விதைகளே இங்கு வேண்டப்படும்

– உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம்

அதிகாலையில் எழுவது, பழக்கப்படுவது வரை சிரமமானது. எழுந்து பழகிவிட்டால், அந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகிவிடுவோம். வைகறைப் பொழுதுக்கு இணையான அழகும் இனிமையும், ஒரு நாளின் எந்தப் பொழுதுக்கும் கிடையாது.

விடியற்காலையில் தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்… அந்தப் பொழுது எவ்வளவு சுகமானது என்று கூறுவார்கள்.

இளங்காற்று உடலைத் தழுவிச் செல்ல, தன் கட்டுக்குலையும் இருட்டில் நடந்து செல்லப் பழகி விட்டால், எந்த நாளிலும் அதனை இழக்க மனம் வராது.
விடிந்தும் விடியாத காலை நேரத்தில், ஒரு பூங்காவில் நடக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், வாழ்வில் பேறு பெற்றவர்கள்.

‘இந்தப் பொழுது எங்களுக்காகத்தான் விடிகிறது…’ என்று ஒன்று கூடி உரத்துச் சொல்வது போல, மரங்களில் அமர்ந்தபடி பல்வேறு குரல்களில் கத்திக் கொண்டிருக்கும் பறவைகள்…

நமக்குப் பெயர் தெரியாத மரங்கள்… அந்த மரங்களைப் பற்றிச் சுற்றியபடி எழுந்து நிற்கும் கொடிகள்…. பல்வேறு மணங்களையும் நிறங்களையும் வாரி வழங்கியபடி சிரித்துக் கொண்டிருக்கும் மலர்கள்…

அந்த மலர்களை வருடிச் செல்லும்போது அவற்றின் மணத்தையும், எங்கேனும் ஓரமாய்த் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரைக் கடக்கும்போது அதன் வாசத்தையும் சேர்த்துக் கொண்டு, ஓர வஞ்சனையின்றி எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கும் காற்று…

இவையெல்லாம் வேறெங்கும் கிடைக்காதவை. அப்படி ஓர் இனிமையான சூழலை ரசித்துக் கொண்டே நடந்தால், இயற்கை நமக்குப் பல்வேறு செய்திகளைச் சிந்திக்கவும் தரும்.

பறவைகள் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடன்தான் தொடங்குகின்றன. விடியற் காலையில் தூங்கி வழிந்த முகத்துடன் எந்தப் பறவையும் இருப்பதில்லை. அதனால்தான் அவைகளுக்கு வானம் வசப்பட்டுள்ளது போலும்!

‘உலகம் பிறந்தது எனக்காக… ஓடும் நதிகளும் எனக்காக… மலர்கள் மலர்வது எனக்காக… அன்னை மடியை விரித்தாள் எனக்காக! என்ற கண்ண தாசனின் திரைப்பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? உற்சாகத்தின் ஒட்டு மொத்தத்தையும் அந்தப் பாடலில் இறக்கியிருப்பார் கவிஞர்.

பறவைக்குரிய விடியற்காலை உற்சாகம் நமக்கும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளையும் நமக்குரிய நாளாக எண்ணி எழும்போதே, அந்த நாளினைச் சந்திக்கக் கூடிய வேகமும், விருப்பமும் நமக்குக் கிடைத்து விடுகிறது. மரங்களும், அவற்றைச் சுற்றிக்கொண்டு எழுந்து நிற்கும் கொடிகளும், மலர்களைக் காட்டி சிரித்துக் கொண்டு நிற்கும் செடிகளும், நமக்குப் பல்வேறு உண்மைகளைப் புலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

நாம், காலையில் எழுகிறோம்; காலைக் கடன்களையும், உணவையும் முடித்து அலுவலகம் நோக்கி ஓடுகிறோம். மாலையில் களைப்புடன் திரும்பி, தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து, ”இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக… பெட்டிக்குள் முடங்கிப் போன…” ஒரு திரைப்படத்தின் பாடல்களையோ காட்சிகளையோ பார்த்துவிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டு படுத்து விடுகிறோம்…
உடம்புக்கும் மூளைக்கும் உடனே ஓய்வு தேவைப்படுகிறது நமக்கு. ‘ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை…’ என்று அலுத்தும் கொள்கிறோம். இயற்கையின் மடியில் மலர்ந்து சிரிக்கும் மரம் செடிகொடிகளின் உழைப்பை நாம் எண்ணிப் பார்ப்பது இல்லை.

கண்ணுறங்கும் நேரம், உழைக்கும் நேரம், ஓய்வெடுக்கும் நேரம், கண்விழிக்கும் நேரம் என்ற அவைகளுக்கு ஏதுமில்லை. நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதாக நாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவை இயற்கையின் படைப்புக்கள்தான்.

‘விதைத்தவன் தூங்கலாம்; ஆனால் விதைகள் தூங்குவதில்லை…’ என்பதனை நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மண்ணைத் துளைத்துக் கொண்டு, கீழே தமது வாழ்வாதாரத்தைத் தேடி அவை சென்று கொண்டே இருக்கின்றன. கிளையென்னும் கரங்களை நீட்டி மேலே தமது எதிர்காலத்தைத் தேடிச் சென்றுகொண்டே இருக்கின்றன.

இவற்றிற்கிடையே, தமது படைப்புகளை மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டும் இருக்கின்றன. இந்த வேலைகளில் இருந்து அவை ஓய்வு பெறுவதேயில்லை. உழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதனைத் தாவரங்கள் வாயிலாக இயற்கை நமக்குப் புரிய வைக்கிறது.

மற்றொரு முக்கியமான பாடத்தையும் இவை நமக்குக் கற்றுத் தருகின்றன. சுற்றிச் சுவர் எழுப்பப்பட்ட ஒரு குறிப்பிட்ட பரப்பளவுள்ள ஒரு பூங்காவில் அல்லது தோட்டத்தில் பல்வேறு மரம் செடி கொடிகள் உள்ளன.

கனி தரும் மரங்கள் உண்டு; தாவர இயல் படித்தவர்கள் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய, காய்கள் காய்த்துத் தொங்கும் மரங்கள் உண்டு; அந்த மரங்களைச் சுற்றியே எழுந்து நின்று மணமுள்ள மலர்களையும், வெறும் அழகு மட்டுமே உள்ள மலர்களையும் தரும் கொடிகள் உண்டு; விதவிதமான செடிகளும் உண்டு.

இவை அனைத்தையும் தாங்கி நிற்கும் மண், ஒரே இடத்தில் உள்ளது. ஒரே தன்மை கொண்டது. அனைத்துக்கும் பாய்ச்சப்படும் நீரும், ஒரே தன்மையானதுதான். கிடைக்கும் சூரிய வெளிச்சமும், ஒரே மாதிரிதான். ஆனால், அந்த நிலத்தில் வளரும் எந்த ஒரு மரமோ, செடியோ அல்லது கொடியோ, தனது தனித்தன்மையை இழப்பது இல்லை.

அந்தந்த மரங்கள், அதற்குரிய காய் அல்லது கனியைத்தான் தருகின்றன. எந்த ஒரு செடியும் அல்லது கொடியும், தனக்குரிய மலரையோ அல்லது காயையோ தரும் தன்மையிலிருந்து மாறுவதேயில்லை.

மாமரத்தைச் சுற்றிப் பாகற்காய் கொடி வளர்கிறது. அதைக் காரணம் காட்டி, மாம்பழம் கசப்பதும் இல்லை; பாகற்காய் இனிப்பதுமில்லை. சூழலைக் காரணம் காட்டி, இயற்கையின் படைப்புக்கள் தம்மை மாற்றிக் கொள்வதில்லை. நாம்தான் அந்தத் தவற்றைச் செய்கிறோம்.

வீரியம் மிக்க விதைகள் என்றும் தடுமாறுவதேயில்லை. ‘எனக்கென்றுள்ள தனித் தன்மையை, ஆற்றலை, நோக்கத்தை, எந்தச் சூழலிலும் நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்…’ என்னும் உறுதி நமக்கு இருந்தால், நமது வெற்றியை எவராலும் தடுத்துவிட முடியாது.

செடிகளை வருடி, நம்மைத் தழுவிச் செல்லும் காற்றும், நமது மூக்கில் ஒரு செய்தியை சொல்லிவிட்டுப் போகும். நறுமலர்கள் நிறைந்த செடிகளை நாம் கடக்கும்போது, இனிமையான மணம் மூக்கில் நுழைகிறது; தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரைக் கடக்கும்போது, நாற்றம் குமட்டலை ஏற்படுத்துகிறது.

இரண்டும், காற்று செய்யும் வேலைதான்! ஏன் தெரியுமா? விதைக்கு இருக்கும் உறுதி, காற்றுக்கு இல்லை. மணமுள்ள மலர்களை வருடிச் செல்லும்போது தாமும் மணமுடையதாக மாறு காற்று, சாக்கடையைக் கடக்கும்போது நாற்ற மடிப்பதாக மாறிவிடுகிறது. தனக்கென்று தனித் தன்மை இல்லாததாகக் காற்று இருப்பதே அதற்குக் காரணம்.

நம்மில் பலர் காற்றின் இந்த குணம் உடையவராக இருந்து விடுவதுதான், நமது சறுக்கல்களுக்குக் காரணமாகி விடுகிறது. நமது தகுதியை, ஆற்றலை, நோக்கத்தைப் புறச்சூழல் களைக் காரணம் காட்டி இழந்து விடுவது, பரிதாபத்துக்குரியது. எந்தச் சூழலிலும், அந்த நிலைக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது. குணத்தை இழக்கும் காற்று அல்ல… உறுதி மாறாத விதைகளே இங்கு வேண்டப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *