மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

மரபின்மைந்தன் ம.முத்தையா

உள்ளே இருக்கும் கனல்தான்
வெளியே இருக்கும்
தடைகளை நகர்த்தும் தார்மீக பலத்தைத் தருகிறது.

மனிதனின் வெற்றி தோல்விக்கான அளவுகோல்கள், அவனுடைய செயல்கள் மட்டும் தான். சமூகத்தால் கவனிக்கப்படுகிற சாதனைகள், பெரும்பாலும் சமூக நலனுக்காக செய்யப்படுபவைதான். தன்னலம்

சார்ந்தே இயங்குபவர் களின் சாதனைகள் எத்தனை பெரிதாய் இருந்தாலும் யாரும் கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. “எருக்கு முளைத்தால் என்ன? ஈயாதவன் வாழ்ந்தால் என்ன?” என்று.

ஆனால் சமூக அக்கறையுள்ள சராசரி மனிதனின் செயல்களை சமுதாயம் ஆர்வத்துடன் கவனிக் கிறது. சமூகத்தின் ஏதோவொரு மூலையில் இருந்து ஆதரவோ உற்சாகமோ கிடைக்கிறது. உற்சாகம் குன்றுகிற வேளையில் உந்தித் தள்ளுவதற்கென்று மாயக் கரங்கள் முளைக்கின்றன.

சுயநலம் சார்ந்தவர்கள் பற்றிப் பேச்சு வந்தால், “அவன் எக்கேடு கெட்டால் என்ன” என்று எடுத்தெறிந்து பேசுவார்கள். ஆனால், சமூகப் பார்வையும் இலட்சியமும் கொண்டால், எக்கோடு தொடுவான் என்று ஆர்வமுடன் பார்ப்பார்கள். கோடு என்றால் மலை. மனதில் உறுதி இருந்தால் மலைகளை நகர்த்தி நினைத்ததைத் தொடலாம்.

உள்ளே இருக்கும் கனல்தான் வெளியே இருக்கும் தடைகளை நகர்த்தும் தார்மீக பலத்தைத் தருகிறது. களை மண்டிய நிலத்தை விளை பொருட்களின் களஞ்சிய மாய் மாற்றுவதும், சின்னஞ்சிறிய முதலீட்டைக் கொண்டு மிகச்சிறந்த ஆதாயத்தை எட்டுவதும் உள்ளே இருக்கும் நெருப்புதான்.

வெளியே இருக்கும் வாய்ப்புகள் எல்லோருக்கும் பொதுவாய் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டுமென்றால் உள்ளே வெளிச்சம் வேண்டியிருக்கிறது.

உங்களுக்குள் ஒளிர்கிற நெருப்பை ஊதிப் பெரிதாக்கும் போது அது ஊருக்கே வெளிச்சம் கொடுக்கிறது. பெரிய மனிதராக பெரிய வழியே பெரிய இலட்சியங்களை வகுத்துக் கொள்வதும் அவற்றை நோக்கி உழைப்பதும்தான்.

சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரது மொத்த வருமானமே மாதம் 240 டாலர்கள் மட்டும்தான். அவருக்கு, பெரிய எழுத்தாளராக வளர்ந்து புகழ்பெற வேண்டுமென்பது நீண்ட காலமாய் நிலைபெற்றிருந்த கனவு.

பகல் முழுவதும் சலவைத் தொழிலில் ஈடுபடுவார். மாலை நேரங்களால் சிறிது ஓய்வெடுத்துவிட்டு, பின்னிரவு வரையில் எழுத்துப்பணியில் ஈடுபடுவார். அவரது மனைவியும், கணவனின் ஆர்வத்தையும் புரிந்து கொண்டு இரவில் சலவைத் தொழிலில் ஈடுபட்டிருப்பார். இரவு பகலாக கதைகளை, நாவல்களை தட்டச்சு செய்து பதிப்பாளர்களுக்கு அனுப்புவார் அந்த சலவைத் தொழிலாளி.

அவர் எழுத்துக்களை ஏன் வெளியிட முடியாது என்ற காரணங்களைக் காட்டி, நீண்ட கடிதங்கள் வந்து சேரும். அப்படி வந்த கடிதங்களில் ஒன்று, அந்த நாவல் பிரசுரிக்கத் தகுந்ததாய் இல்லையே தவிர, ஒரு நல்ல எழுத்தாளருக்கான அறிகுறிகள் இவரது படைப்புகளில் தென்படுகின்றன என்று உற்சாகமூட்டியிருந்தது.

அந்தப் பதிப்பாளருக்கே தொடர்ந்து நாவல்களை அனுப்பத் தொடங்கினார் அந்த சலவைத் தொழிலாளி. தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. ஒன்றல்ல… இரண்டல்ல.. பதினெட்டு மாதங்கள். குழந்தைக்கு மருந்து வாங்கக்கூட காசில்லாத நிலையில் விரக்தி அடைந்து தான் எழுதி முடித்த நாவலை குப்பைத் தொட்டியில் வீசினார் அந்த சலவைத் தொழிலாளி.

அவருடைய மனைவி, அவருக்கும் தெரியாமல் அந்த நாவலை எடுத்து பதிப்பாளருக்கு அனுப்பினார். அந்த நாவல் வெளியானது. வெளியான வேகத்திலேயே பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. கேர்ரி என்ற பெயர் கொண்ட அந்த நாவல் 1976ல் திரைப்படமாகவும் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த சலவைத் தொழிலாளிதான் புகழ்பெற்ற எழுத்தாளராகிய ஸ்டீஃபன் கிங்.

தான் ஓர் எழுத்தாளர் என்கிற பிம்பம் அவருடைய அடிமனதில் இருந்தது. எழுத்து மூலம் சமூக நன்மைக்கு ஏதேனும் செய்ய முடியும் என்கிற வேகமும் இருந்தது. அதன் விளைவாக அவரால் பல மாதங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற் கொள்ள முடிந்தது.

நம்மில் எல்லோருமே நம்மைப் பற்றிய ஒரு மனச்சித்திரத்தை வரைந்து கொண்டு வந்தவர்கள் தான். மனதுக்குள் எத்தனையோ குப்பைகளை அள்ளி அடைத்ததில் அந்தச் சித்திரம் எங்கேயோ போய் சிலருக்கு மறைந்துவிட்டது. என்னதான் நினைத்து நினைத்துப் பார்த்தாலும் மனதிலுள்ள குப்பைகள்தான் மீண்டும் மீண்டும் மேலெழும்புகின்றன. அந்தக் குப்பைகள்தான் தடைகளாகத் தெரிகின்றன.

ஒரு குழந்தைக்கு கனவுகள் மிகவும் துல்லியமாக வரும். கனவில் வாங்கிய கரடி பொம்மையைக் காலையில் கண்விழித்ததும் தேடும் அளவுக்கு அவற்றில் துல்லியம் இருக்கும்.

ஆனால் வளர வளர கனவுகளின் வலிமை குறைந்து கொண்டே வரும். இதனாலேயே சிறகுகள் தொலைத்த பறவைகளாய் பலர் மாறி விடுகிறார்கள்.

உண்மையில் மனிதனின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகள் எதுவும் வெளியே இல்லை. மனதில் உள்ள குப்பைகளும், வீண் பயங்களுமே மலை போல் மறைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தக் குப்பைகளை அகற்றினாலே மலைகளை நகர்த்திய தெளிவு மனதுக்குள் மலரும்.

கற்பனையான தடைகளை வளர்த்துக் கொண்டு காரியங்களைத் தள்ளிப் போட்டுத் தயங்கி நிற்கத் தேவையில்லை. மனதில் தெளிவு பிறந்தால் போதும். மலைகள் நகர்ந்து வழிவிடும்.

– மலைகள் நகரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *