(23 மே 2010 அன்று, தூத்துக்குடி சிகரம் அமைப்பு தொடக்கவிழாவில் சோம. வள்ளியப்பன் ஆற்றிய சிறப்புரையில் இருந்து…)
சிகரம் மனிதவள மேம்பாட்டு அமைப்பு தூத்துக்குடி நகரிலும் தொடங்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தேசீய நெடுஞ்சாலை போடப்பட்ட பிறகு, சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு துரிதமாக செல்ல முடிவதாக நண்பர்கள் சொன்னார்கள்.
முன்பெல்லாம் சென்னைக்குச் செல்ல பத்து பன்னிரெண்டு மணிநேரங்கள் ஆனதாகவும், இந்த சாலை போடப்பட்ட பிறகு ஏழு மணி நேரத்தில் காரில் போய்விடமுடிகிறது என்றும் சொன்னார்கள். இவையெல்லாம் இந்தப்பகுதியில் வாழும் மக்களுக்கு கண்டிப்பாக நல்ல வளர்ச்சியினைக் கொண்டுவரும்.
இவற்றைப் போலவே அல்லது இவற்றை விடவும் கூடுதலான வளர்ச்சியினைக் கொண்டு வரவல்ல நிகழ்வுதான், இன்றைக்கு இங்கே தொடங்கப்படுகிற சிகரம் என்கிற அமைப்பு. மக்களின் சிந்தனையின் விஸ்தீரணம் அதிகரிப்பதற்கும், தரம் உயர்வதற்கும் இது போன்ற மனிதவள மேம்பாட்டு அமைப்புகள் அவசியம். இந்த அமைப்பினை தூத்துக்குடி மாநகரில் ஏற்படுத்தியுள்ள நமது நம்பிக்கையின் ஆசிரியர் திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்களையும், தூத்துக்குடியினைச் சேர்ந்த திரு. ராஜ்குமார் மற்றும் நம்பிக்கை மணியன் அவர்களையும் பாராட்டுகிறேன்.
கோவை நகரிலே நடத்தப்படுகிற வெற்றி வாசல் போன்ற கூட்டங்களுக்கு கட்டணம் கொடுத்து மக்கள் வருகிறார்கள். வல்லமை தாராயோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெருமளவில் வந்து, நாற்காலிகள் நிறைந்து, பின் நடைபாதையில் தரையில் மேடையின் படிக்கட்டுகளில் எல்லாம் அமர்ந்து கேட்கிறார்கள். இதே போன்ற நிலையினை ஈரோடு, சேலம், திருச்சி போன்ற நகரங்களிலும் பார்த்திருக்கிறேன். தூத்துக்குடி சிகரமும் விரைவிலேயே அந்த நிலையினை எட்டட்டும்.
பலருடைய படிப்பு என்பது அவர்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்துடனும், அந்த காலகட்டத்துடனும் முடிந்துவிடுகிறது. ஆனால், அவர்கள் கற்க வேண்டியதோ தினசரியே கூடிக்கொண்டு போகிறது. காலத்துடன் இணைந்துபோக, தொடர்ந்து தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதில் பெரியவர், சிறியவர், படித்தவர்-படிக்காதவர், மேலதிகாரி- பணியாளர் என்கிற வேறுபாடுகள் இல்லை. சிகரம் அமைப்புகள் அந்த பணியினைச் செய்யும். பல விபரம் தெரிந்தவர்கள் சிகரம் அமைப்பின் கூட்டங்களில் பேசுவார்கள்.
அதிகம் படிக்காதவர்கள், பயிற்சி பெறாதவர்கள் எல்லாம் கமாடிட்டி போல. கமாடிட்டிக்கு உதாரணம் சொல்லுவதென்றால், சமையலில் பயன்படுத்தப்படும் கல் உப்பினைச் சொல்லலாம். மளிகைக் கடைகளில், கடைக்கு வெளியில் சாக்கு மூட்டையில் வைத்திருப்பார்கள். கேட்பவர்களுக்கு பழைய செய்தித்தாளில் பொட்டலம் கட்டிக்கொடுப்பார்கள். அதற்கு ஒரு விலை. அந்த விலை கடைக்கு கடை வேறுபட முடியாது.
மற்றொரு வகை உப்பும் உண்டு. சுத்தம் செய்யப்பட்ட, நைசாக ஒரே அளவில் அரைக்கப் பட்ட உப்பு. சரியான அளவு அயோடின் தாது கலக்கப்பட்ட உப்பு. குறிப்பிட்ட அளவு எடையில் வலுவான கண்ணாடிப்பையில் அடைக்கப்பட்ட உப்பு. அதன் விலை வெளியில் மூட்டையில் இருக்கும் உப்பினை விட அதிகம். தவிர உள்ளே கண்ணாடி அலமாரியில் அதன் இருப்பிடம்.
உப்பின் குணமும் பயன்பாடும் இந்த இரண்டு உப்புகளிலும் வேறுபடுவதில்லை. ஆனால் ஒன்றின் விலை அதிகம். கேள்வி கோட்பாடு இல்லாமல் சொன்ன விலைக்கு வாங்க மக்கள் தயார். என்ன காரணம்? உப்பு என்கிற கமாடிட்டி, சிலரால் பிராடெக்ட் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் அதற்கு மதிப்பு கூடுதல்.
கமாடிட்டி ஆக இருக்கும் மனிதர்களை, பிராடெக்ட் ஆக்குவதுதான் கல்வியும் பயிற்சியும். மனிதர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும். உயரம், எடை, நிறம் உடுப்புகள் மட்டுமல்ல ஒருவருடைய தரம் என்பது அவரது சிந்தனைகள், அணுகுமுறைகள், நடத்தைகள், இவற்றை எல்லாம் உயர்த்த முடியும்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் பந்தயங்களில் அடித்திருக்கும் சதங்கள் 47. ஒருநாள் பந்தயங்களில் 46. டான் பிராட்மென் முதல் விவியன் ரிச்சர்ட்ஸ் வரை இவரைப் பாராட்டாதவர்கள் கிடையாது. சந்தேகத்திற்கு இடமின்றி சச்சின்தான் இன்றைக்கு உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மென்.
ஆனால் அவருக்கும் ஒரு பயிற்சியாளர் உண்டு. கேரி கிறிஸ்டின்தான் பயிற்சியாளர். சச்சின் இன்றைக்கும் பந்தயங்களுக்கு முன்னால் வலைப் பயிற்சிக்கு செல்லுகிறார். ‘நான் ஏன் பயிற்சி செய்ய வேண்டும். நான் டெண்டுல்கர்’ என்று சொல்லுவதில்லை. பயிற்சி தேவைப்படாதவர்களே கிடையாது.
கற்றுக்கொள்ளுவதற்கான அடிப்படைத் தேவை. எனக்கு தெரியாதவையும் உண்டு என்கிற எண்ணம் தான். நிறைந்திருக்கிற கோப்பைகளில், மேலும் ஊற்றமுடியாது. ‘எனக்கு எல்லாம் தெரியும், இவையெல்லாம் மற்றவர்களுக்கு’ என்கிற நினைப்பு கெடுத்துவிடும்.
தானும் தவறுகள் செய்யக்கூடியவரே, தானும் திருத்திக்கொள்ள வேண்டியவை இருக்கலாம் என்கிற எண்ணங்களே மேம் பாட்டிற்கு வழிவகுக்கும். சாதனையாளர் டெண்டுல்கரும் ஓட்டம் எடுக்காமலே (டக் அடித்து) வெளியேறுவது உண்டு. எவருக்கும் தவறுகள் நேரலாம். அதனை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதும், திருத்திக்கொள்ளாமல் இருப்பதுமே பிழை.
மிகச்சிறந்த படங்களுக்கும் கலைஞர் களுக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்படுவது நமக்குத் தெரியும். சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்க ஆஸ்கார் அமைப்பு இருப்பது போல, சுமாரான படங்கள், மோசமான நடிப்பு, இயக்கம் போன்றவற்றுக்கும் (கேலியாக) விருதுகள் கொடுக்கிறார்கள். அதன் பெயர் ராஸ்சி நாமினேஷன்ஸ் (Razzie Nominations). 2009ம் ஆண்டிற்கான ராஸ்சி நாமினேஷன்ஸில், சாண்ட்ரா புல்லக் என்கிற நடிகையின் பெயரும் இருந்தது. அப்ப் about Steve என்கிற ஆங்கிலப் படத்தில் மிகச் சுமாராக நடித்ததற்காக இது என்கிற தகவலும் வெளியிடப்பட்டது. அதே ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆஸ்காரும் வேறு திரைப்படத்திற்காக சாண்டிராவிற்கு கிடைத்தது.
‘ஆஸ்கார் பரிசு வாங்குகிற என்னையா ராஸ்சி நாமினேட் செய்கிறீர்கள்?’ ஏன் செய்கிறீர்கள்? இதன் உள்நோக்கம் என்ன? உங்கள் யோக்கியதை எனக்கு தெரியாதா?’ என்றெல்லாம் சாண்ட்ரா அறைகூவல் விடவில்லை. மாறாக, அந்த மோசமான நடிப்பிற்கு விருது வழங்கும் விழாவிற்கு அவரே நேராக போய், விருதினை வாங்கிக் கொண்டது மட்டுமில்லை. இனி இதுபோல (மோசமாக) நடிக்கமாட்டேன் என்றும் பேசியிருக்கிறார்.
தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்ளுவது, தெரிந்துகொள்ள முயற்சிப்பது மட்டுமல்ல. காலப்போக்கில் மாறுவனவற்றை ஏற்றுக்கொள்ளுவதும் வளர்ச்சியினைக் கொடுக்கும்.
சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அடியில், சிக்னலில் வண்டியில் இருந்தேன். பச்சை விளக்கு ஒளிரத்தொடங்கியதும் எல்லோரிடமும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஹாரனை விடாமல் அடித்து, முன்னேறப் பார்த்தார்கள். எங்கள் வண்டிகளுக்கு முன்னால் ஒருவர் சைக்கிளில் போனார். அவருக்கு பின்னால் போன கார் மோட்டார் சைக்கிள்காரர்கள் அனைவரும் அவரை விரட்டாத குறைதான். பாவம் அந்த சைக்கிள் மனிதர் மிகவும் தடுமாறிப்போனார்.
கவனித்துப் பார்த்தால் தெரிந்தது, அந்த இடத்தில், அவரைத்தவிர வேறு எவருமே சைக்கிளில் போகவில்லை. திராட்டில் மற்றும் ஆக்சிலேட்டரை அழுத்தம் மோட்டார் வாகனங்களால் அந்த இடம் நிரம்பி இருந்தது. சைக்கிள் ஓட்டுவது ஒன்றும் குற்றம் அல்ல. அனுமதிக்கப்பட்டதுதான். ஆனால் அவரால் அங்கே சமாளிக்க முடியவில்லை. அவரால் மட்டுமில்லை. அந்த காலை நேர பரபரப்பில் அந்த இடத்தில் எவராலும் முடியாது. மோட்டார் வாகனங்கள் நிறைந்த அந்த சாலையில் அவர் Odd Man ஆகிப்போனார்.
நேற்றைக்கு கோவில்பட்டி ஜேசி அமைப்பில் பேசப்போயிருந்தேன். ஜேசி-க்கள் திரு. டென்சிங்கும், சுந்தர்ராஜனும் என்னை சில தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.
முதல் ஆலையில், சில பெண்கள், மருந்து பொருத்திய தீக்குச்சிகளை அள்ளி, அடுக்கி, தீப் பெட்டிகளுக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் மிக நேர்த்தியாக வைத்து மூடுவதைப் பார்த்தேன். அது ஒரு திறன். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக செய்து பழகிய ஒன்று. அடுத்து வேறு ஒரு தொழிற்சாலைக்கும் அழைத்துச் சென்றார்கள். அது இயந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலை. அங்கே எல்லாவற்றையும் இயந்திரங்கள் படுவேகமாக செய்து கொண்டிருந்தன. வேகமாக தீப்பெட்டிகளுக்குள் அடுக்கத் தெரிந்தவர்களுக்கு அங்கே வேலை இல்லை. காரணம், அந்த தொழிற்சாலைக்கு அந்தத் திறன் தேவையில்லை. இயந்திரங்களை இயக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் அங்கே வேலை. கூடுதல் ஊதியமும் கூட. அதே ஊர்தான். அதே தொழில்தான். ஆனால் அதே நபருக்கு மதிப்பில்லை. வேலையில்லை. காரணம், தேவைப்படும் வேறுபாடான திறன்.
செல்போனா? அது வீண். அதெல்லாம் நான் வைத்துக்கொள்ளமாட்டேன் என்று ஐந்து பத்து ஆண்டுகளுக்கு முன் சொன்னவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்? காஸ் அடுப்பில் சமைப்பது உடம்பிற்கு கெடுதல் என்றவர்கள், இப்போது எதில் சமைக்கிறார்கள்?
எவருக்காகவும் மாற்றங்கள் நில்லாது. மாற்றங்களை முதலில் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் முன்னெடுத்து செல்லுபவர்கள் ஜெயிக்கிறார்கள். மறுப்பவர்கள், தயங்குபவர்களை தள்ளிவிட்டு விட்டு உலகம் போய்க்கொண்டே இருக்கும்.
புதியனவற்றை ஏற்றுக்கொள்ளுவது, கற்றுக் கொள்ளுவது எல்லாம் முக்கியம். புதியவர்களை இளைஞர்களை ஏற்றுக்கொள்ளுவதும் அப்படியே. இளம் தலைமுறையினரிடம் எவ்வளவோ திறன்கள் இருக்கின்றன. வீடுகளிலும் வெளியிடங்களிலும் இளையவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், நம்மிடம் இல்லாத சில திறன்கள் அவர்களிடம் இருப்பதை கவனிக்கும். அங்கீகரிக்கும் பழக்கம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவற்றுக்கெல்லாம் சிகரம் அமைப்பு உதவியாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.
Leave a Reply