சுவிட்சர்லாந்தில் வெற்றித் தமிழர்

மூளைதான் மூலதனம்

அருள்ராசா நாகேஸ்வரன்

நேர்காணல்: கனகலஷ்மி


உங்கள் ஆரம்ப காலம் பற்றி?

என் தந்தையின் பெயர் அருள்ராசா. என் பெயர் நாகேஸ்வரன். பிறந்த இடம் கல்லாறு, இலங்கை. அங்கே சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போதுதான் போராட்டங்கள் துவங்கின. ஏராளமான பிரச்சனைகள் சூழ்ந்து கிடந்தன. அப்பொழுது சாதாரண அரசு வேலை வாய்ப்பில் இருந்தேன். அத்தோடு படித்துக் கொண்டு இருந்தபோது என் வயது 25. அப்பொழுதுதான் இலங்கை பத்திரிகைகளில் எழுதத் துவங்கி இருந்தேன். என் முதல் சிறுகதை, மித்ரன் பத்திரிகையில் வெளியானது. அப்போதுதான் யுத்தம் ஆரம்பமானது. என் கிராமத்தை விட்டு வெளியேறினேன். அந்நேரம் வெளியேறாமல் இருந்திருந்தால் எங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது.

நீங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய போது உங்களோடு இருந்த மற்ற மக்களின் மனநிலை என்ன?
நான் இலங்கையை விட்டு வெளியேறிய அடுத்த நாள் யுத்தம் ஆரம்பமானது. அந்த நேரம் பெரும்பாலான மக்கள் வெளிநாட்டிற்கும் அல்லது மேற்கு நோக்கியும் வெளியே செல்ல வேண்டும் என்று சிந்திக்க தொடங்கிய நேரம். இந்தக் காலகட்டத்தில் முதன் முதலில் என் கிராமத்தை விட்டு போனவன் நான்தான் என்று சொல்லலாம். நான் அன்று வெளியேறியது மற்ற இளைஞர்களுக்கெல்லாம் உந்து சக்தியாக இருந்தது என்று பிற்காலத்தில் என்னை சந்தித்தவர்கள் தெரிவித்தார்கள். யுத்தம் தொடங்கிய நேரம் கோவில் களுக்குள்ளும் மரங்களுக்குள்ளும் ஒளிந்து கொண்டு இருந்தபோது ஐய்யோ நாம் தப்பாமல் விட்டு விட்டோமே என்று வருந்தியதாகவும் பின்பு அவர்களும் வெளியேறிவிட்டதாகவும் கூறினார்கள்.

உங்கள் பலம் எதுவென்று கருதுகிறீர்கள்?

சில செயல்களை மற்றவர்கள் காட்டாத வழியில் சென்று செயல்படுத்த நான் முயற்சி செய்திருக்கிறேன். பிறர் எடுக்கிற முடிவுகளை பின்பற்றாமல் புதிய பாதைகள் அமைத்து ஒரு முன்னுதாரணமாக இருக்க முனைந்திருக்கிறேன். நான் மரபுகளைத் தாண்டி சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதை இப்படித்தான் செய்வது என்று இல்லாமல் வேறு வழிகளில் எப்படி செய்வது என்று சிந்திப்பேன். இதுபோன்ற முயற்சிகள் எனக்கு பல நேரங்களில் வெற்றியைத் தந்திருக்கின்றன.

உங்கள் நாட்டை விட்டு வெளியேறி எங்கு சென்றீர்கள். அங்கு உங்கள் அனுபவம் எப்படியிருந்தது?


நாட்டை விட்டு வெளியேறி பாங்காங் சென்றேன். பின்பு அங்கிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்தேன். சுவிஸ்ற்கு செல்ல வேண்டும் என்ற உள்ளுணர்வு முன்பிருந்தே இருந்தது. இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டும். ஆனால் வாய்ப்புள்ள இடத்திற்கும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு சென்றேன். அங்கு போன பின்புதான் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன என்று தெரிந்தது. சுவிட்சர்லாந்தில் எனக்கு விழுந்த அடிகள் அதிகம். அடிகள் என்றால் அவை இயற்கைக்கு எதிரான போராட்டம். சுவிஸ்சில் ஐந்து வகையான போராட்டங்களை சந்தித்தேன். மொழி தேடிய போராட்டம், உணவு தேடிய போராட்டம், பொருளாதாரம், காலநிலைகளை இசைவாக வைத்துக் கொள்ள, இழந்த உறவுகளை எப்படி மீட்பது என பல போராட்டங்கள்.
ஆங்கில மொழி பேசும் தேசங்களுக்கு சென்றவர்களுக்கு இந்த பிரச்சனை குறைவாகத் தான் இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் உள்ள ABC என்ற இதே வடிவம்தான் ஜெர்மனிக்கும். ஆனால், இன்னும் சில எழுத்துக்கள் கூட இருக்கும். அ என்ற எழுத்தை ‘அ’, ஆ என்ற எழுத்தை ‘பே’, இ என்ற எழுத்தை ‘சே’ என்று அவர்கள் பேசும்போது எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரே எழுத்து வடிவத்தைப் பார்த்து வேறுவிதமாக அழைக்கும் போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அங்கு தான் மொழிக்கான பிரச்சனை ஆரம்பித்தது. பிறகு இதுதான் வாழ்க்கை. இதைக் கற்றே ஆக வேண்டும். தெரிந்தே ஆக வேண்டும் என்ற முனைதலில் ஜெர்மன் மொழியை புரிந்துகொள்ளும் அளவு கற்றுக் கொண்டுள்ளோம். கல்வித் தகுதி அதிகமாக உள்ள தேசம் அது. எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும் அதற்கான கல்வித் தகுதி இருக்க வேண்டும். துப்புரவு செய்பவர்களாக இருந்தாலும் கூட அந்தத் தொழில் சம்பந்தமான படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மொழியும், வழியும் தெரியாமல் சுவிட்சர்லாந்தில் நீங்கள் இறங்கியபோது எப்படி இருந்தீர்கள்? உங்கள் தேடல் எங்கிருந்து ஆரம்பமானது? அதில் ஏற்பட்ட தடைகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?

என் உள்ளுணர்வு துடித்துக் கொண்டிருந்தது. என் உயிரில் மிகப்பெரிய வலி இருந்தது. நான் யார், எதற்கு இந்தப் பயணம் என்று நினைத்த போது பிரிந்த உறவுகளின் நினைவுகள் நிறைய வந்தன. அந்த புதிய சூழ்நிலை பழக சுவிட்சர்லாந்து அரசு நிர்ணயித்திருந்ததை போல் 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ‘இந்த உடம்பு இந்த நாட்டில் வாழ்வதற்காக தயாரிக்கப்பட்டதல்ல. எப்படி ஒரு தென்னை மரமும், மாமரமும் இங்கு நட்டு வைத்தால் வளர முடியாதோ அதுபோல நாங்களும் இங்கே வாழ முடியாது’ என்பது என் புத்தகத்தில் முதலில் எழுதினேன். இது எங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல ஆண்டுகள் கழித்து என் கருத்துக்களுக்கு எதிராய் நானே சிந்திக்க வேண்டி இருந்தது. மாற்ற முடியாதது எதுவுமில்லை என்று தோன்றியது. இனி இந்த தேசத்தை விட்டு வெளியே செல்வதில்லை. இந்த தேசத்தில் வீசுகின்ற காற்றில் என்னுடைய மூச்சு இருக்கிறது. எனக்கு வாழ்வு தர மறந்த தேசத்திற்கு மீண்டும் செல்வதா அல்லது வாழ்வு தந்த இந்த தேசத்தை நேசித்துக் கொண்டே இங்கு தொடர்ந்து இருப்பதா என்ற கேள்விக்கு பதில், நான் சுவிட்சர்லாந்தில் தங்கி விட்டேன். நான் வாழ்கின்ற லுசேன் என்கிற பிரதேசம் அழகிய நீர் ஏரிகள் கொண்டது. அங்கே தனிமையிலும், நண்பர்களுடனும், குடும்பத்துடனும் என் மனம் இதமாக இருக்கிறது. அந்த அழகான அற்புதமான இடத்தில் நான் வாழ்கிறேன் என்பது எனக்கு திருப்தியாக இருக்கிறது.

மொழியை கற்றுக் கொண்டு என்ன தொழில் செய்தீர்கள்?
அதிகமாக காப்புறுதிகளை செய்து கொள்கிற தேசம் சுவிஸ். அதேபோல் வங்கி துறையில் முன்னணி வகிக்கும் தேசம் சுவிஸ். இந்தத் துறைகளில் நான் தொழில் புரிகிறேன். நான் ஐரோப்பாவில் மிக பெரிய நிறுவனமான காப்புறுதி நிறுவனத்தில் உத்தியோக பூர்வ இணைப்பாளனாக (Official Partner) இருக்கிறேன். அது போக தனியாக ஒரு நிறுவனம் இருக்கிறது, அது சுவிஸ்சில் வாழ்கிற தமிழ் மக்களுக்கு சுய முன்னேற்றம் சார்ந்த பணிகளை சிறப்பாக செய்ய இருக்கிறேன். இங்கிருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள் ஒரு நிறுவனத்தில் இருக்கலாம். ஆனால் மூன்று நிறுவனங்கள் ஒருவரிடம் வருவதும் அந்த ஒருவர் நானாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

சுயமுன்னேற்றப் பணிகளை பற்றி?

உலகமெல்லாம் தமிழர்கள் கடல் கடந்தும் இருக்கிறார்கள். சிலர் கடல் கடக்காமலும், கடல் கடக்க கூடாதென்றும் இருக்கிறார்கள். இதில் கடல் கடந்து நான் வாழ்கிற நாட்டில் என்னுடன் வாழ்கின்ற 50,000 சுவிஸ் தமிழர்களை முன்னேற்றுவதுதான் என் நோக்கம். பொதுவாக தமிழர்களைப் பற்றிய அபிப்பிராயம் தமிழர்கள் நல்லவர்கள். இந்த நல்ல குணம் சில இடங்களில் எங்களை தோல்வியடைய வைக்கிறது. சில இடங்களில் வெற்றியடைய வைக்கிறது. நாங்கள் சுவிஸ்சில் சென்று இறங்கியபோது இவர்கள் ஏன் நம் நாட்டிற்கு வருகிறார்கள் என்ற கேள்வியோடு தான் எங்களைப் பார்த்தார்கள். சிலர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பியும் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்று வந்திறங்கிய மக்களுக்கு புதிய கலாச்சாரம், புதிய மொழி, புதிய உணவு என்று எதுவும் புரியாது. படித்திருந்தாலும் என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியாது. ஆக அந்த மக்கள் வேதனையிலும் இன்று வரையும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வாழ்விற்கு பல நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அந்த கற்றலுக்கு மிக அதிகமாக செலவு செய்ய வேண்டும். ஒரு நாள் எட்டு மணி நேரம் ஒரு துறை சார்ந்த கல்வியை நான் கற்றுக் கொள்வதற்கு 650 நஜ்ண்ள்ள் ச்ழ்ஹய்ந் (இந்திய மதிப்பு 27300) கட்டணம் செலுத்தினேன். நான்கு மணி நேர பயிற்சிக்கு 340 நஜ்ண்ள்ள் ச்ழ்ஹய்ந் கட்டணம். இப்படி அதிக தொகை கொடுத்து கற்றுக் கொள்கிற அறிவை என் மக்கள் சாதாரணமாக என்னிடம் வந்து பெற்றுக் கொண்டு போக முடியும். அவர்கள் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டியதில்லை. என்னுடன் ஒரு மணி நேரம் பேசி ஆலோசனை பெறுவதற்கு சராசரி சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு எழுபது ஸ்விஸ் பிராங்குகள். ஆனால் இதுவரைக்கும் நான் அதை ஒரு தமிழரிடம் இருந்தும் பெற்றதில்லை.

எந்த விதமான சுயமுன்னேற்ற ஆலோசனை சுவிஸ் தமிழர்களுக்கு நீங்கள் வழங்குகிறீர்கள்?

சாக்ரடீஸ் சொன்ன ஒரு வாசகம் “உன்னையே நீ அறிவாய்”. வாழ்க்கையில் முன்னேறியவர்கள் அனைவரும் இந்த வார்த்தையை நயமாக உணர்ந்து கொண்டார்கள். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வார்த்தை களைப் படிக்கிறபோது அவர் ஒரு ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி என்றுதான் தோன்றும். காரணம் நமக்குத் தெரிந்த தமிழை ஏற்கெனவே இருக்கின்ற தமிழில் செய்த வார்த்தைகள் போட்டால் சிறப்பாக இருக்குமென்று தேர்வுசெய்து இதயத்தில் ஒட்டும் விதமாக அவர் தருகிறபோது அந்த கருத்துகள் என்னை உந்தித் தள்ளின. அப்படியான கருத்துக்களின் ஊடாக வளர்ந்தவன் நான். ஆசிரியன் என்றால் சுய கருத்தும் இருக்க வேண்டும். நல்லோர் வழிகாட்டுதலும் இருக்க வேண்டும்.
அதுபோல் கவிப்பேரரசு காட்டிய வழியிலே நான் என் சுவிஸ் தமிழ் மக்களுக்கு சொல்கின்ற சுயமுன்னேற்றக் கருத்து, “நீங்கள் இந்த நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு இன குழு அல்ல. நாம் 50,000 தமிழர்கள்தான் இருக்கிறோம். ஆனால் சுவிஸ்சில் 7 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் எல்லோருமே வியாபாரிகளாக மாறுங்கள். வியாபாரம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்”. நபிகள் நாயகம் குரானில் ஒரு இடத்தில் இதே வசனத்தைச் சொல்லுவார். முஸ்லீம்கள் எங்கிருந்தாலும் பொருளாதார ரீதியாக நன்றாக இருப்பார்கள். காரணம் அந்த மார்க்கம் அவர்களுக்கு வணிகத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் என் மக்களுக்கு கூறுவது வணிகம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். நம் மொழி மக்களுடன் மட்டுமில்லாமல் பிறமொழி மக்களுடனும் வியாபாரம் செய்ய வேண்டும்.

வியாபாரத்திலும் இன்னும் பிறவற்றிலும் தோல்வியடைந்து மன அழுத்தத்தில் இருப்பவர் களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

நான் தற்கொலை செய்து கொள்கிறேன். தீக்குளித்துக் கொள்கிறேன், எனக்கு உண்பதற்கு உணவில்லை என்று சொல்பவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்ல வேண்டிய கடமையுள்ளது. ஏதேனும் ஒரு பொருளை வாங்கிச் செல்லுங்கள். அல்லது வாங்க நினைப்பவருக்கு வழிகாட்டுங்கள். வாழ எண்ணற்ற வழிகள் உண்டு. எங்கள் சுவிஸ் நாட்டில் மக்கள் தொகை மிகக் குறைவு. அங்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நிறைய உழைக்கலாம். வெறும் மாதச் சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை முழுமையாக வாழ முடியாது.

இரண்டாவது அங்கு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்திருப்பார்கள். 5 அல்லது 10 பேர் வரை இணைந்து குழுக்களாக வியாபாரம் செய்யலாம்.

உலகமெல்லாம் இளம் பெற்றோர்கள் அதிகமாகி வருகிறார்கள். உங்கள் பார்வையில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
தமிழ் மக்கள் பண்பாட்டில் சிறந்தவர்கள். இந்த மக்கள் உழைப்பதிலும் சிறந்தவர்களாக உயர்ந்து தன் குழந்தைகளுக்கு சிறந்த இருப்பிடம், கல்வி, உணவு ஆகியவற்றை தருவது முக்கியமான கடமை. “குழந்தைகள் தன் விருப்பத்திற்காக பிறக்கவில்லை. நம் விருப்பத்திற்காக பிறந்தவர்கள்” என்பதை உணர்ந்து கவலையில்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும். முதுமை வரப்போவது நிச்சயம். முதுமை வரும்போது நம் குழந்தைகள் காப்பார்கள் என்ற எண்ணம் வேண்டாம். உங்களுக்கான சேமிப்பை இப்போதே துவங்குங்கள். நான் இந்தியாவில் சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன். அதில் தந்தையை கவனிக்காத மகன் சிறையில் அடைக்கப் பட்டதாக செய்தி வந்திருந்தது. பெற்றோரை பார்த்துக் கொள்ள முடிந்தால் பார்க்கட்டும்.

மகன் தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. தந்தை மகனைப் பார்க்க வேண்டும் என்பதுதான் கட்டாயம். தந்தையை பார்க்கவில்லை. பணம் கொடுக்கவில்லை என்பதை குற்றம் என்று சொல்வதை ஒப்புக் கொள்ள முடியாது. காரணம், அவனுக்கு மனைவி, மக்கள் இருப்பார்கள். அவர்களை பார்ப்பதுதான் முதல் கடமை.

இன்றைய இளைஞர்கள் முதலில் தன்னை, தன் குடும்பத்தை பின் பெற்றோரை என்று மூன்று நிலைகளிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

பெரும் வெற்றிகளை குவித்த உங்களை சாதிக்கத் தூண்டியது எது?
உண்ண உணவு, நடக்க கால், இருக்க வீடு என்றில்லாமல் இது போதாது என்னும் தேவை என்ற சிந்தனை வளர வேண்டும்.
உதாரணமாக சுவிஸ்சில் இருக்கிறபோது நல்ல சம்பளம் கொடுத்தார்கள். அந்த வேலையில் இருந்தவாறே எழுதலாம். பாட்டு கேட்கலாம். சுகமான வேலை, பெரிய சம்பளம், நல்ல குடும்பம் என்று நிறைவாக இருந்தேன்.

அப்பொழுது நாங்கள் ஏற்பாடு செய்த விழா ஒன்றிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வந்தார். அவரும் நானும் ஆழமாக உரையாடிக் கொண்டு பயணிக்கையில் அவர், ‘என்னிடம் உங்களின் சம்பளம் என்ன நாகேஸ்?’ என்று கேட்டார். நான் மிக மகிழ்ச்சியாக மிக அதிக சம்பளம் என்ற மிதப்பில் ‘மாதம் இரண்டு லட்சம்’ என்றேன். அவர் கேட்டார் “இவ்வளவுதானா. நீங்கள் சுவிஸ்சில் இருக்கிறீர்கள். இவ்வளவுதான் உழைக்கிறீர்களா. உங்களிடம் உழைக்கக் கூடிய திறன் இருக்கிறது. பணம் பண்ணக் கூடிய ஆற்றல் இருக்கிறது. அந்த சக்தியை ஒருங்கிணையுங்கள். அந்த ஆற்றலை வேறு வழியில் செயல்படுத்துங்கள். இப்பொழுது நீங்கள் நிறைவாக இருக்கிறீர்கள். திருப்தியாக இருக்கிறீர்கள். அந்த திருப்தியை மாற்றுங்கள். இன்னும் அதிக தூரம் போவீர்கள்”. அவர் அன்று சொன்னதை செயல்படுத்தத் துவங்கினேன். இன்று வெற்றிகள் கனிந்து கனிந்து விழுந்தன. இதற்கு நான் அதிகம் உடல் அளவில் உழைக்கவில்லை. மூளைதான் மூலதனம்.

உங்களிடம் உழைக்கக் கூடிய திறன்
இருக்கிறது. பணம் பண்ணக் கூடிய
ஆற்றல் இருக்கிறது. அந்த சக்தியை
ஒருங்கிணையுங்கள். அந்த ஆற்றலை வேறு
வழியில் செயல்படுத்துங்கள். இப்பொழுது
நீங்கள் நிறைவாக இருக்கிறீர்கள்.
திருப்தியாக இருக்கிறீர்கள். அந்த
திருப்தியை மாற்றுங்கள். இன்னும்
அதிக தூரம் போவீர்கள்.

 1. M.Kugan

  Mr .Arulrasa ? He is a Dr ??? Dr mean -PH.D Or
  Mervin Selva also Dr..? i think , He is Extra…..Tallking.
  His education Only Student For Kadupatthai NCT . He is not Enngeneer. Dr- Indeiya _How mach pay this Dr??
  thanks.
  your,
  Kugan B.A (Hons) M.A , M.Phil. PH.D (University of Colomboo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *