நமது பார்வை

புத்தகக் காதல்

ஒவ்வொரு மனிதனுக்கும், அந்தரங்கமான நட்பாய் அன்றும் இன்றும் புத்தகங்களே இருக்கின்றன. நின்று நிதானித்து, நெறிபட உரையாட புத்தகங்கள்போல் உற்றதுணை பூமியில் இல்லை.

விரும்பிய நேரத்தில் வள்ளுவரோடு, கருதிய நேரத்தில் கம்பரோடு, பிரியப்படும் போதெல்லாம் பாரதியோடு பேசி மகிழும் பெரும் வாய்ப்பு புத்தகங்கள் மூலமே கிடைக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற புத்தகக்கண் காட்சிக்காக பெருமளவு திரண்ட மக்கள் வெள்ளமும் இந்த மனநிலையை மிகச்சரியாகவே கணிக்கிறது. உடல் நலம் வேண்டி மருத்துவர் களிடம் செல்லும்போது தேவையான மருந்துகளின் பட்டியல் கொண்ட மருத்துவக் குறிப்பை அவர் அளிக்கிறார்.

அதேபோல, மனநிலைக்கேற்ற புத்தகங் களைப் படிக்க நிபுணர்களை, நூல்வல்ல அறிஞர்களை ஆலோசித்து புத்தகக்குறிப்பாக புத்தகங்களின் பட்டியலை வாங்கிக் கொள்ளும் அளவு புத்தகங்கள் மீதான பிரியம் நிபந்தனையின்றி வளர வேண்டும்.

படிப்பவர்களே ஜெயிப்பவர்கள், ஜெயிப்பவர்களே படிப்பவர்கள் என்பது பொன் மொழி மட்டுமல்ல, நிரூபிக்கப்பட்ட நிஜமும்கூட. உள்வாங்கும் ஆற்றல், கவனக்குவிப்பு, சிந்தனையில் புதுமை என்று எத்தனையோ நன்மைகளை புத்தகங்கள் தருகின்றன.

வீடுகள்தோறும் நூல் நிலையங்கள் உருவாகும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம் வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *