங்கள் அடைய விரும்பும் உயரம் பற்றிய தெளிவு உங்களுக்கு வேண்டும். அதை நோக்கி மனம் என்னும் யானையை வழிநடத்தும் வித்தையை நீங்கள் பழகியிருக்க வேண்டும். அப்படி பயணம் செய்யும் பாதையை துல்லியமாகத் திட்டமிட்டிருக்க வேண்டும். உங்கள் மனதை வழிநடத்துங்கள். உலகம் உங்கள் வழிநடக்கும்.

(மலைகள் நகரும்)

2 Responses

 1. M.J. SYED ABDULRAHMAN

  Best Sir,
  நம்மில் பலரும் நாமறியாமலே இப்படி உள்நிலைத் தடைகளை உருவாக்கி வைத்திருப்போம். எந்த ஒன்றாய் இருந்தாலும் அதை எட்ட முடியாது என்ற எண்ணத்தாலேயே கைவிடுபவர்கள் தங்களைத் தாங்களே கை விட்டவர்கள் ஆவார்கள்.
  Thank you
  Good Wishes,

 2. ARUNACHALAM.L

  Nice Sir,
  Instead of complaining we can search for a solution in every problem.

  Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *