– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
திசைகள் தோறும் வாய்ப்புகள் இருக்கும்
திறமைகள் இருந்தால் வாவென அழைக்கும்.
அடுத்த நாள் கல்லூரிக்கு உற்சாகத்தோடு எனது இலட்சியத் தீர்மானங்களோடும் வந்தேன். ஆனால், கல்லூரியில் சோகம் தோய்ந்த முகத்தோடும் கலங்கிய கண்களோடும் கல்லூரியின் வளாகமெங்கும் மாணவர்கள் கூட்டங்கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எனது வகுப்பறையின் முன்பாக நின்று கொண்டிருந்த எனது வகுப்பு நண்பர்கள் அசோக்குமார், முரளி மற்றும் கமால்தீன் ஆகியோரிடம், ”என்ன நடந்தது? எல்லோரும் எதற்காக வெளியில் நிற்கிறீர்கள்?” என்ற வினாக்களை மெதுவாகத் தெளித்தேன்.
”நம்ம டிப்பார்ட்மெண்ட் புரபசர் கிருஷ்ண சாமியும் ஹாஸ்டல் வார்டன் ரங்கசாமியும் நேத்து ராத்திரி கவுண்டம்பாளையத்தில் ஸ்கூட்டரில் சொல்லும்போது லாரி மோதி ஸ்பாட் அவுட்” என்று சொன்னான் கமால்தீன். ”அவங்க பாடி கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் இருக்கின்றது” என்றான் முரளி. ”நாம போய் பார்க்கலாமா?” என்றேன் நான்.
”அங்கு நாம் போவதற்கு முன்னாடி யாரிடமாவது சொல்லி ஒரு இரங்கல் கவிதை எழுதி வாங்கி, அதை நம்ம டிப்பார்ட்மெண்ட் சார்பிலே அச்சடித்து எல்லோருக்கும் கொடுக்கலாம்” என்ற யோசனையை முன் வைத்தான் அசோக்குமார்.
அதற்கு, ”நானே எழுதித் தர்றேன். நல்ல இருக்குதான்னு பாருங்க. நல்லாயில்லாட்டி வேறு யாராவதிடம் வாங்கிக் கொள்ளலாம்” என்று நான் மெல்லிய குரலில் தயக்கத்தோடு சொன்னேன்.
”சரிடா, முதலே இவனே எழுதட்டும். டேய் முரளி, நோட்டிலிருந்து ஒரு வெள்ளைப் பேப்பர் கிழித்துக் கொடு” என்றான் கமால்தீன்.
கமால்தீனுக்கு எப்பொழுதும் வேகம் அதிகம். எதையும் செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பான். இப்பொழுதும் அப்படித் தான் அவர் இருக்கிறார். உள்ளத்தின் அன்பை வெளிப்படுத்துவதில் அவர் எப்பொழுதும் முந்திக் கொள்வார். அத்துடன் புதிதாக முயற்சிக்க எப்பொழுதும் அவர் தயங்கியதே இல்லை.
சில நிமிடங்களில் நான் சில வரிகளை எழுதி நண்பர்களிடம் காண்பித்தேன். அதற்குள் என் வகுப்பில் படிக்கும் அனைவரும் அங்கு வந்து கூடி விட்டனர். ”எல்லோருக்கும் கேட்கும்படியாக நீயே சத்தமாகப் படி” என்றான் ஈசுவரமூர்த்தி.
சரி என்று நான் எழுதியிருந்ததைப் படித்தேன். அந்த வரிகளில் சில இன்னும் நெஞ்சில் கனக்கின்றன. அவை,
”எங்களின் எதிர்காலத்தை
உதடுகளில் உச்சரித்த
உதயக்கிழக்கே!
அதற்குள் நீயேன்
அஸ்தமனமாகி விட்டாய்!
நீ
திருமணமாகாத தனிமரம்தான்
என்றாலும்
ஓலைமரமல்ல
ஆலமரம்!
உனது தங்கநிழலில்தானே
மாணவக்குடும்பமே
தங்கியிருந்தது!
நீ சாய்ந்த பிறகு
நாங்கள்
எங்கே தங்குவது?”
அன்று எழுதிய முழு கவிதையும் இப்பொழுது நினைவுக்கு வரவில்லை. அது சிறிய தாளில் நான்கு பக்கங்களுக்கு சென்றது. நான் வாசித்து முடிக்கும் முன்னரே, நண்பர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், ”மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இந்த இரங்கல் கவிதையை அச்சடித்து காலேஜ் முழுவதும் கொடுக்கலாம். அதற்கு ஆகும் செலவை எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம்” என்றார்கள். அவ்வாறுதான் முதன் முதலாக எனது வரிகள் அச்சுக்குதிரையில் அமர்ந்து கல்லூரி முழுவதும் பறந்து பறந்து இரங்கல் கூறி அமரத்துவம் எய்திவிட்டது.
வாய்ப்பின் கதவுகளைத் திசைகள் தோறும் திறந்துதான் இருக்கின்றன. தயக்கமின்றி முயற்சித்தல் வேண்டும். ஒதுங்கி நின்றால் இந்த உலகம் நம்மை ஒதுக்கி விட்டு ஓடி விடும்.
கபடமற்ற நெஞ்சோடும் தோழமையுரிமை யோடும் எனக்குத் தோள் கொடுத்த நண்பர்களை நினைக்கும்போது எனது விழிகளில் கண்ணீர்த் துளிகள் கரையைக் கடந்து விடுகின்றன. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நட்பு ஒருவருக்கு கிடைத்து விட்டால், அதுதான் அவரின் மகிழ்ச்சிக்கும் முயற்சிக்கும் மூலதனமாகின்றது. நல்ல நண்பர்கள் வெற்றியின் சிறகுகளாகி அகன்ற வானத்தை நமக்கு அடிமைப்படுத்தி விடுகிறார்கள். ஆகவே, நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். நட்பு என்பது கணிதமல்ல; கணக்குப் பார்த்துப் பழகுவதற்கு. நட்பு என்பது வரலாறு அல்ல; அதை மறந்து விடுவதற்கு. நட்பு என்பது மொழியல்ல; அதை மொழிமாற்றம் செய்வதற்கு. நட்பு என்பது ரசாயனம்; அதுதான் இரண்டு இதயங் களுக்கிடையே இயக்கங்களைத் தீர்மானிக்கிறது.
பள்ளியில் ஏற்படும் நட்பு, பாதியிலேயே நிற்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், கல்லூரியில் ஏற்படுகின்ற நட்பு கல்லறை வரை தொடரும் என்பதில் எவ்வித ஐயமில்லை.
கண்ணீரில் நனைந்து, எனது வரிகள் உயிர் பெற்றெழுந்ததைப்போல அப்பொழுதுதான் உணர்ந்தேன். இரங்கல் கவிதை வாசித்த பேராசிரியர்களும் இதர வகுப்பு மாணவர்களும், ”உணர்ச்சி பொங்க ஆழ்மனதில் இருந்து எழுதி இருக்கிறாய்” என என்னிடம் கூறினார்கள். மனம் முழுக்க வருத்தமும் சோகமும் போட்டி போட்டுக் கொண்டு முகாமிட்டிருந்த வேளையில், என்னிடமிருந்த ஒரு பொறி சிதறியதாக உணர்கிறேன்.
எந்தவோர் இருளிலும் ஓர் ஒளி இருக்கின்றது; எந்த வெளிச்ச வெள்ளத்திலும் ஓர் இருள் குவியல் ஒளிந்திருக்கிறது என்பார்கள். அது உண்மைதான் போலிருக்கிறது. அதன்பிறகு, பேராசிரியர்களிடம் எனக்கு ஒரு நன்மதிப்பு ஏற்படத் தொடங்கியதை நான் உணர்ந்தேன். இன்னும் சிறப்பாக கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தீப்பிடிக்கத் தொடங்கியது.
எதைப் பார்த்தாலும், அதைப்பற்றி ஏதாவது கிறுக்குவது, அதை நண்பர்களிடத்தில் காண்பிப்பது என்றாகி விட்டது.
அதனால், சிலர் என்னைப் பார்த்ததும் ஓடி விடுகின்ற அபாயமும் நிகழ்ந்ததுண்டு. ”ஏண்டா அறுக்கிற” எனச் சிலர் சொல்வார்கள். ”சிறந்த கவிஞனாக வருவாய்” என்று வாழ்த்துவதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்தது. பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா என்று பலரும் புனைபெயரில் எழுதுவதை அறிந்த நானும் எனக்கென்று ஒரு புனைபெயரை வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
கவிஞர் மேத்தாவின் ”கண்ணீர்ப் பூக்கள்” எனும் கவிதைத்தொகுப்பை அழகாக கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டிருந்தது.
அதன் விலை ரூபாய் பத்து. அதை வாங்கிப் படித்துக் கொண்டிருந்தபோது, ஏன் ‘மேத்தாதாசன்’ என்று வைத்துக் கொள்ளக்கூடாது? என்றும் யோசித்தேன்.
எனது நண்பர்கள் சிலரிடம் இது குறித்து கேட்டபோது, ”ஏற்கனவே மேத்தாதாசன் என்றொருவர் இருக்கிறார். ஆகவே, நீ வேறு பெயர் வைத்துக்கொள்” என்றனர்.
அத்தோடு, சில பெயர்களையும் முன்மொழிந்தனர். அவை என்ன வென்றால், ”கண்ணதாசதாசன், பாவேந்தர்தாசன், புரட்சிதாசன்” என்பதாகும்.
இன்னொருவர் சொன்னார், ”ஏதாவது பெண் பெயரை வைத்துக்கொண்டு எழுது. அப்பொழுதுதான், பத்திரிகைக்காரர்கள் வெளியிடுவார்கள்.
‘சுஜாதா’வெல்லாம் அப்படித்தான் எழுதுகின்றார்” என்றதோடு நிற்காமல் எனக்கு ஒரு பெண் பெயரையும் முன்மொழிந்தார். அது என்னவென்றால்?
– திசைகள் விரியும்
Leave a Reply