குதிரையேற்றம்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம்

தங்களது சுகமான பயணங்கள் தொடர, அவர்களுக்கு
அடுத்தவரின் முதுகுகள் தேவைப்படும்.
நமது முதுகு, இப்படிப்பட்டவர்களின் கண்களுக்குப் படாமல்
நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

‘குதிரையேற்றம்’ என்கிற தலைப்பைப் பார்த்தவுடன், விளையாட்டு அல்லது உடற்பயிற்சி தொடர்பான ஒரு கட்டுரையாக இருக்கக்கூடும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழரின் பெருமையாக வழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கொஞ்ச நாட்கள் தனிக்கட்சியும் நடத்தினார். ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்பது அவர் நடத்திய கட்சியின் பெயர்.

அரசியலில் ‘குதிரை பேரம்’ ( ) என்ற சொற்கள் பரிமாறிக்கொள்ளப்படும். தேர்தல் முடிந்து, ஆட்சி அமைவதற்குள், இந்தச் சொற்கள் அடிக்கடிப் பயன்படுத்தப்படும். சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்சியிலிருந்து மாறி மற்றோர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதற்காக விலை பேசப்படுவதற்கு இந்த சொற்கள் குறிக்கப்படும்.

அரசியலில் வெள்ளந்தியாக இருந்த சிவாஜி கணேசன் அவர்கள், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது இப்படிக் குறிப்பிட்டார். “இதற்கு அதுவாப்பா அர்த்தம்? நான் ஏதோ குதிரை வாங்கி விக்கிற வியாபாரத்தைப் பற்றித்தான் பேசிக்கிறாங்கன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்!”

குதிரையேற்றம் என்கிற இந்தத் தலைப்பு, அப்படி ஒரு எண்ணத்தை உங்களுக்குத் தந்து விடக்கூடாது என்பதற்காகவே இதனைக் குறிப்பிட்டேன்.

அன்பு காரணமாகவோ அல்லது தந்திரம் காரணமாகவோ எவரும் நம் மீது குதிரை சவாரி செய்ய நாம் அனுமதித்து விடக்கூடாது. நாமும் அடுத்தவர் மீது இந்தச் சவாரியைச் செய்யக் கூடாது.

தந்திரம் செய்து அடுத்தவர்மீது சவாரி செய்வதை, பொதுவாக வயதிலோ, பதவியிலோ, பணத்திலோ பெரியவராக இருப்பவர்கள் செய்கிறார்கள். ஒரு வார்த்தைப் பாராட்டு. தேவைப்பட்ட இடங்களில் ‘நான் உன்னை விடப் பெரியவன்’ என்னும் தொனியில் லேசான மிரட்டல், சின்னச் சின்ன உதவிகள் செய்வது போன்ற பாவனை; அவ்வளவுதான்.

உங்களது நேரம் அவர்களுக்காகவே செலவாகும். உங்கள் நேரத்தை நீங்கள் திட்டமிட முடியாது. அவர்கள் சார்ந்த வேலைகளைச் செய்ய நேர்ந்த உங்களால், உங்கள் அவசியத் தேவைகளுக் கான வேலைகளைக் கூடச் செய்ய முடியாமல் போகும்.

உங்கள் உழைப்பால் விளைந்த பயன்களுக் கெல்லாம், உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே அவர்கள் பயன் பெறுவார்கள்; பாராட்டுக்களும் பெறுவார்கள்.

‘யானை சுமந்து கொண்டு போனது; நரி முக்கிகொண்டே போனது’ என்று ஒரு பழமொழி உண்டு. சுமப்பது என்னவோ யானைதான்; ஆனால், பக்கத்தில் முக்கிகொண்டு போகும் பாவனையில், நரியின் உதவியால் தான் யானையால் சுமக்கவே முடிகிறது என்கிற தோற்றத்தினை அது உண்டாக்கி விடுகிறது. அதுதான் நரித்தந்திரம்!

இதைப் போன்ற நரித்தந்திரத்தில் சிக்கி கொண்டால் நாம் தொலைந்தோம். பெரிய மனிதர்களாகத் தம்மை வெளியில் காட்டிக் கொள்ளும் எத்தனை பேர், இப்படி ‘குதிரையேறி’ சவாரி செய்கிறார்கள் தெரியுமா?

சிக்கிகொண்டதால், வெளியே வரும் வழி தெரியாத வேதனையுடன், அல்லது ‘இவரைச் சுமப்பதிலும் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது’ என்று அசடு வழிந்து கொண்டு காலத்தைக் கடத்துபவர்கள் இருக்கிறார்கள்.

நம் சமுதாயத்தில், சுமான பயணம் செய்து பழகி விட்ட பலர் உண்டு. பதவி சுகங்கள்; பணம் தரும் சுகங்கள்; அறிவு ஜீவி போலத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சுகம்; சமூகத்தில் தன்னைப் பெரிய மனிதனாகக் காட்டியே வாழ்ந்துவிட்ட சுகம். இப்படிப்பட்ட சுகங்களை அனுபவித்து விட்டவர்களுக்கு, இவை இல்லாமல் இருக்க முடிவதில்லை.

எனவே, தங்களது சுகமான பயணங்கள் தொடர, அவர்களுக்கு அடுத்தவரின் முதுகுகள் தேவைப்படும். நமது முதுகு, இப்படிப் பட்டவர்களின் கண்களுக்குப் படாமல் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தொலைவில் இருந்து பார்த்தால் மதிப்பிற்குரியவராகத் தெரியும் பலரின் உண்மை முகம், நெருங்கிக் பார்த்தால் அதிர்ச்சியைத் தரும். சிரிக்கும் அழகான பற்களின் கோரம், நெருக்கத்தில் பயங்கரமாக இருக்கும்.

ஆற்றோரமாக, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் கொக்கின் நிறமும் வடிவமும், நமக்கு அழகாகத்தான் தெரியும். நீரில் நீந்திக் கொண்டிருக்கும் மீனுக்குத்தான், கொக்கின் கொடூரம் தெரியும்.

பெரிய மனிதர்கள்தான் என்று இல்லை. சற்றே அறிமுகமான சிலரும் முதுகிலேறப் பார்ப்பதுண்டு. ஏதோ ஒரு சூழலில் அறிமுகமாகி யிருப்போம். அதன் பின்னர் வழியிலோ அல்லது ஏதோ ஒரு நிகழ்ச்சியிலோ சந்தித்தாலும், தெரிந்தாற்போல்கூட காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

திடீரென ஒரு நாள் ‘என்ன சார்! பார்க்கவே முடியல… உங்களுக்கு என்ன… எந்த நேரமும் பிஸி…’ என்று அவர்கள் சிரித்துக் கொண்டே வந்தால், நம் மீது குதிரை ஏறும் திட்டத்துடன் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நாம் úலை செய்யும் அலுவலகத்தில் அவர்களுக்கு ஏதும் வேலை ஆக வேண்டியிருக்கலாம்; நம் வாயிலாக அல்லது நமக்குத் தெரிந்தவர் வாயிலாக ஏதும் உதவி தேவைப்படலாம். அட்டை உறிஞ்சுவதுபோல, உங்களது உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சி எடுத்துவிடும் இவர்களின் தந்திரத்தில் நாம் வீழ்ந்து விடக்கூடாது.

இவர்களுக்காக நாம் குனிய வேண்டிய அவசியமே இல்லை. ‘குனிந்து கொண்டே இருப்பவன், சுமந்து கொண்டே இருப்பான்’ என்று எழுதினார், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

தந்திரத்தால் மட்டுமல்ல, அன்பு காட்டியே நம் மீது குதிரை ஏறுபவர்களிடமும், நாம் எச்சரிக்கை உணர்வுடன்தான் இருக்க வேண்டும். அன்புதான் வாழ்க்கையின் மூலாதாரம் என்பதில் ஐயமில்லை. ஆனால், நமக்குக் கிடைக்கும் அன்பு அல்லது நாம் செலுத்தும் அன்பு, நமது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதனையும் நாம் ஆய்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.

பிறரிடம் இருந்து கிடைக்கும் அன்பு அல்லது பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு, நமக்கு சிறகுகளைத் தருவதாக இருக்க வேண்டும்; சுமைகளைத் தருவதாக இருந்துவிடக் கூடாது.

பறக்கப் பயன்படா விட்டால், பறவைக்கு சிறகுகளே சுமைதான்! அடுத்த நிலைக்கு நம்மைத் தூக்கிச் செல்லாத அன்பும் ஒரு சுமைதான். பழகும் நண்பர்கள் முதல், ஒட்டிப்பிறந்த உறவுகள் வரை, எவரும் நம் முதுகில் இல்லாத நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பல வீடுகளில், தாயின் அன்புகூட, குழந்தைகளுக்கு சுமையாகி விடுகிறது. இதுவே, திருமணத்துக்குப்பின் மாமி மருகி சண்டையாக உருவாகிறது. அன்பைக்காட்டி அம்மா அமர்ந்திருக்கும் முதுகில், மனைவியும் சேர்ந்து அமர்வதால் வரும் சிக்கல் இது!

பிறர் நம் முதுகில் ஏறிவிடாமல் பார்த்துக் கொள்வது எந்த அளவிற்கு அவசியமோ, அதற்குக் கொஞ்சமும் குறைவின்றி முக்கியமானது, எந்தக் காரணம் கொண்டும் நாமும் அடுத்தவர் முதுகில் பயணிக்கக் கூடாது என்பது.

சுமைதாங்கிக் கல்லின் மீது சுமைகள் வைக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். கல்லுக்கு அது பொருந்தலாம். மனிதர்களுக்கு அல்ல. நாம் சுமைதாங்கிக் கல்லாகவும் இருக்க வேண்டாம்; சுமையாகவும் இருக்க வேண்டாம்.

அன்பைப் பார்த்து ஏமாறவும் கூடாது; அன்பைக் காட்டி ஏமாற்றவும் கூடாது. தந்திரத்தால் அடுத்தவரைப் பயன்படுத்திக் கொள்வது நரித்தனம்; அன்பைக்காட்டி அடுத்தவரைப் பயன்படுத்திக் கொள்வது குரூரத்தனம். இந்த இரண்டும் நம்மிடம் அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவை நம்மிடம் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே, நமது தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி கண்டவர் எவரையும் பாருங்கள். அவர்கள் தங்கள் கால்களால் நடந்தவர்களே தவிர, பிறரது முதுகில் பயணித்தவர்கள் அல்லர்.

தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் தான், அடுத்தவர்களின் நம்பிக்கைக்கு உரியவர் களாகிறார்கள்; சுயநலமில்லாத அன்புடன் பழகுகிறவர்கள்தான், அடுத்தவர்களின் உண்மையான அன்பினைப் பெறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *