வீட்டுக்குள் வெற்றி

இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தை நிறுத்துவது எப்படி?

இவர்கள் இரண்டுபேரும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி. எப்போதும் ஒரே சண்டை. சண்டைன்னா வெறும் வாய்ச்சண்டை இல்லை. அறுவாள் தவிர, மற்ற எல்லாத்தையும் தூக்கியாச்சு. இவங்க சண்டையில தினமும் என் மண்டை உடைகிறது.”

தன் குழந்தைகளைப்பற்றி அவர் பேசிய விதத்திலேயே, இரண்டு நாடுகளுக்கிடையே நான் தான் தூதுவர் என்பதை புரிந்து கொண்டேன்.

சேர்ந்தாப்ல பத்து நிமிஷம் இருந்தா, உடனே ஒரு சண்டை வந்துடுது. திட்டிப் பார்த்தாச்சு. அடிச்சும் பார்த்தாச்சு. கேட்கிறதா தெரியல. ஒன்று இவர்களை சேர்த்து வையுங்கள். இல்லாவிட்டால், இவர்களை பிரித்தாவது வையுங்கள். இவன் வேலைலைய இவன் தனியாக செய்து கொள்ளட்டும்.

அவன் வேலையை அவன் தனியாக செய்துகொள்ளட்டும்.” இவ்வளவு சொல்லியும் அவர்களுடைய அம்மா ஆசுவாசப்படவில்லை. விரக்தியோடு கேட்டார், “எப்படி சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க. எப்படித் தான் சார் சொல்றது?”
அவரை நிதானப்படுத்த ஒரு ஜோக் சொன்னேன்.

விட்டுக்கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த விரும்பிய அம்மா, தன் மகனை வீட்டின் பின்புறம் கோழிகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில், புழுக்களை, கோழி மற்ற குஞ்சுகளுக்கு ஊட்டுவதை காண்பித்து, “பார்த்தாயா.. எப்படி புழுக்களை, அனைத்து கோழிக்குஞ்சுகளுக்கும் சமமாக பங்கிட்டு கொடுக்கிறது பார். சண்டையே போட்டுக் கொள்ளவில்லை. நீங்களும்தான் இருக்கிறீர்களே…” என்றார்.

பையன் உடனே பதில் சொன்னான். புழுவாக இருந்தால் நான் சண்டையே போட மாட்டேன். அப்படியே அண்ணனுக்கு கொடுத்து விடுவேன்”

சிரித்தபடியே கவுன்சிலிங் ரூமிலிருந்து அம்மா வெளியேறியதும், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள். என்னைப்பார்த்தும் சிரித்தார்கள். எல்லாம் பேசி வைத்துக்கொண்டு போடுகிற சண்டைகளாக இருக்கும்போல.

இந்தியா – பாகிஸ்தான் இருவரையும் சமாதானப்படுத்தும் பணியில் நான் வெள்ளைக் கொடியை கையில் வைத்துக்கொண்டு, களமிறங்கினேன்.

‘இதுல யாரு இந்தியா? யார் பாகிஸ்தான்?’ என்று பேச்சை துவக்கினேன். ‘ஏன் உங்க இரண்டு பேரையும் இப்படி சொல்றாங்க? எனக்கென்னவோ, உங்க இரண்டு பேரையும் பார்த்தா, அமெரிக்கா – இங்கிலாந்து போல நட்பு நாடுகளாத்தான் தெரியுறீங்க’ என்றேன்.

இரண்டு பேரும் உட்கார்ந்திருப்பதை பார்த்தால் அவர்களுக்குள் தீராத பகை ஒன்றும் இருப்பது போல தெரியவில்லை.

எனக்கு இன்னொரு குழப்பம்? இரண்டு குழந்தைகள் இருந்ததால் இந்தியா – பாகிஸ்தான் என்று பெயர் வைத்துவிட்டார். இதுவே நான்கு குழந்தைகள் என்றால் எப்படி பெயர் வைத்திருப்பார்? இந்தியா – சீனா – பாகிஸ்தான்- இலங்கை என்றா?
சரி. நாம் விஷயத்திற்கு வருவோம்.

எப்படி நிறுத்துவது இந்த சகோதர யுத்தத்தை? இப்படி இளம்வயதில் நடக்கும் சண்டைகள்தான், பின்னால் சொத்துக்காக சண்டை போடும் அளவிற்கு அவர்களை சுயநலமிகளாக மாற்றுகிறதா? அவர்களின் அம்மா ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார் ?

‘அம்மா! என் சட்டையை போட்டுக் கிட்டான்.’ ‘என் பேனாவை எடுக்கிறான். ‘என் புக்கை கிழிச்சிட்டான்’ என்று பஞ்சாயத்து வரும் போதெல்லாம் பல வீடுகளில் சொல்கிற தீர்ப்பு,“அவன்கூட சேராதேன்னு சொல்லியிருக்கேன்ல.”

சேர்வதினால்தானே சண்டை வருகிறது. சேராதீர்கள் என்ற லாஜிக் தவறானது.
குழந்தைகள் தங்களுக்குள் பிரச்சனைகள் வந்தால் உணர்ச்சிகளை, சண்டை போட்டு தீர்த்து விடுகிறார்கள். வெறுப்பாக சேர்த்து வைப்பது இல்லை. அதனால் அடுத்த நிமிடம் எதுவுமே நடக்காதது போல அவர்களால் இயல்பாக இருக்க முடிகிறது.

ஒன்று சேராதீர்கள் என்பதற்கு பதில், இப்படி சொல்லலாம், இது உன் பேனா, இது அவன் சட்டை, இது உன் ரூம், இது அவன் ரூம், என்றெல்லாம் இன்னும் சொத்தை பிரிக்கவில்லை. இது நம் வீட்டில் உள்ளவை. தேவைப்படுகிற நேரத்தில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சண்டை வரவேண்டாம் என்று, ஒரு பொருள் தேவையென்றால்கூட இரண்டு பேர் இருக்கிற காரணத்தால், இரண்டு வாங்குகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். கலர்கூட வேறு வேறாகத்தான் இருக்கும். இது அவர்களை சமாளிக்க உதவலாம். ஆனால் உறவை வளர்க்க உதவாது.

சில வீடுகளில் குழந்தைகளுக்குள் சண்டை நடந்தால் அம்மா வைத்திருக்கும் பிரம்மாஸ்திரம், ‘உங்க அப்பாவுக்கு போன் போடட்டுமா?’ என்பது தான். அவர் வந்து, அடித்துக்கொள்ளக்கூடாது என்பதை முதுகில் இரண்டு அடி வைத்து சொல்லிக் கொடுப்பார்.

சில நேரங்களில் அம்மா அப்பா இருவரும் வீட்டில் இருக்கும்போதே சண்டை நடக்கும். அப்போது அம்மா, அப்பாவை அனுப்பினால் அது அதிரடிப்படை. அப்பா, அம்மாவை அனுப்பினால் அது அமைதிப்படை. இதனால் எல்லாம், எந்தச் சண்டையும் நின்ற மாதிரி தெரிய வில்லை.

என்னிடம் வந்த இந்தியா-பாகிஸ்தான் இருவரின் பெற்றோர்களிடம் நான் சொன்னது இதுதான். ‘தங்கள் உணர்ச்சிகளை கோபமாக அப்போதே வெளிப்படுத்திவிடுவதால், அவர்கள் மனதில் வெறுப்பில்லை. அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று நாம்தான் அவர்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறோம்.’

‘கோபப்பட்டு சண்டை போடாதீர்கள் என்பதை, கோபத்தோடு சொல்லும் போது, நாம் அவர்களுக்கு சொல்லும் சேதி என்ன தெரியுமா? ஒரு தடவை சொல்லிப்பாரு. கேட்கலையா ஒரு அடி வை. எல்லாம் சரியாயிடும் என்பதுதான். எனவே அவர்கள் அடித்துக்கொண்டாலும் நீங்கள் அடிக்காதீர்கள். உங்களுக்குப் பிறகும் வாழப் போகும் அவர்களை பிரித்துவைத்து அனாதை களாக்கி விடாதீர்கள்.’

என் பார்வையில் சகோதர, சகோதரிகளுடன் ஒருவருக்கு இணக்கமாக இருக்கத் தெரிந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் எல்லோரிடமும் இப்படியே இருப்பார்கள். நிச்சயம் வெற்றிகளை குவிப்பார்கள்.

இதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது, உங்கள் உடன்பிறந்தவர்களை, குழந்தைகளுக்கு முன்னால் விட்டுக்கொடுத்து பேசாதீர்கள். உயர்வாக மட்டுமே பேசுங்கள்.

ஒரு குழந்தையைப் பற்றி இன்னொரு குழந்தையிடம் குறை சொல்லாதீர்கள்.
குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை நீங்களே முன்மாதிரியாக இருந்து ஏற்படுத்திக்கொடுங்கள்.

தின்பண்டங்களை பங்கு பிரிக்கும்போது யார் பங்கு பிரிக்கிறார்களோ, அவர்கள்தான் கடைசியில், தங்கள் பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என குழந்தைகளுக்கு சொல்லுங்கள். அப்போது, அவன் மட்டும் கூட எடுத்துக் கொண்டான் என்ற பிரச்சனை வராது.

‘இவன் செய்தது சரியா? நீயே சொல்’ என்று உங்களிடம் வந்தால், ‘கண்டிப்பா நான் கருத்து சொல்ல மாட்டேன். நான் சொல்லணும்னா நாளைக்குச் சொல்றேன்’ என்பதே உங்கள் பதிலாக இருக்க வேண்டும். ‘நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். உங்களுக்குள்ள கருத்து வேறு பாடுகள் வர்றது சகஜம்தான். இதை நீங்களே சரி பண்ணிடுவீங்க. நான் இதுல தலையிட மாட்டேன்.’

இதையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றை மட்டும் செய்து விடாதீர்கள். அது, ஒப்பிட்டு பேசிப் பேசி, சகோதரர்களை விரோதிகளாக்குவது.
இந்த உலகத்தில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் முதலில் கேட்கிற வார்த்தை, என்ன தெரியுமா? ஒப்பீடுதான்.“அப்படியே அவங்க அப்பா போல மூக்கு.” அப்படியே அவங்க அம்மா போல கண்ணு.”

இப்படி ஒப்பிடுவதை கேட்டுக் கேட்டு வளர்ந்ததாலோ, என்னவோ நாமும் நம் குழந்தைகளை தொட்டதற்கெல்லாம் ஒப்பிடுகிறோம். ‘உன்னைவிட சின்னவன்தானே.. அவன் எப்படி படிக்கிறான் பாரு. நீயும்தான் இருக்கியே..’

இயல்பாகவே, யாருடன் ஒப்பிட்டு பேசுகிறோமோ, அவர்கள்மீது இனம்புரியாத வெறுப்பு தோன்றும். எனவே ஒப்பிட்டு பேசிப் பேசி சகோதரர்களை நிரந்தர சண்டைக் காரர்களாக மாற்றி விடாதீர்கள்.

குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போடாதீர்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்.

‘நீங்கள் சொல்வது சரியா? நாங்கள் வேண்டுமானால் அவர்கள் முன்னால் சண்டை போடாமல் இருக்கலாம். ஆனால் ஒருவருமே அவர்கள் முன்னால் சண்டை போடக்கூடாது என்று எங்களால் கட்டளை போட முடியாதே. அவர்கள் நண்பர்கள் வீட்டிற்கு செல்கிறார்கள், அங்கேகூட யாராவது சண்டை போடுவதைப் பார்க்கலாம்.

இல்லையா? எப்படியோ சண்டை என்பது அவர்களுக்கு தெரியத்தானே போகிறது’
எப்படி இருந்தாலும் சமூகத்தில் உள்ள அசிங்கங்கள் எல்லாம் ஒருநாள் அவர்களுக்கு தெரியத்தானே போகிறது என்பதற்காக அவற்றை எல்லாம் நம் வீட்டிலேயே அரங்கேற்றி காண்பிக்கலாமா?

அதே போல, ‘அவன் சின்னப்பையன். அவனோட போய் கட்சி கட்டற. நீதான் பெரிய பையன். நீதான் விட்டுக்கொடுக்கணும்’ என்று பேசாதீர்கள். இந்த நியாயமெல்லாம் வளர்கிற வயசில் புரியாது. இந்த அறிவுரையை, இரண்டு பேரிடமும் சொல்லுங்கள். அப்போதுதான், பெற்றோர்கள் நம்மை சமமாக நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். ஒற்றுமையாக இருப்பார்கள்.

கோபத்தில், ‘இவன் எனக்கு அண்ணனே இல்லை’ என்றால், அப்போதே இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று பாயாதீர்கள். பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் அதை சுட்டிக்காட்டி, கிண்டல் செய்யுங்கள். “கோபத்தில்கூட இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது” என்று உறுதி எடுத்துக்கொள்ள தூண்டுங்கள்.

“எங்கே.. நீங்களே சமாதானம் செய்து கொள்ளுங்கள்”என வளர்க்க வேண்டிய குணங்களை பாராட்டி உருவாக்குங்கள்.

இருவரில் யார் முதலில் சமாதானமாக போக முயற்சிக்கிறார்களோ, அவர்களே உங்கள் அபிமானத்திற்கு உரியவர்கள் என்பதைப் புரிய வையுங்கள்.
மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிறைகளை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்துங்கள்.

மாறாக ஒரு பையனை பாராட்டியும் ஒரு பையனை குறையும் சொன்னால் நாம் அவர்களை அறிமுகப் படுத்தவில்லை. அவமானப்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
ஒன்றுபோல் எல்லாவற்றையும் படைத்து இந்த உலகத்தை அழகற்றதாக்க கடவுள் விரும்பவில்லை. நீங்களும் அதை செய்து விடாதீர்கள்.

2 Responses

  1. jini

    புத்தகங்கள் படிக்கும்போது மற்றும் கணினியில் வேலைபார்க்கும் போது தூக்கம் வந்தால் எப்படி தவிர்ப்பது.good sleep in night time 10to 6.

  2. jini

    பயனுள்ள கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *