புத்தாண்டில் புதையல் எடுங்கள்!

தீர்மானங்களில் தீர்மானமாய் இருங்கள்..!

உங்கள் திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல.
ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட!

ஜனவரி முதல் வாரத்தில் ‘ அதுவும் முதல் நாளில் உடற்பயிற்சிக் கழகங்கள் நிரம்பி வழியும். ஜனவரி முழுவதும் ஜிம்களில் பலரும் ஜம்மென்று பயிற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்க முடியும், மெல்ல மெல்ல அடுத்துவருகிற மாதங்களில் கூட்டம் குறையும். ஆண்டுக்கட்டணம் செலுத்திய வர்கள்கூட சொல்லாமல் கொள்ளாமல் தங்கள் வருகையைக் குறைத்துக் கொள்வதும் நிறுத்திக் கொள்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

தொடங்குவதில் சூரப்புலிகள் தொடருவதில் சோம்பல்படுவது சகஜமான விஷயம் என்றாகி விட்டது.

தங்களுக்கு நன்மை தருகிற விஷயத்தையே தொடங்கிவிட்டுத் தொடரமுடியாதவர்கள் மற்ற விஷயங்களில் மாறாமல் இருப்பார்களா என்ன? உணர்ச்சி வேகத்தில் மேற்கொள்கிற சபதமோ தீர்மானமோ தொடர்வதற்கென்று சிரத்தையும் அக்கறையும் தேவைப்படுகிறது.

புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் தீர்மானமாய் இருக்க சில வழிகளை யோசியுங்கள்.

1. நேரத்தைத் திட்டமிடுங்கள்:

குறிப்பிட்ட வேலைக்கென்று நேரம் ஒதுக்கி விட்டால் அதை மறுபடி மாற்றிக் கொண்டிருக் காதீர்கள். காலை நேர நடைப்பயிற்சிக்குப் போவது என்று முடிவெடுத்தால், இரண்டு பேர் வருவதற்கு முன்னால் புறப்பட்டுவிடுங்கள்.
ஒருவர் பால்காரர். இன்னொருவர் பத்திரிகை போடுபவர். பால்காரர் வருவதைப் பார்த்துவிட்டால், ”ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம்” என்று தோன்றும். காபி வருவதற்குள் =தொப்’ என்று பேப்பர் வந்து விழும். தலைப்புச் செய்திகளை மட்டும் பார்க்கலாம் என்று கையில் எடுப்பீர்கள்.

கைகளில் காபி மணக்க, கண்கள் பேப்பரை மேய, =சுளீர்’ வெய்யில் வந்ததுமே ”நாளைக்கு போய்க்கலாம்” என்று எண்ணம் வந்துவிடும்.

எத்தனை மணிக்கு எதைச் செய்வது என்று முடிவெடுத்தாலும் அத்தனை மணிக்கு அதை செய்து முடிப்பதே உத்தமம்.

2. முடியாது என்று சொல்லுங்கள்:

நீங்கள் சில வேலைகளை முக்கியமானவை என்று வகுத்துக்கொண்ட பிறகு, தெரிந்தவர்கள் அதில் திருத்தத் தீர்மானம் கொண்டு வருவார்கள். மாலை ஐந்து மணிக்கு யோகா செய்வதென்று முடிவெடுத்து வைத்திருப்பீர்கள். நாலரை மணிக்கு நண்பர் போனில் அழைப்பார். ”பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு! அஞ்சு மணிக்கு வரவா” என்று கேட்டால், ”அஞ்சரைக்கு முடியுமா?” என்று கேட்பீர்கள். அவர் வேலையிருக்கிறது என்பார். ”அப்ப சரி, அஞ்சு மணிக்கே வந்துடுங்க” என்பீர்கள். அப்படிச் சொன்னால், உங்களுக்கு யோகா முக்கியமில்லை என்று அர்த்தம். எதற்கு முதலிடம், எதற்கு முக்கியத்துவம் என்பதெல்லாம் நீங்கள் முடிவு செய்கிற விஷயங்கள்.

3. உங்கள் வாழ்க்கை முறையை வெளிப் படுத்துங்கள்:

உங்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் உங்களின் அன்றாட நிகழ்ச்சி நிரலை வெளிப் படுத்துங்கள். நேரிலோ, செல்லிடப்பேசியிலோ உங்களை எப்போதெல்லாம் அழைக்கலாம் என்பதைத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பழக்கங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்தால் தானே மற்றவர்கள் கொடுப்பார்கள். இதில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.

4. வெற்றிக்கான விலைகளைக் கொடுங்கள்:

உடலில் எடையைக் குறைப்பது ஒருவகை வெற்றி. தொழிலில் லாபத்தைக் கூட்டுவது இன்னொரு வகை வெற்றி. இவை அனைத்திற்குமே சில விலைகள் உண்டு. திட்டமிடுவது, நேரம் ஒதுக்குவது, கவனம் குவிப்பது போன்றவையே அவை. உரிய விலைகளைக் கொடுத்தால் பெரிய வெற்றிகளைக்கூட எளிதாய் எட்டலாம் என்பதே சாதனையாளர்களின் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கிற சூத்திரம்.

5. உங்களுக்கான முடிவுகளை நீங்களே எடுங்கள்:

வாழ்க்கையை ஒரு சமுத்திரமாகக் கற்பனை செய்தால், அதில் கப்பலை நீங்களே இயக்குகிறீர்களா என்று பாருங்கள். ஒரு பயணியாக மட்டுமே இருப்பவர்கள் பயணத்துக் கான திசைகளைத் தீர்மானிக்க முடியாது. உங்கள் திசைகளைத் தீர்மானிப்பது சுதந்திரம் மட்டுமல்ல. ஒருவகையில் பெரிய பொறுப்புணர்வும்கூட!

பொறுப்புடன் இருப்பதைவிட சுதந்திரம் ஏதுமில்லை. அதேநேரம் சுதந்திரத்தைப்போல் பொறுப்பான விஷயம் வேறில்லை. உங்கள் தீர்மானங்களில் தீர்மானமாயிருந்து உங்கள் திசைகளைத் தீர்மானியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *