பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம்

‘பொருளல்லவரைப் பொருளாகச் கெய்யும்
பொருளல்லது இல்லை பொருள்’

என்ற குறளை அறிந்திருப்பீர்கள். பொருள் என்னும் ஒற்றைச் சொல்லுக்கு இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும், விளக்கங்களையும் இந்த ஒரு குறள் பேசிவிடுகிறது!

எந்த விதத்திலும் ஒரு பொருட்டாக மதிக்கத் தகுதியில்லாதவனிடமும் பணம் இருந்து விட்டால், அவனுக்கு மதிப்பும் முக்கியத்துவமும் கூடி விடுகிறது.

பணத்தின் முக்கியத்துவம் இன்று கூடி விட்டதாகவும், பணம் இருப்பவனுக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாகவும் நாம் சலித்துக் கொள்கிறோம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் அதுதான் நிலைமை என்கிறான் வள்ளுவன். அதனால்தான், ‘செய்க பொருளை…’ என்று வேறோர் இடத்தில் நமக்கு ஆணையே இடுகிறான்.

‘பொருளிலார்க்கு இனமில்லை; துணையிலை;

பொழுதெல்லாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால்.

பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்…’

என்று தனது சுயசரிதையில் எழுதிக் கொண்டு போகிறான் பாரதி.

தனது கால்களில் வலிமை குன்றாமல் தரையில் ஊன்றி நிற்கும் ஒருவனால்தான், பக்கத்தில் வழுக்கி விழுபவரைக் காக்கவும் முடியும். தவறி விழுபவரைத் தூக்கி நிறுத்தவும் முடியும். அடுத்தவருக்கு ஓடியோடி உதவி செய்ய விரும்பும் ஒருவன், தனது கால்கள் உறுதி குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

விமானப் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும். பயணம் தொடங்குவதற்கு முன்னரே, பணியாளர்கள் ஓர் அறிவிப்பு செய்வார்கள். பறந்து கொண்டிருக்கும்போது காற்றழுத்த நிலை மாறுபட்டால், விமானத்திற்குள் இயல்பாக சுவாசிக்க முடியாமல் சிரமமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும். பறந்து கொண்டிருக்கும் விமானம் தரையிலோ அல்லது தண்ணீரிலோ விழுந்துவிட்டால் (அப்போதும் உயிருடன் இருந்தால்!) தப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லியும் செய்தும் காட்டுவார்கள். விமானத்தில் முதல் பயணம் செய்பவர்களுக்கு, ‘இதெல்லாம் தேவைதானா?’ என்று வயிற்றைக் கலக்கத்தான் செய்யும்.

அவர்கள் சொல்லும் விளக்கங்களில் ஒன்று. இங்கு நமது சிந்தனைக்குப் பொருத்தமானது. காற்றின் நிலைகளின் மாறுபாட்டால் விமானத்திற்குள் மூச்சுவிட சிரமமான நிலை ஏற்படும்போது, சுவாசிக்கும் கருவிகள் விமானத்தின் மேற்பகுதியிலிருந்து தாமே உங்கள் முகத்துக்கு நேரே விழுந்து தொங்கும். நீங்கள் அதை உங்கள் முகத்தில் சரியாகப் பொருத்திக் கொண்டு இயல்பாக சுவாசிக்கலாம். உங்களுடன், குழந்தைகளோ அல்லது உங்கள் உதவி தேவைப் படும் ஒருவரோ பயணம் செய்யும் நிலையில், முதலில் உங்கள் முகத்துக்குக் கருவியைச் சரியாகப் பொருத்திக் கொண்டு, பின்னர் உங்களுடன் இருப்பவருக்கு உதவி செய்யுங்கள்.

மேம்போக்காகப் பார்த்தால், இந்த அறிவிப்பு சுயநலமானதாகத் தெரியும்.

ஆனால், உண்மையில் நடைமுறைக்குத் தேவையான சிறந்த அறிவிப்பு அது. எப்படி என்று கேட்கிறீர்களா? ‘என்னைப் பற்றிக் கவலையில்லை; குழந்தைக்கோ அல்லது என்னுடன் வந்திருக்கும் நபருக்கோதான் முதலில் நான் உதவுவேன்; பின்னர் எனக்குத் தேவையானதை நான் செய்து கொள்வேன். அதுதான் மனிதாபிமானம்…’ என்று எண்ணி அவருக்கு உதவப்போய், அதற்குள் நீங்களே மயக்கமாகிவிட்டால்…? எல்லோரும் பாதிக்கப்பட்டதுதான் மிச்சமாகும்!

பிறருக்கு உதவி செய்ய நினைக்கும் எவரும், அதற்குத் தகுதியானவனாகத் தன்னை எப்போதும் வைத்துக் கொள்ளல் அவசியம். பொருளின்றி வாடும் ஒருவனால், எப்படி பிறரின் வறுமையைப் போக்கிவிட, துயரினை நீக்கிவிட முடியும்…? வள்ளுவன் முதல் இன்றுவரை உள்ள சமூக ஆர்வலர் எவருமே, ‘உனக்கு முதலில் பணத்தைத் தேடிக் கொள்…’ என்றே அறிவுறுத்துகிறார்கள்.

சுயமாகப் பொருள் தேடும் வழியை இளமையிலேயே கற்றுக் கொள்வது அவசியம். தாத்தா, தந்தை சம்பாதித்த பொருளன்றி, தனது அயராத உழைப்பினால் பொருள் தேடுபவரையே சாதனையாளராக உலகம் ஏற்றுக் கொள்கிறது.

‘சுயமுயற்சியில் பொருள் தேட வேண்டும்’ என்ற கருத்தில் வெளியே தெரியாத ஒரு கருத்து உண்டு. பொருளை எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாமா? சிலர் அப்படி நினைக்கவே செய்கிறார்கள்.

‘நாய் விற்ற பணம் குரைப்பதில்லை: கருவாடு விற்ற பணம் நாறுவதில்லை’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாணத்தை மறந்து, நெறி பிறழ்ந்து பொருள் சேர்ப்பவர்களுக்கு, இந்த பழமொழி பயன்பட்டு விடுகிறது.

எது பொருளாகக் கருதப்படும் என்பதற்கும், பொருள் எப்படி தேடப்பட வேண்டும் என்பதற்கும், நமது முன்னோர்கள் நெறி வகுத்துத் தந்துள்ளனர். அறம், பொருள், இன்பம், வீடு என்பதற்கான விளக்கத்தை அவ்வை சொல்லும் விதமே அழகு!

“ஈதல் அறம்; தீவினை விட்டு ஈட்டல் பொருள்;

காதல் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு

பட்டதே இன்பம்; பரனைநினைந்திம் மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு”

‘பொருள்’ என்பதற்கு ‘தீவினை விட்டு ஈட்டல் பொருள்…’ என்று பொருள் சொல்கிறாள் அவ்வை!

தன்னிடம் ஒருவன் சேர்த்து வைத்துள்ள பொருள் அனைத்தையுமே மரியாதைக்குரிய செல்வமாக அவள் பார்க்கவில்லை. ‘செல்வம் சேர்க்கப்பட்ட வழிமுறை எப்படி என்று பார்’ என்கிறாள். இந்திய மருத்துவக்கழகத் தலைவர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் கைப்பற்றப்பட்ட 1801.50 கோடி ரூபாய் பணத்தையும் 1500 கிலோ தங்கத்தையும் பொருளாகவே ஒப்புக் கொள்ள அவள் தயாரில்லை. தீயக் கலப்பு ஏதுமின்றி உழைப்பால் மட்டுமே சேர்க்கப்படுவதுதான் பொருள்! வள்ளுவனும் ஒரு படி மேலே போய், தனது கருத்தைச் சொல்கிறான்.

‘அறன் ஈனும்; இன்பமும் ஈனும்; திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்’

முறைதவறி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அடுத்தவரைச் சுரண்டி, அவர்கள் மனம் வருந்த நம்மிடம் சேரும் பணத்தைப் ‘பொருள்’ என்றே நமது முன்னோர்கள் ஒப்பவில்லை. தனது சுய முயற்சியில், சுய உழைப்பில் ஒருவன் சம்பாதிக்கும் பணமே, அவனுக்கும் நன்மைகளைச் செய்யும்: அடுத்தவருக்கும் நன்மைகளைச் செய்யும்.

பெரும் பணக்காரர் ஒருவர் அப்படி இப்படி சேர்த்து பெரும் பணக்காரர் ஆனவர்தான்! அன்னதானம் புண்ணியம் சேர்க்கும் என்று கேள்விப்பட்டார். ஊர் எல்லையில் ஒரு துறவி ஆசிரமம் அமைத்துத் தங்கி இருப்பதாகவும், அவரை அழைத்து உணவளித்தால் பாவங்கள் தொலைந்து புண்ணியம் சேரும் என்றும் பிறர் சொல்லக்கேட்ட அவர், அந்தத் துறவியைத் தேடிச் சென்றார்.

ஊருக்கு வெளியே எளிமையான ஆசிரமம் ஒன்று அமைத்துத் தங்கியிருந்தார் துறவி. அவரைச் சந்தித்து, தனது வீட்டுக்கு வந்து விருந்துண்ண வேண்டும் என்று அழைத்தார். துறவி இவர் அழைப்பை ஏற்க மறுத்தார். மிக வற்புறுத்தி அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் பணக்காரர்.

தடபுடலான விருந்து. தனது வாழ்நாளில் துறவி கேள்விகூடப்பட்டிராத உணவுகள் விருந்தில் இருந்தன. துறவியும், பணக்காரரின் உபசரிப்பு காரணமாக, வயிறார உண்டார். சற்றுநேரம் துறவியை ஓர் அறையில் ஓய்வெடுக்க வைத்தார் பணக்காரர். அந்த அறையிலிருந்த அழகழகான பொருட்கள் துறவியைக் கவர்ந்தன. ஒருவருக்கும் தெரியாமல், அங்கிருந்த வெள்ளி விளக்கு ஒன்றினை எடுத்துத் தன்மடியில் மறைந்து வைத்துக் கொண்டார் துறவி!

ஓய்வெடுக்கும் நேரம் முடிந்ததும் துறவியை மிகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார் பணக்காரர். ‘தனது பாவங்கள் தொலைந்தன; இனி தைரியமாக அடுத்தடுத்த பாவங்களைச் செய்யலாம் என்ற மகிழ்ச்சி அவருக்கு!

ஆசிரமத்திற்குத் திரும்பிய துறவிக்கு, உடல் சற்று சிரமமாக இருந்தது. புதுவகை உணவுகளை அதிகமாக உண்டிருந்ததால், நெஞ்சில் குமட்டலாகவே இருந்தது. கிணற்றடிக்குப் போய் சற்று முயன்றதும், உண்டது அனைத்தும் வாய் வழியே வெளியேறி விட்டன. இப்போது சற்று சிரமம் குறைந்தது போல இருந்தது.

நிமிர்ந்தவரின் மடியிலிருந்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்கு கீழே விழுந்தது. அவரது கபட எண்ணத்திற்கும், திருட்டுச் செயலுக்கும் சாட்சியாகக் கீழே கிடந்தது விளக்கு.

தனது செயலை எண்ணி நாணினார் துறவி. இப்படி ஒரு திருட்டு எண்ணம் தனக்கு எப்படி வந்தது என்று எண்ணியெண்ணி உள்ளத்தில் மருகினார். பணக்கார வீட்டில் உணவுண்ட நிலையில், தனக்கு இப்படியோர் எண்ணம் தோன்றியதையும், அந்த உணவு செரிக்காமல் வாய் வழியே வெளியேறிய கணத்தில், செய்தது தவறு என்ற குற்ற உணர்வு தோன்றியதையும் சிந்தித்தார்.

தவறான வழிகளில் வந்த பணத்தில் கட்டப்பட்ட வீட்டில், அந்தப் பணத்தினால் தரப்பட்ட விருந்தை உண்டதே தனக்கும் கெட்ட எண்ணங்கள் தோன்றியதற்குக் காரணம் என்று உணர்ந்து வருந்தினார். உடனடியாகத் தனது சீடர்கள் வாயிலாக அந்த விளக்கைத் தவறாகக் கொண்டு வந்து விட்டதாகக் கூறிக் கொடுத்தனுப்பி விட்டார் அந்தத் துறவி!

தீவினைகளால் சேர்ந்த செல்வம் என்றுமே நிம்மதி தருவதில்லை. ஆயிரம் ரூபாய் முறையற்ற வழியில் சம்பாதித்துவிட்டு, அதில் நூறு ரூபாயைக் கோயிலுக்கோ அல்லது தர்ம காரியங்களுக்கோ செலவு செய்வதில் எந்தக் கடவுளும் மகிழ்ச்சியடையப் போவதில்லை. அப்படி மகிழ்ச்சி அடைந்தால் அது கடவுளும் இல்லை!

திறனறிந்து, தீதின்றி வந்தபொருள் மட்டுமே அறத்தையும் இன்பத்தையும் தரும் என்ற வள்ளுவனின் கருத்து ஆழமானது. தீதின்றி வரவேண்டியது பணம் மட்டுமல்ல; பதவி, செல்வாக்கு உட்பட எந்தச் செல்வமும்தான்.

வாழ்வில் வெற்றி பெறுவதும், சாதிப்பதும் மிக முக்கியமானவை. அதைவிட முக்கியமானது, அந்த வெற்றிகளும் சாதனைகளும் நிரந்தரமானவையாக இருக்கவேண்டும் என்பது!

நமது வியப்பிற்குரிய வெற்றியாளர் சிலர், சில நேரங்களில் வெற்று மனிதர்களாகி நிற்பதைக் காண்கிறோம். காரணம் ஒன்றுதான். ‘அவரை வெற்றியாளராக்கியது எதுவோ, அது தீது கலந்ததாக இருந்தது’ என்பதுதான் அந்தக் காரணம்!

எந்த வெற்றியும் நிலையானதாக இருக்க ஒரே வழி, அது வரும் வழி நியாயமானதாக இருப்பதுதான். வாழ்க்கைக்குத் தேவையான பொருளையும் உயர்வையும், குறுக்கு வழி ஏதுமின்றி, உழைத்து நேர்மையாகத் தேடுவேன் என்ற உறுதியுடன் செயல்படுபவர் எவரும், எங்கும் சறுக்குவதே இல்லை.

வாழ்க்கைக்குத் தேவையான
பொருளையும் உயர்வையும்,
குறுக்கு வழி ஏதுமின்றி,
உழைத்து நேர்மையாகத்
தேடுவேன் என்ற உறுதியுடன்
செயல்படுபவர் எவரும்,
எங்கும் சறுக்குவதே
இல்லை.

வாழ்வில் வெற்றி பெறுவதும், சாதிப்பதும் மிக முக்கியமானவை. அதைவிட முக்கியமானது, அந்த வெற்றிகளும் சாதனைகளும் நிரந்தரமானவையாக இருக்கவேண்டும் என்பது!

  1. MANIKANNAN

    SIR YOUR CRATION IS VERY NICE IT IS ERY USEFUL TO ALL THE PEOPLE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *