திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

– சிந்தனை கவிஞர் கவிதாசன்

“நண்பர்கள் நம்மைப் பறக்க வைக்கிறார்கள்;
வீழும் போதெல்லாம் தாங்கி நிற்கிறார்கள்”

“எனக்குப் புனைபெயர் சூட்டுவதில் நண்பர்கள் தீவிரமாக இருந்தார்கள். பலரும் பல பெயர்களை முன்மொழிந்த நிலையில் “கவிதா” என்று புனைபெயர் இறுதியாக தேர்வானது.

அதை நானும் ஏற்றுக் கொண்டு “கவிதா” என்ற புனைபெயரில் எழுதலாம் எனத் தீர்மானித்தேன். அப்பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “கலைமகளே! கவி, தா” என்று அதைப் பிரித்துப் படித்துக் காட்டினேன். நண்பர்களும் அதை ரசித்து மகிழ்ந்தார்கள்.

நட்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று இயற்கையான நட்பு . அவர்கள் எந்தவித எதிர் பார்ப்பும் இல்லாமல் செம்புலத்து நீர் போல கலந்து விடுவார்கள். இரண்டாவது வகை தேவையின் அடிப்படையில் . எதிர்பார்ப்புகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள் பவர்கள். மூன்றாவது வகை பகையுணர்வோடு கூட இருந்துகொண்டே நன்மை செய்வதைப் போலவே தீமை செய்பவர்கள்.

இதில் முதல்வகை நண்பர்களே நல்லவர்கள்; அவர்கள் முன்னேற்றத்திற்கு ஏணியாகவும் நமது துன்பத்திற்கு சாய்ந்து கொள்ளும் தோளாகவும் இருப்பவர்கள். அத்தகைய நண்பர்களே ஒருவனை உயர்த்தும் உன்னத சக்தி. மேலும் அத்தகைய நல்ல நண்பர்களைப் பெற்றால் சிறு துரும்பும் சிகரமாய் உயரும் என்பது உறுதி. அத்தகைய நண்பர்களைப் பெற்றதால் கல்லூரிக் காலத்திலேயே கவிதை வானில் சிறகு விரிக்கத் தொடங்கினேன்.

கோவை அரசுக் கலைக் கல்லூரியில், ஆண்டுதோறும் நடை பெறுகின்ற மாணவர் பேரவைத் தேர்தல் வந்தது. அது நாட்டின் பொதுத் தேர்தலைப் போல மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். ஒவ்வொரு கட்சியும் மாணவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும். ஆம்! ஒவ்வொரு மாணவவேட்பாளரும் தான் ஏதாவது ஒரு கட்சியைப் பின்னணியைக் கொண்டவராகவே வெளிகாட்டிக் கொள்வார். அரசியல் கட்சிகள் மாணவர்களை பகடைக்காய்களாக உருட்டி விளையாடுவதும், அவர்களுக்கிடையே மோதல் கள் நிகழ்வதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்த காலம் அது. கத்திக்குத்து நிகழ்ந்ததும் உண்டு. கள்ள ஓட்டு போட முயன்றவர்களும் உண்டு. நினைத்தாலே பிரமிப்பை உண்டு பண்ணும் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகவே அரங்கேறியதுண்டு!
அத்தேர்தலில், மாணவத்தலைவர், மாணவச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய மூன்று பதவிக்கு நேரடித் தேர்தல் மூலமாக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நான் அரசியல் படித்தாலும் அதிலெல்லாம் எனக்கு ஆரம்பத்தில் நாட்ட மில்லை.

மாணவ பேரவைத் தேர்தல் முடிந்ததும், தமிழ் மன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப் பட்டது. அப்பொழுது, தனியாக தமிழில் இளங்கலைப் பட்ட வகுப்போ, முதுகலை வகுப்போ இல்லாததால், இளநிலை பட்ட வகுப்பில் தமிழை மொழிப்பாடமாகப் படிக்கும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு அனைத்து மாணவர்களும் நேரடியாக ஓட்டளித்து தமிழ்மன்றத்தின் செயலாளர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

எனது கவிதை ஆர்வத்தையும், தமிழ் ஆர்வத்தையும் பார்த்த எனது வகுப்பு நண்பர்களும் எனது சீனியர் நண்பர்களும், என்னைத் தமிழ் மன்ற இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும்படி தூண்டி வற்புறுத்தினார்கள். நானும் முதலில் மறுத்துப் பார்த்தேன். ஆனால் அவர்கள் என்னை விடுவதாக இல்லை. முயற்சி செய்து முடிந்தால் வெல்வோம். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

பற்பல விவாதங்களுக்குப் பிறகு, தேர்தலில் போட்டியிட நான் சம்மதித்தேன். வேட்புமனுவும் தாக்கல் ஆகிவிட்டது. பிறகு ஒவ்வொரு வகுப்பாக நண்பர்களுடன் சென்று எனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டோம்.

“உயிர் தமிழுக்கு; உடல் மண்ணுக்கு” என்ற வாசகத்தோடு, எனது வாக்களிக்கக் கோரும் கைப்பிரதிகளை அச்சிட்டு கல்லூரி முழுக்க விநியோகம் செய்தார்கள். அதில் கூடவே எனது புனைபெயரான “கவிதா” என்பதையும் எனது அருகில் அடைப்புக் குறிக்குள் போட்டி ருந்தார்கள் எனது நண்பர்கள் நாராயணசாமி, பாலசுந்தரம், ஈஸ்வரமூர்த்தி, கமால்தீன், முரளி, ஜேம்ஸ் பால் போன்றவர்கள். ஆனால், தமிழ்மன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி எனது தந்தை யாருக்குத் தெரிவிக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவருக்குத் தெரிவித்துக் கொள்ளலாம் என்று நண்பர்கள் சொல்லியிருந் ததால் அதுவும் சரி! என்று நான் சொல்லவில்லை என்றாலும் எனது மனம் பெற்றோருக்கு தெரியாமல் செய்வது சரியில்லை என்பதை மட்டும் அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. வெற்றி பெற்ற பிறகு சொல்லி சந்தோஷப்படுத்தலாம் என்று இன்னொரு மனது எனக்குள்ளாகவே என்னைச் சமாதானம் செய்துவிட்டது.

ஆனால், எதிர்பார்த்த வெற்றிக்கனி எனக்குக் கிடைக்கவில்லை. நான் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தேன். ஆனால் அதற்காக மனம் தளர்ந்து விடவுமில்லை. வருத்தப்படவுமில்லை. தோல்வி என்பது ஒரு முடிவல்ல. அது திருப்புமுனை என்பதை உணரத் தொடங்கினேன். தோல்விகள் நம்மைச் செதுக்கும் உளிகள். ஆம்! அதிக ஆற்றலோடு மீண்டும் முயல வைக்கும் உந்து சக்தியாகவே அதைக் கருத வேண்டும்.
தோல்விகள் நேரும்போது கவலைப் படக் கூடாது. ஏனென்றால் கவலைப்படுவதால் மட்டும் கவலைகள் கவலைக்கிடமாவதில்லை. ஆகவே தோல்வி ஏற்படும்போது துவண்டு முடங்கி விடாமல் தோல்வி ஏன் நேர்ந்தது எனச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். கவலைப்படுவதென்பது வேறு, சிந்தித்தல் என்பது வேறு. இவ்வாறு நடந்து விட்டதே என வருந்துவதுதான் கவலைப்படுவ தாகும். இவ்வாறு ஏன் நிகழ்ந்தது அடுத்த முறை இவ்வாறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பதே சிந்திப்பதாகும்.

ஆம்! தோல்வியடைவது வருத்தத்திற்குரியது அல்ல. அத்தோல்வியில் இருந்து ஏதாவது ஒரு பாடமாவது கற்றுக் கொள்ளாமல் இருந்து விடுவதுதான் வருத்தத்திற்குரியதாகும். தமிழ்மன்றத் தேர்தலில், நான் ஏன் தோல்வியடைந்தேன் என்பது குறித்து நண்பர்களோடு சேர்ந்து ஆராய்ந்தோம். அதில் ஓர் உண்மை தெளிவானது. அதாவது அறிவியல் சார்ந்த பட்டங்களைப் படிக்கும் மாணவர்கள், அறிவியல் பிரிவில் இருந்து போட்டி யிட்ட மாணவர் திரு. சவுந்திரராஜனுக்கும், கலைப் பிரிவு பட்டங்களைப் படிக்கும் மாணவர்கள் எனக்கும் வாக்களித்துள்ளார்கள் என்பதும் அறிவியல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள், கலைப்பிரிவு படிக்கும் மாணவர்களைவிட எண்ணிக்கையில் அதிகம் இருந்ததே எனது தோல்விக்கு காரணம் என்பதை உணர்ந்து கொண்டோம்.

அவ்வாறு தோல்விக்கான காரணத்தை உணர்ந்து கொண்ட பிறகு, அதை சரி செய்து செல்ல வேண்டும் என்ற வேகம் என்னுள் புகுந்தது. அதன் காரணமாக, நான் அங்கம் வகித்த தேசிய மாணவர் படைமற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (சநந) ஆகிய அமைப்புகளில் அங்கம் வகித்த அறிவியல் பிரிவு சார்ந்த மாணவர்கள் எனது கவிதையின் மீதும் பேச்சாற்றலின் மீதும் ஈடுபாடு கொண்டு எனது நண்பர்கள் ஆனார்கள்.

நான் இரண்டாம் ஆண்டு பட்ட வகுப்பிற்குச் செல்லும்போது, கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நான் அறிமுகமாகியிருந்தேன். அப்பொழுதும் எனது நண்பர்கள் தமிழ் மன்றச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுமாறு என்னை வற்புறுத்தினார்கள். அத்துடன், ஏற்கெனவே ஏற்பட்ட தோல்வியை வெற்றியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

முடிந்தவரை
முயற்சிப்பதல்ல முயற்சி!
எடுத்ததை முடிக்கும் வரை
முயற்சிப்பதே முயற்சி!

என்று உறுதியோடு, தமிழ்மன்றச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது என்று தீர்மானித்தேன்.

மாணவர் பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர், யானையைக் கொண்டு வந்து அதன்மீது அமர்ந்தவாறு, கல்லூரி முழுக்க வலம் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவர் அப்படி செய்ததைப் பார்த்த நானும், ஏதாவது புதுமையான முறையில் கல்லூரியை வலம் சென்று அதன் பின்னர் எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்று எண்ணி நண்பர்களிடம் விவாதித்தேன்.

எங்களுடைய வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பாலசுந்தரத்திடம் பேசி, அவருடைய குதிரையைக் கொண்டு வரச் செய்தார்கள் நண்பர்கள். நான் அதன்மீது ஏறிக் கொண்டு கல்லூரி முழுக்க வலம் வரவேண்டும் என்றும், அதன் பின்னர்தான் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நண்பர்கள் உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அது வரையில் குதிரையின்மீது ஏறிப் பழக்கமில்லாத நான், நடுங்கிக் கொண்டே குதிரையின் மீது ஏற முற்பட்டபோது நான் தாவியதும் குதிரையும் தாவியது. அதன் விளைவாக பலமுறை விழுந்தேன். ஆனால் நான் எனது முயற்சியில் இருந்து பின் வாங்குவதாகயில்லை என்று முடிவோடு ஒருவாறாக குதிரையின் மீது ஏறி அமர்ந்ததும் பாலசுந்தரம் அதைப் பிடித்துக் கொள்ள, நண்பர்கள் புடை சூழ கல்லூரி முழுக்க வலம் வந்தோம்.

வேட்பு மனுத்தாக்கல் நடந்து முடிந்ததும், எதிர்பார்த்த தேர்தலும் வந்து சென்றது. தேர்வு முடிவுகளை விட தேர்தல் முடிவுகளை நோக்கிக் காத்திருந்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *