உனக்கு நீயே ஒளியாக இரு

-டாக்டர் சுந்தர ஆவுடையப்பன்

“வல்லமை தாரோயோ” திருச்சி

நம்முடைய வாழ்க்கையில் எவை துன்பமாகத் தெரிகிறதோ, அவற்றை நல்லதாக எடுத்துக் கொள்வோம்.

பசி மனித வாழ்க்கைக்கு மிகவும் நன்மை தரக்கூடியது. பிரச்சனைகள் மிகவும் நல்லவை. நமக்கிருக்கக்கூடிய பகைவர்கள் அதி உன்னதமானவர்கள். நமக்கு வரக்கூடிய நோய்களும் நல்லவை.

மேலும் இல்லாமல் கீழும் இல்லாமல் நடுத்தட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற உணர்வு நம் எல்லோருக்கும் இருக்கிறது.

நலம் விசாரித்தால் சுமாராக இருக்கிறேன் என்ற பதில் வருகிறது. வியாபாரம் பற்றி கேட்டாலும் சுமார் என்ற பதில் வருகிறது.

“நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வியாபாரம் நன்றாக நடக்கிறது” என்று சொல்பவர்கள்தான் நம்பிக்கை மிக்கவர்கள்.

நம்மிடமிருக்கிற எல்லாவற்றையும் காலி செய்துவிட்டு மகிழ்ச்சியை நிரப்ப வேண்டும். மகிழ்ச்சி என்பது நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வது. “இன்று புதிதாய் பிறந்தோம்” என்று சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“உனக்குள் நீயே ஒளியாக இரு” என்பது புத்தரின் வாக்கு. வெளியே ஒளிதேடி அலைய வேண்டிய தேவையில்லை. நமக்குள் ஒளியேற்றும் திறன் நம்மிடம்தான் இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. மருத்துவர் போல, சிலபேர் ஆலோசனை சொல்லலாம். நண்பர்கள் உதவி செய்யலாம். பலர் தொல்லை கொடுக்கலாம். தொல்லைகளாலேயே சில உயரங்கள் எட்டலாம். மற்றவர்களெல்லாம் துணைக் காரணங்கள். முன்னேற்றக்கூடிய முதன்மைக் காரணம் நாம்தான். அதற்கு நம்பிக்கை தேவை.

நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று சொல்வது மட்டும்போதாது. அதற்கான செயல்பாடுகளும் வேண்டும். கனவுகள் வலிமையாக எப்போது மாறும்? அவை செயலாகத் தொடங்கும் போதுதான்.

சமூகத்தைப்பற்றி பேசுபவர்கள் நியாயங்களைப் பற்றி பேசுகிறார்கள். சுயமுன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கிறவர்கள் எதார்த்தத்தை பேசுகிறார்கள். எதார்த்தம் நம்பிக்கை மூலமாக வரும். நம்பிக்கை நம்மைப் பற்றியதாக இருக்கவேண்டும். நமக்கு துன்பம் வராது, சோகம் வராது என்பவை போலியான நம்பிக்கை. பக்தி போன்றவை வெளியில் வளர்த்துக் கொண்ட நம்பிக்கைகள்.

சிலர் என் வாழ்க்கைத் தரத்திற்கு இப்படியெல்லாம் நடக்காது. யோசிக்கக்கூட முடியாது என்று சொல்லலாம். தராதரத்திற்கும் வெற்றிக்கும் சம்பந்தமே கிடையாது. முயற்சிதான் வெற்றியைக் கொடுக்கும். நமக்கிருக்கிற தகுதிக்கு எதையும் சாதிக்கலாம்.

புல் எனும் ஓர் அறிவு உயிர் தொடங்கி ஆறறிவு மனிதன் வரை இறைவன் படைத்திருக்கிறான். இதில் உச்சப்படைப்பு மனிதன்தான். அவனால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

உலகத்திலுள்ள எல்லா பூட்டு தயாரிக்கிற நிறுவனங்களும் பூட்டை மட்டுமா தயாரிக்கின்றன. சாவிகளையும்தான் தயாரிக்கின்றன. டூப்ளிகேட் சாவி போடுபவர்களும் இருக்கிறார்கள்.

பூட்டுகளை தயாரிப்பவர்கள் சாவிகளையும் அனுப்புவது போல் பிரச்சனைகள் வரும் போது தீர்வுகளும் வருகின்றன. தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை. அமர்ந்து யோசிக்க வேண்டும்.

தீர்க்க முடியாத பிரச்சனை என்று வரும்போது காந்தியடிகள் இரவு உறங்கும் முன் பிரார்த்தனையின்போது அவற்றை சொல்லிவிட்டு படுப்பார். காலையில் எழுந்தவுடன் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மனதில் தோன்றும். மனது தூங்காது. அது விழித்திருந்து தீர்வை கண்டுவிடும். எனவேதான், மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ஐம்புலன்களால் மனது பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இத்தனை மாற்றங்களை தந்து கொண்டிருக்கும், தரப்போகும் கணினி தொழில்நுட்பத்தை மனிதன் தானே கண்டுபிடித்தான்?

கணினி என்பது மனிதமூளையின் இன்னொரு பிரதி. மனித மூளையால் உருவாக்கப்பட்டது. அதெல்லாம் கற்றுக்கொள்ள நமக்கு முடியாது என்று நினைக்கிறோம்.

பிரச்சனைகள்தான் நம்மைப் புடம் போடும். “பெரிதாக சாதனை புரிய விரும்புகிறாயா, மிகப்பெரிய பிரச்சனையை எடுத்துக் கொண்டு தீர்வு காண முயற்சி செய்” என்கிறார்கள்.

இருக்கிற பிரச்சனைகளை தீர்ப்பது அன்றாட வாழ்க்கை. அதையும் மீறி என்ன சாதிக்க முடியும் என்று சிந்திக்கவேண்டும்.

வாழ்க்கை எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒருவர் “வெற்றியை நோக்கி” என்றார். ஞானியொருவர் “மரணத்தை நோக்கி” என்றார்.

“When I was Dying” என்பது இப்போது பிரபலமாக உள்ள ஆங்கிலப் புத்தகம். இதை சங்க இலக்கியத்திலேயே நம்மவர்கள், “பிறக்கும் போதே மனிதனுடைய மரணம் தொடங்கி விடுகிறது!” என்று சொல்லிவிட்டார்கள்.

ஒவ்வொரு விநாடியும் இறந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் இறந்ததற்கெல்லாம் அழுகிறோம். நமக்கு நாம் எப்போது அழப்போகிறோம் என்று கேட்கிறார்கள். இது ஒரு ஞான நிலை சிந்தனை. ஆனால் ஒவ்வொரு விநாடியும் நேற்று இருந்ததைவிட இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொன்னால் நாம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இதுதான் வளர்ச்சி. வளர்ச்சி என்றால் என்ன அர்த்தம். நேற்று இருந்ததை விட இன்று நன்றாக இருக்கிறேன். அது நம்பிக்கையை வளர்க்க வேண்டும். ஒளியை ஏற்றவேண்டும். தன்னம்பிக்கை, தன்முன்னேற்றச் சிந்தனையை வளர்த்திக் கொண்டே போக வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. அதைத்தான் வாலியைப் பற்றி எழுதும்போது கம்பர், “சிறியன சிந்தியாதான்” என்கிறார். சட்டையில் பட்ட கறைக்காக அரைமணி நேரம் கவலைப்படுகிற நாம் ஒரு உயிரிழப்புக்கு வருத்தப்படுவதில்லை.

பெரிய விஷயங்களுக்காக கவலைப்படாதவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கவலைப்படுகிறார்கள். அவையே காலைப் பிடித்துக் கொண்டு நகர முடியாமல் செய்துவிடும். எனவே, சின்ன சின்ன விஷயங்களை உதறித் தள்ளிவிட வேண்டும்.

கொசு வாழ்க்கை நமக்கொரு படிப்பினை. காலத்திற்கு தகுந்தாற்போல கொசு ஒழிப்பான்கள் வந்தும் கொசுக்கள் கடித்துக் கொண்டே இருக்கின்றன. தன்னுடைய வாழ்விற்காக அவை இவற்றை சமாளிக்கின்றன. பிரச்சனைகளைத் தாங்கி தாங்கி கொசுவிற்கு பிறக்கக் கூடிய வலிமை மனிதனுக்கு இருக்கக்கூடாதா.

வாழ்க்கை இப்படி பல படிப்பினைகளை தந்து கொண்டேயிருக்கின்றன.

இறந்த காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. எதிர்காலத்தில் நல்ல லட்சியங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

ஆணவம் வேறு, நம்பிக்கை வேறு. நானில்லை என்றால் எதுவும் நடக்காது என்பது ஆணவம்.

எளிமையாக இருப்பவர்கள் மட்டுமே தைரியமாக செயல்படுவார்கள். காந்தியடிகள் எடுத்த வழி சாத்வீகம். ஆயுதமே இல்லாமல் வெல்லமுடியும் என்று நிரூபித்தவர். மார்ட்டின் லூதர் கிங் காந்திய வழியைக் கடைப்பிடித்தார். இதற்கும் அவரை பார்த்ததுகூட கிடையாது.

உண்மையாக இருப்பது எளிது. பொய் சொல்வதற்கு நிறைய திறமை வேண்டும். பொய்யை காப்பாற்ற முடியாது. பொய்யை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்.

உணவைச் சமையுங்கள். அன்பைப் பரிமாறுங்கள் .அதனால் நம் உணர்வுகள் பரிமாறப் படுகின்றன.

காந்தியடிகள் நாலு முழவேட்டி கட்டும்போதுதான் அழகாயிருந்தார். வள்ளலாரும் அப்படியே.

மனதில் என்ன இருக்கிறதோ அதுவே முகத்திலும் பிரதிபலிக்கும்.

“அகத்தின் தூய்மைக்கு வாய்மை” என்கிறார் வள்ளுவர். வாய்மையால், உடலை, உள்ளத்தை நிரப்பிக் கொண்டால் பொலிவு தானாக வரும். மகிழ்ச்சியும் வரும்.

நம் திறமையென்பது கால்கள். அதைப் பயன்படுத்தி நடந்தால் போதும். பணக்காரனாகப் பிறக்கவில்லை. அந்த ஜாதியில் பிறக்கவில்லை என்பதெல்லாம் அப்புறம்தான்.

எல்லோர்க்கும் 24 மணி நேரம் தான். பிரதமருக்கும் சராசரி மனிதனுக்கும் ஒரே நேரம்.

மனிதனுக்குரிய ஒரு பின்னடைவு – சோம்பல். அலாரம் வைத்து அதே நேரத்தில் எழுபவர்கள் குறைவு.

இயற்கை சோம்பல் படுவதில்லை. இயற்கைக்கு பல நியதிகள் இருக்கின்றன. அதன்படி நடக்கின்றன.

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற வாழ்க்கை வாழ்கிறோம். கடிகாரத்தை வேகமாக வைத்துவிட்டு நாம் சரியான நேரத்திற்கு வேலை செய்கிறோம்.

உடம்பு தவிர சிறந்த கருவியில்லை. இதற்கு வேறு உபகரணங்கள் தேவையில்லை.

அதிகாலை உலா போனால் உடலும் மனமும் மகிழ்ச்சியடையும்.

“பசி நோக்கார், கண் துஞ்சார்

கருமமே கண் ணாயினர்”

ஈடுபாட்டோடு நிகழ்காலத்தில் வாழ்ந்தால் போதும். அடுத்த கணம் நமக்குச் சொந்தம்.

மனிதனுடைய மிகப்பெரிய எதிரி கோபம். கடவுளிடம் பிரார்த்தித்தால்கூட நடக்காது. கோபம் தேவைதான். ஒழிக்கப்பட வேண்டியதல்ல, தவிர்க்கப்பட வேண்டியது. நல்ல விஷயமாக மடை மாற்றம் செய்ய வேண்டியது. விஷத்தைக்கூட மருந்தாக மாற்றலாம்.

தனிமையில் எல்லா மனிதனும் நல்லவனே. இல்லற வாழ்வில் பிரச்சனைகள் வருகிறது. ஒருவர் மாற்றியொருவர் குற்றம் சொல்லுகிறார்கள். ஒப்பிடுகையில்தான் பிரச்சனை வருகிறது. அடுத்தவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நாமாக இருப்போம்.

சரணாகதித் தத்துவம் இல்லறத்திற்கு ஏற்றது. வெற்றியடைய தோற்றுப்போவது என்பது இல்லறத்தில் மட்டும்தான். தோற்றுப் போனவன் வெற்றியடைவது குடும்பத்தில். இறைவன் கொடுத்திருக்கிற இந்தப் பிறவியில் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

வாழ்வில் சவால்களை சந்திக்கத்தான் சாதனைகள் சாத்தியமாகும்.

வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு முதலில் நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை அழகாக, உண்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உலகம் தந்திர உலகாய், எந்திர உலகாய் இருக்கிறது. தந்திரமாக இருக்கவேண்டியதில்லை. சாதுர்யமாக இருந்தால்போதும்.

நம்முடைய உழைப்பில் மகிழ்ச்சி இருக்கிறது. முயற்சி நம்மை கடைசி வரை காப்பாற்றும். பின்புலம் இல்லையென்று சோம்பியிருக்க வேண்டாம். வலிமையிருந்தால், உள்ளத்தில் ஒளியிருந்தால், நம்மால் முடியுமென்கிற நம்பிக்கையிருந்தால் வல்லமை தானாக வரும். வாய்ப்புகள் நம் வாசலில் வந்து மண்டியிட்டு கிடக்கும்.

தொகுப்பு : சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *