வல்லமை தாராயோ

20.11.2010 அன்று கோவையில் நடைபெற்ற வல்லமை தாராயோ நிகழ்ச்சியில் திரு. சோமவள்ளியப்பன் ஆற்றிய உரையின் சுருக்கம்

வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழவேண்டிய ஒன்று. அதனை முழுமையாக வாழும் உரிமை நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதனை தவறவிட வேண்டாம். முயன்று பார்த்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரணங்களும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

வல்லமை தாராயோ நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் வல்லமை தாராயோ கூட்டங்கள் நடை பெறுகின்றன. எவ்வளவோ பேச்சாளர்கள். ஒவ்வொரு பேச்சாளரும் ஒவ்வொரு விதமான வல்லமையினை கேட்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் நான் பேசிய போது, தேவை என்று சொன்ன வல்லமை, நீண்டகாலத்தில் நம்பிக்கை வைக்கும் வல்லமை.

ஆங்ப்ண்ங்ச் ண்ய் கர்ய்ஞ் பங்ழ்ம் என்ற வல்லமையை பற்றி பேசினேன். இனி என்ன வல்லமையினைக் கேட்பது? கேட்பதற்கு நிச்சயமாக ஒரு வல்லமை இருக்கிறது. முக்கியமான வல்லமை. அதை சொல்லுவதற்கு முன், நான் எந்த வல்லமைகளை எல்லாம் கேட்கவில்லை என்று சொல்லுகிறேன்.

அதிகமான பணம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதிகாரமும் கேட்கப் போவதில்லை. பதவிகளில்லை. அழகும் இளமையும் வேண்டும் என்று கேட்கவில்லை. பிரபல்யம் வேண்டும் என்கிற விண்ணப்பமும் இல்லை.

கேட்பது, மகிழ்ச்சியாக இருக்கும் வல்லமையினை தா என்றுதான். விபரம் தெரிந்த வயதில் இருந்து, வாழப்போகும் 75, 80 வரையிலும் மகிழ்ச்சியாக வாழும் வல்லமையினைத் தா.

மகிழ்ச்சியாக என்று கேட்பது, ‘ஸ்பெசிவிக்காக கேட்பதுபோல தெரியலாம். ஆனால், அது குறிப்பானதல்ல. அது, ‘ஜெனரலாக’ கேட்பது ஆகும்.

எதனால் குறிப்பாக பணம், பிரபல்யம், அதிகாரம், பதவிகள் என்றெல்லாம் கேட்காமல், பொதுவாக மகிழ்ச்சியாக இருக்கும் வல்லமை வேண்டும் என்று கேட்கவேண்டும் – என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவற்றுக்கான பதிலாக சில உதாரணங்களை, பலரும் விரும்பும், கேட்கும் அவைகளை எல்லாம் மிக அதிகமாக பெற்றவர்கள் பெயர்கள் சிலவற்றைச் சொல்லுகிறேன்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி. உலகத்தின் நெ.1 பணக்காரர் என்கிற செல்வச்செழிப்பின் உச்சத்தினையே தொட்டவர். ஒரு நேரம் அவரைக்காட்டிலும் பணக்கார மனிதன் இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை என்கிற நிலைமை இருந்தது. ஹேன்சி குரோனியே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன். உலக அரங்கில் மிகப் பிரபல்யமாக இருந்தவர். இளவரசி டயானா அழகிற்காக போற்றப்பட்டவர்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். உலகப்புகழ் பெற்றவர், பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிகத்திறமையான வெற்றிகரமான இருதய அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் செரியன், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மிகப்பெரிய பதவியும் அதிகாரமும் கொண்டிருந்தவர் ராமச்சந்திரன்.

பணம், அதிகாரம், இளமை, அழகு, பிரபல்யம், பதவி வைத்திருந்த/ வைத்திருக்கும் இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்/ வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

மறைந்த ஹேன்சிகுரோனியேயும், சிறையிலிருக்கும் ராமச்சந்திரனும் ஊழல் குற்றச்சாட்டினால் திணறிக் கொண்டிருப் பவர்கள். பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன்மீது ஏகப்பட்ட வழக்குகள். அம்பானிக்கு இருக்கும் பிரச்சனைகளை பத்திரிகைகளைப் பார்த்தாலே தெரியும். இளவரசி டயானா ஓடி, தப்பிக்க முயற்சித்து விபத்தில் இறந்தே போனார். டாக்டர் செரியன் தற்கொலை செய்துகொண்டார்.

பணம், அழகு, இளமை, அதிகாரம், ஆள்பேர், பிரபல்யம் இவை எதுவுமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தராது. இவை இருந்தும் மகிழ்ச்சியற்று வாழ்ந்தவர்கள் /வாழ்கிறவர்கள் உண்டு.

அவ்வளவு ஏன், உங்களில் பாதியளவே வெற்றி பெற்றிருப்பவர்கள், செல்வம் வைத்திருப்பவர்கள், பதவிகளில் இல்லாதவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்களில் எவரெனும் உங்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள் இருக்கிறார்களா, இல்லையா? கண்டிப்பாக இருப்பார்கள்.

உங்கள் கண்களை மூடி, உங்களிடமே இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். ‘நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கிறீர்களா?’

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் என்றால் யார்? எதை வைத்து ஒருவருடைய மகிழ்ச்சியினையும் மகிழ்ச்சியின்மையினைவும் அளவிடுவது? நல்ல கேள்வி. எவர் தன்னோடும், தன்னைச் சுற்றியுள்ளவர்களோடும் மற்றும் தன்னுடைய இருப்பு நிலைகள் குறித்தும் சங்கடங்கள் இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்கள்தான் மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள்.

சிலருக்கு அவர்களைப் பற்றியே திருப்தி இருக்காது. தங்கள் பெயர் சரியில்லை, உருவம், முகம், நிறம் அல்லது திறன்கள் குறித்து வருத்தங்கள் இருக்கும். உதாரணத்திற்கு மைக்கேல் ஜாக்சனுக்கு அவருடைய மூக்கும் நிறமும் சரியில்லை என்கிற வருத்தம் எப்போதுமே உண்டு. தான் அழகில்லை, தனக்கு திறமையில்லை, அதிர்ஷ்டமில்லை இப்படியாக தங்களைப் பற்றிய சங்கடங்களுடன் மகிழ்ச்சியின்றி இருப்பவர்கள்.

மனைவி, கணவன், பெற்றோர், உடன் பிறப்புகள், பிற உறவுகள், அக்கம் பக்கம், அலுவலக ஆட்கள் பற்றியெல்லாம் வருத்தங்களுடன் இருப்பவர்கள் உண்டு. அவர்களுடன் சௌகர்யமாக உணரமுடியாத மனநிலை இருக்கும். இங்கிலாந்து இளவரசரையே திருமணம் செய்த பிறகும் மகிழ்ச்சியில்லாமல் டயானா இருந்ததாக சொல்லுவார்கள்.

பிரவீன் பிரமோத் மகாஜன் சகோதரர்கள் கதை தெரிந்திருக்கும் தங்களிடம் எவ்வளவு பணமிருந்தும் மற்றவர்களைப் பார்த்து பொருமிக் கொண்டிருப் பவர்கள், என்ன வெற்றி பெற்றும், போதாது போதாது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தன் திறமைகள் தனக்கு கிடைக்கும் வெகுமதிகள் குறித்தெல்லாம் வருத்தப்பட்டுக்கொண்டிருப்பவர்கள், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் வருமானம், புகழ் பெருமைகள் எல்லாம் குறையானவையே என்று எண்ணுவார்கள்., அவை குறித்து எப்போதும் வருத்தத்துடனேயே இருப்பவர்கள் எல்லாம் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வதாக சொல்லமுடியும்?

ஒரு சிலர் அவர்கள் வாழ்க்கை பற்றி சந்தோஷமாக சொல்வ துண்டு. ‘நான் சேலத்தில் குடியிருந்தபோது’, ‘திருச்சியில் வேலை செய்த போது’ என்பது போல கடந்த காலத்தினைப் பற்றி சொல்லுவார்கள். அப்போது எவ்வளவோ நன்றாக இருந்தேன் என்று இப்போது சொல்லி என்ன பயன்? வாழும்போது மகிழ்ச்சி யினை உணர்ந்தோமா?

வேறு சிலருடைய மகிழ்ச்சி என்பதே வருங் காலத்தில்தான் இருக்கும். அது எப்போதும் எதிர் பார்க்கப்படுகிற ஒன்றாக இருக்கும். ‘ஹைய்யா! அடுத்த மாதம் தேர்வுகள் முடிந்து விடும்’ என்று நினைக்கிற பிள்ளைகளைப் போல, ‘நான் ரிட்டயர் ஆன பிறகு…’ ‘சொந்த வீடு வாங்கிய பிறகு…’ ‘அதிகாரியான பிறகு…’ என்று சிலர் மகிழ்ச்சியை எப்போதும் ஒத்திப் போடுவார்கள்.

கடந்தகாலம் என்பது அசைபோடுவது. எதிர் காலம் என்பது எதிர்பார்ப்பில் இருப்பது. நிகழ் காலத்தில் மட்டுமே வாழ முடியும். அதனை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
இந்த நேரம் என்பது நிஜம். இப்போதும் அனுபவிக்க, ரசிக்க எவ்வளவோ இருக்கிறது. இவற்றை விட்டுவிட்டு, வேறு எவற்றையோ நினைத்து மகிழ்ச்சியினை ஏன் தொலைக்க வேண்டும்? ஒவ்வொரு நாளும் முழுமையாக வாழ வேண்டும். ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால், பாவம் சிலர் ஒவ்வொரு நொடியும் செத்துக்கொண்டிருக்கிறார்கள்!

டெல்பி டி.விஎஸ் நிறுவனத்தில் பேச அழைத்திருந்தார்கள். கூடியிருந்த ஆயிரக் கணக்கான இளம் ஊழியர்கள் மத்தியில் வாழும் முறை பற்றி பேசிவிட்டு, இறுதியாக என் கை பேசியில் இருந்த பாடல் ஒன்றினை ஒலிக்கச் செய்தேன்.

நெகிழ்ந்துபோய்விட்டார்கள். அந்தப் பாடல், இராஜாஜி அவர்கள் எழுதிய, ‘குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா’ என்கிற பாடல்.

குறையொன்றும் இல்லை என்று நிறைவாக மகிழ்ச்சியாக சொல்லும் நிலை வேண்டும். அது நம்மிடம் இருப்பதால் வருவதில்லை. நம் நினைப்பால் வருவது.

உண்மையில் நினைத்துப் பார்த்தால் நாம் எல்லாம் எவ்வளவோ சௌகரியங்களுடன் இருக்கிறோம். நமக்கு என்ன குறை? ஆனால், அதனை உணராமல், குறைகளை சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியில்லாமல் வாழ்கிறோம்.

மகிழ்ச்சி என்பது ஓர் உணர்வு. மகிழ்ச்சி என்பது ஒரு சாய்ஸ். சிலர் விரும்பியே தாங்கள் மகிழ்ச்சியாக இல்லாததைப்போல நினைத்துக் கொள்கிறார்கள். எவ்வளவு இருந்தாலும், எந்த உயரங்கள் போயிருந்தாலும் பற்றாக்குறை மனதுடன் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை வீண்.

பர்சனாலிட்டிகளில் இருவகையினர் உண்டு. எல்லாம் சரி. நன்றாகவே நடக்கிறது என்று நினைப்பவர்கள் ஒருவகையினர். அவர்களும் மகிழ்ச்சியாக இருந்து உடன் இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்கள் அவர்கள். எனக்கு எதுவுமே சரியில்லை. எல்லோருமே தவறு என்று நினைப்பவர்கள் மற்றொரு வகையினர். நடப்பது என்னவோ ஒன்றுதான். எடுத்துக் கொள்ளும் விதம் மாறுபடுகிறது. அவ்வளவுதான்.

ஒருவருடைய மகிழ்ச்சியினை கெடுப்பது யார்? இருக்கிற மகிழ்ச்சியினை பார்க்கவிடாமல் சங்கடங்களையே பெரிதுபடுத்தி காட்டுபவர் யார்? எதிரி வெளியில் இல்லை. எல்லாம் தலையெழுத்து என்பார்கள். எழுத்துதான். ஆனால் வேறு எவரோ எழுதியதில்லை. அவரவர்கள் மனதிற்குள் எழுதி வைத்துப் படிக்கும் ‘ஸ்கிரிப்ட்ஸ்’ வசனங்கள்தான் அவை.

மகிழ்ச்சி என்பது ‘இன்னர் ஹார்மனி’யில் இருக்கிறது. ஹார்மனி என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன சொல்லலாம்? உள்மன இணக்கம்? எல்லாவற்றுடனும் இசைந்து போதல்? அமைதி?

தன்னோடும் மற்றவர்களுடனும் அமைதியாக இருப்பது என்கிறது இன்னர் ஹார்மனி பற்றிய டெபனிஷன்.

வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழவேண்டிய ஒன்று. அதனை முழுமையாக வாழும் உரிமை நம் எல்லோருக்குமே இருக்கிறது. அதனை தவறவிட வேண்டாம். முயன்று பார்த்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரணங்களும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

அதனைக் கண்டுகொள்கிற வல்லமை வேண்டும். மகிழ்ச்சி என்ற பெட்டகத்தின் சாவி நம்மிடம்தான் இருக்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டும். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *