மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்

அட்டைப்படக் கட்டுரை

சவால்களே சந்தோஷம்

– மரபின் மைந்தன் முத்தையா

கனங்களிலோ வீடுகளிலோ இருக்கும் கண்ணாடியில் தன் பிம்பம் கண்டால், அலகு கொண்டு குத்துகிறது அழகுக் குருவி. கண்ணாடி பிளப்பது அதனால் முடியாத காரியம் என்று அதற்கு யாரும் சொல்லாததால் உற்சாகமாய் முயல்கிறது. நாம் பார்த்தது கண்ணாடி கொத்துவதை மட்டும்தான். ஆனால், “அலகைத் திறந்தபடி அது ஆகாயம் கொத்தியதே” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

காரியம் நடத்த வீரியம் போதும். தகுதி, பலம், வல்லமை எல்லாம் தாமாகத் தேடிவரும். பலரும், ஒன்றைச் செய்யத் தொடங்கும் முன்னால் தங்கள் பலவீனங்களையே பட்டியல் போடுவார்கள். ரயிலில் மேல் அடுக்கு படுக்கை கிடைத்தால், பயணச்சீட்டு எடுத்த நாளிலிருந்து, தங்களால் என்னென்ன காரணங்களால் மேலே ஏறமுடியாது என்ற பட்டியலைத்தான் வரிசைக் கிரமமாகத் தயார் செய்வார்கள்.

பல சாதனையாளர்கள், பிறந்து வளர்ந்த சூழல் – செல்வம் – கல்வி – உறவினர் உதவி போன்றஎந்தப் பின்புலங்களுமே இல்லாமல் சாதித்தார்கள். எப்படித் தெரியுமா? இந்தப் பின்புலங்கள் இல்லாமல் சாதிக்கமுடியாது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அதனால் சாதித்தார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஜப்பானைச் சேர்ந்த ஜெஃப் வாக்ரஸோ என்பவர், குடும்பத்துடன் விடுமுறைக்காக கொரியாவுக்கு சென்றிருந்தார். தங்கியிருந்த ஹோட்டலில், அவருடைய ஒன்றரை வயது மகன் கைல், தொலைக்காட்சிக்கான ரிமோட்டை அழுத்தி விளையாடிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு சேனலாக மாறிக் கொண்டிருந்தது.

குறிப்பிட்ட சேனலில் கால்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உடனே கைப் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினான். தன் கையிலிருந்த ரிமோட்டையே கால்ஃப் குச்சியாகப் பாவித்து, திரையில் தோன்றிய வீரர்களைப் போல் விளையாட முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஜப்பான் திரும்பிய பிறகும், வீட்டிலிருந்த ரிமோட் கைலுக்கு கால்ஃப் குச்சியாகவே பயன்பட்டது. பெற்றோர்கள் பிளாஸ்டிக்கில் கால்ஃப் பாட் ஒன்றைவாங்கிப் பரிசளித்தார்கள்.

ஜெஃப் வாக்ரஸோவுக்கு கோல்ஃப் விளையாடத் தெரியாது. ஆனால் அவருடைய நண்பருக்குத் தெரியும். பிளாஸ்டிக் பாட் வைத்துக் கொண்டு கைல் கால்ஃப் விளையாடுவதைப் பார்த்து அவருக்கு வியப்பு. தேர்ந்த விளையாட்டு நிபுணரைப் போல கைல் பாட் இயக்குவதாகப் பாராட்டினார். இரண்டு வயது கூட ஆகாத குழந்தை டி.வி பார்த்து என்னவெல்லாம் பழகுகிறது என்று பேசிவிட்டு பெற்றவர்களும் மற்றவர்களும் அதை மறந்துவிட்டார்கள்.

சில நாட்களிலேயே கைலின் அன்னை ரெஜினா, கைல் கண்களில் வெண்ணிறப்புள்ளி இருப்பதைக் கண்டு பிடித்தார். மருத்துவரிடம் காட்டிய போது கண்ணில் காட்ராக்ட் இருப்பதாகச் சொன்னவர் “எதற்கும் ஒரு நிபுணரிடம் காட்டுங்கள்” என்றார்.

நிபுணர் தந்த தகவல் அதிர்ச்சியானது. “ரெஜினா! இது வெறும் காட்ராக்ட் இல்லை. கண்களில் வரக்கூடிய புற்றுநோய் இது. கீமோதெரபி மூலம் வலது கண்ணைக் காப்பாற்றிவிடலாம். ஆனால் இடது கண்ணை உடனே எடுத்துவிட வேண்டும்!”

என்ன நடக்கிறதென்று தெரியும் முன்னரே இடது கண் அகற்றப்பட்டது. வலது கண்ணுக்கு கீமோதெரபி கிசிச்சை தரப்பட்டது. செயற்கைக்கண் இடது பக்கம் பொருத்தப்பட்டது. மெல்ல மெல்ல நிதானத்துக்கு வரும்போது ஒருநாள் கைல் மூச்சுக்கு அலை பாய்ந்தான். மருத்துவமனைக்கு அள்ளிக் கொண்டு போனால், அறுவை சிகிச்சையின் போது ரத்தத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. மீண்டும் நடந்த உயிர்ப்போராட்டத்திலிருந்து மீண்டான் கைல்.

கைல் எது கிடைத்தாலும் கால்ஃப் விளையாடுவது போல் சுழற்றிய கைல், உள்ளபடியே கால்ஃப் பயில அனுப்பப்பட வேண்டும் என்று ஜெஃப் விரும்பினார். கால்ஃப் நிபுணர்கள் பலரையும் தொடர்புகொண்டு கேட்டார். மூன்று வயதுக்கு சற்றேமேற்பட்ட சிறுவனுக்கு எப்படி கால்ஃப் சொல்லித் தருவது? பலரும் யோசித்துவிட்டு மறுத்துக் கூறினர்.

ஒரே ஒருவர், புகழ்பெற்றகால்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்டின் விளையாட்டுப்பாணி கைல் நிகழ்த்தும் அசைவுகளில் இருப்பதை உணர்ந்தார். அவர் கைல் விளையாடல் பயிற்சி தரத் தொடங்கினார். அபாரமான திறமை அந்த சிறுவனிடம் இருப்பதை கால்ஃப் உலகம் கண்டுணரத் தொடங்கியது.

கைல் விளையாடத் தொடங்கி, வெற்றிக் கொடியை எட்டுத் திசைகளிலும் பறக்கவிடத் தொடங்கினான். எதிர்த்து விளையாடிய ஒருவர் இடைவேளையில் தன் மனைவியைத் தொலைபேசியில் அழைத்து மகிழ்ச்சியுடன் சொன்னார், “விஷயம் தெரியுமா! நான் நான்கு வயதுச் சிறுவன் ஒருவனிடம் தோற்றுக் கொண்டிருக்கிறேன்”.

இப்போது கைல் இன்னும் பத்து வயதை எட்டாத சிறுவன். அவனுடைய வெற்றி குறித்து அன்னை ரெஜினா சொன்னார், “அவனுக்கு ஒரு கண் கிடையாது. ஆனால் கால்ஃப் விளையாடுகிறான். ஏனென்றால், கண் இல்லாத சிறுவன் இந்த வயதில் கால்ஃப் விளையாட முடியாது என்பதை யாருக்கும் அவனுக்கு சொல்லவேயில்லை. தன்னால் சாதிக்க முடியாது என்று அவனுக்குத் தெரியாது. அதனால்தான் அவன் சாதித்திருக்கிறான்” என்றார் ரெஜினா.

ஒன்றைச் செய்ய முற்படும்போது அதுக்கு இருக்கக்கூடிய ஒரே தடை, நம்மால் முடியாது என்கிற எண்ணம் மட்டும்தான். அந்த எண்ணத்தை அகற்றியவர்கள் அத்தனை பேரும் சாதித்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறஉண்மை.

வீட்டில் குழந்தைகள் ஒரு நாற்காலியைத் தூக்க முயன்றால் “உன்னால் முடியாது” என்று சொல்லாதீர்கள். சேர்ந்து தூக்குங்கள். அந்தக் குழந்தைக்கு அது மாபெரும் வெற்றி. பிறர் உதவியுடன் தன்னால் வெல்ல முடிந்தது என்ற எண்ணத்தை அந்தக் குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

உங்களுக்கு எப்போதெல்லாம் சாதிக்கும் கனவு வருகிறதோ, அப்போதெல்லாம் உங்களால் முடியும் என்னும் உணர்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கனவுகளைக் கைவிடாதவர்கள் முயற்சியைக் கைவிடுவதே இல்லை.
கனவுகளையும் முயற்சியையும் கை விடாதவர்களை, வாழ்க்கை கைவிடுவதே இல்லை!!

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *