மாணவர் பகுதி
– ஸ்வாமி தேவ ஜோதிர்மய
வேலைக்கு அனுப்புங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்த சுலபமான வழி, அவர்களை வேலைக்கு அனுப்புங்கள். பகுதி நேரமாகவோ அல்லது விடுமுறை நாட்களிலிலோ அவர்களை அவசியம் வேலைக்கு அனுப்புங்கள்.
ஏனெனில், வார்த்தைகளால் உணர்த்த முடியாத விஷயங்களை வாழ்க்கை உணர்த்தி விடும்.
அவமானம் அல்ல ; இது வெகுமானம்.
பலரும் படிக்கிற வயதில் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதா ? என்று அதிர்ச்சியோடு கேட்பார்கள். பத்தாம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று மாணவர்களை கவுன்சிலிங் அழைத்து வந்தால், நான் தரும் தீர்வு டென்த் லீவில் வேலைக்கு அனுப்புங்கள்.
என் வழிகாட்டுதலால் தங்கள் குழந்தைகளை கவலையோடு வேலைக்கு அனுப்பிய பெற்றோர்கள், தன் மகனிடம் வியக்கத் தக்க மாறுதல் இருப்பதாக பிறகு வியந்து பேசியிருக்கிறார்கள்.
வேலை தேடி அலையும் போதுதான் அவர்களுக்கு அவர்களின் உண்மை நிலை புரியும். தன்னுடைய தகுதி என்ன ? தன்னுடைய திறமை என்ன? தன்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் இந்த உலகத்தில் என்ன மதிப்பு என்று புரியும்.
என்ன படிச்சிருக்க? என்று எல்லோரும் கேட்கக் கேட்க, படிப்பின் முக்கியத்துவம் புரியும். தானாக படிப்பில் ஆர்வம் வரும்.
எனவே, குழந்தைகள் வாழ்க்கையை கற்றுக் கொள்ள நாம் ஏற்படுத்தி தரும் வாய்ப்பு ஒன்றும் அவமானம் அல்ல; குழந்தைகளுக்கு நாம் தரும் வெகுமானம்.
வீண் செலவு செய்வது குறையும்.
வாழ்க்கையை உணர வேண்டும் என்பதற்காக சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் நாங்கள் தரும் பல்வேறு பயிற்சிகளில் ஒன்று சம்மர் கேம்பின் நிறைவு நாளன்று ஒவ்வொரு மாணவருக்கும் சில புத்தகங்களை கொடுத்து விற்கச் சொல்வோம்.
சிலர் சுலபமாக எல்லாப் புத்தகங்களையும் விற்று விடுவார்கள். சிலர் அலைந்து திரிந்து ஒன்றோ இரண்டோ மட்டும் விற்றுவிட்டு வருவார்கள். அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்து அவர்களைப் பாராட்டி அவர்கள் விற்றதேற்கேற்ப ஊக்கத்தொகை கொடுப்போம். அதைப் பலர் பார்த்துப் பார்த்து செலவு செய்வார்கள். சிலர் செலவே செய்யாமல் சேமித்து வைப்பார்கள்.
உழைத்துச் சம்பாதித்த பணம் என்பதால் அநாவசிய செலவுகள் செய்ய அதன் பின் மனம் வராது. ஒவ்வொரு பொருளின் விலையையும் அவர்கள் வருமானத்தோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதனால் கண்ணில் படுவதை எல்லாம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மாறி பொறுப்புணர்ச்சி கூடும்.
கண்ணில் படுவதை எல்லாம் வாங்கிக் கொண்டிருந்த, ஈரோட்டிலிருந்து வந்திருந்த ஒரு டாக்டர் பையன் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முற்றிலும் மாறினான். என்ன விலை என்று கூட கேட்காமல் பொருளை எடுத்துக்கொண்டு ரூபாய் நோட்டை நீட்டும் அவன், தான் புத்தகம் விற்று சம்பாதித்த இருபது ரூபாயில் பலூன் வாங்கப் போனான்.
விற்பவர், ‘பலூன் ஒன்று பதினைந்து ரூபாய்’ என்றதும் அதிர்ச்சியோடு பின்வாங்கினான். ‘ஒரு பலூன் இவ்வளவு விலையா? சரி. ஊதாமல் கொடுங்கள்’ என்றான். அவர், ‘ஊதாமல் பலூன் பத்து ரூபாய்’ என்றார்.
‘பலூன் பத்து ரூபாயா? ஏன் இவ்வளவு விலை ?’ என்றான். கடைக்காரர், ‘கொடைக்கானல் மலையில் எதுவும் கிடைக்காது எல்லாமே கீழேயிருந்துதான் வர வேண்டும். பஸ் டிக்கெட் செலவெல்லாம் இருக்குல்ல’ என்றார். உடனே கேட்டான், ‘ஒவ்வொரு பலூனுக்கும் டிக்கெட் எடுக்கிறீர்களா. என்ன?’ கடைக்காரர் சிரித்தே விட்டார்.
அவன் கேட்ட விலைக்கு பலூனை கொடுத்து விட்டு கெட்டிக்காரப் பையன் என்று சர்டிபிகேட் வேறு கொடுத்தார்.
சிந்திக்க கற்றுக்கொடுங்கள்.
உங்கள் குழந்தைகள் முதன் முதலில் சம்பாதித்து பணம் கொண்டு வந்து கொடுக்கும் போது, இது உன் பணம் எப்படி வேண்டுமானாலும் செலவு செய் என்று சொல்லக் கூடாது. இது நீ உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம். அதனால் சேமித்து வை. திட்டமிட்டு சிறப்பாக செலவு செய். உன் உழைப்பின் நினைவாக எதையாவது வாங்கிக் கொள் என்று சொல்லுங்கள்.
என் சகோதரன் பார்ட் டைம் வேலை பார்த்து வாங்கிய முதல் மாத சம்பளத்தில் உழைப்பின் நினைவாக இருக்கட்டும் என்று வாட்ச் வாங்கிக் கட்டிக் கொண்டான். அது காலா காலத்திற்கும் உழைப்பின் பெருமை யையும் பணத்தின் அருமைûயும் உணர்த்திக் கொண்டே இருக்கும்.
பணத்தை சீக்கிரமே படிக்கும் வயதிலேயே கையாள கற்றுக்கொள்வதால் மற்றவர்கள் பணத்தை கையாளத்தொடங்கும் வயதில் இவர்கள் அதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
Leave a Reply