தலைவராக தயாராகுங்கள்..!

– அத்வைத் சதானந்த்

உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? என்று யாரைக்கேட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ அரசியல் தலைவர்களைத்தான் சொல்கிறார்கள். தலைவர் என்ற வார்த்தையே அரசியல் ஆகி விட்டது இன்று. அரசியல்வாதிகளில் இனி உன்னத மானவர்களை காண்பது என்பது அரிதாகி வருவதால் தலைவர் என்ற சொல்லுக்கான மகத்துவமும் மாறி வருகிறது.

தலைவராக வேண்டுமென்றால் அரசியல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். அரசியல் செய்வது என்பது ஆளைக்கவிழ்ப்பது என்கிறார்கள். தலைவர் என்ற வார்த்தை அரசியலில் தரம் இழந்து வருகிற நேரத்தில் இதில் நாம் பேசப் போவது அரசியல் தலைமையை அல்ல, நிறுவனத்திற்கு தலைவர் ஆவதைப்பற்றி. நாம் பணியாற்றும் நிறுவனத்தில் இப்போது இருக்கும் நிலையிலிருந்து உயர்ந்து, தலைமைப் பொறுப்புக்கு தயாராவது எப்படி என்பதைத்தான் இந்தத் தொடரில் விவாதிக்கப் போகிறோம்.

வேலை காலியில்லை என்ற போர்டுகளுக் கெல்லாம் வெள்ளை அடித்து ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று, எல்லா இடங்களிலும் மாட்டி யிருக்கிறார்கள். ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று போர்டு மாட்டாமல் ஓர் இடம் இருந்தால், அவர்கள் நாளை நிறுவனத்தை மூடுவதாக இருக்க வேண்டும் அல்லது நாளைதான் நிறுவனத்தை துவக்கப் போகிறவர்களாக இருக்க வேண்டும்.

எல்லா நிறுவனங்களின் கதவுகளிலும் ஆட்கள் தேவை என்று போர்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. ‘ஆட்கள்’ என்று குறிப்பிடப் படுகிற பணியிடங்களுக்கே இவ்வளவு தேவை இருக்குமென்றால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலைமைப் பொறுப்பிற்கான தேவை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் என்றெல்லாம் வித்தியாசம் இல்லாமல், ‘லீடர்ஷிப் கேப்’ எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறது. வெளியிலிருந்து சரியான நேரத்திற்கு சரியான தகுதிகளோடு தலைமைப்பொறுப்பிற்கு கிடைப்பதில்லை என்பதால் ஏற்கனவே நிறுவனத்தில் உள்ளவர்களுக்கே பயிற்சி கொடுத்து தலைமைப்பண்பிற்கு கொண்டுவர நிறுவனங்கள் தயாராகி விட்டன. ஆனால், பணியாளர்கள்தான் தயாராகவில்லை.

வேறு வழியில்லாமல் இருப்பவர்களில் ஒருவரை தேடிப்பிடித்து தலைவராக்கிவிடலாம் என்று முடிவெடுத்து யாரையாவது தேர்ந் தெடுக்கும்போது அவர்கள் சின்னச் சின்ன தவறுகளில் ஈடுபட்டு, பெரிய வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள். ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைஸர்களுக்கு, தலைவராக தயாராகுங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு எடுக்கச் சென்றிருந்தேன். எல்லோரும் பிளாஸ்டிக் சேர்களில் அமர்ந்திருந்தார்கள்.

பயிற்சி வகுப்பை துவங்கும் முன் அங்கு அமர்ந்திருந்த பொது மேலாளரின் சுழல் நாற்காலியை மேடையில் எடுத்துப்போட்டு, பங்கேற்பாளர்களில் யாராவது ஒருவரை வந்து அமரச்சொன்னேன். தலைவராக யாரெல்லாம் தயாராக இருக்கிறீர்களோ எல்லோருமேகூட வரலாம் என்றேன். ஒருவரும் வரவில்லை. யார் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அவர்களில் ஒருவர் வந்து அமருங்கள் என்றேன்.

எல்லோரும் தயங்கினார்கள். வற்புறுத்தி ஒருவரை இழுத்துப் பிடித்து அமரவைத்தால் அவரும் சீட்டின் நுனியிலேயே கடைசிவரை உட்கார்ந்திருந்தார். அவரை அந்த நாற்காலியில் பொது மேலாளர் என்ற பாவனையில் உட்காரச் சொன்னேன். நன்றாகச் சாய்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக உட்காரச் சொன்னேன். மற்றவர்களையும் அப்படியே கற்பனை செய்யச்சொன்னேன்.

சேரில் உட்காருவதில் ஏதாவது சந்தோஷம் இருக்க முடியுமா? நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் வேண்டுமானால் உட்காருவதில் சந்தோஷம் இருக்கும். பஸ்ஸில் உட்கார சீட் கிடைத்தால் ஏற்படும் சந்தோஷம், சாதாரண சந்தோஷம். தலைவர் நாற்காலியில் உட்காரும் போது கிடைக்கும் சந்தோஷம், சாதனை சந்தோஷம்.

பொதுமேலாளரின் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவரிடம் ஹாலில் இருந்த எல்லோரையும் உங்களை பொதுமேலாளராக நினைத்துக்கொண்டு பாருங்கள் என்றேன். அவர் முகத்தில் பெருமிதம் தெரிந்தது. உள்ளுக்கு தலைவராகும் ஆசை உருவாகியிருப்பதை உணர முடிந்தது. எல்லோரிடமும் சொன்னேன். ‘தலைவராக ஆசைப்படுவதுதான் தலைவராவதின் முதல் தகுதி.’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *