கல்வி கரையில
இது, பழம்பாடல் ஒன்றின் தொடக்கவரி. இருபத்தோராம் நூற்றாண்டில் இந்த வரிக்கென்று இன்னும் பல பொருளுண்டு. கல்வி நிலையக் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சை பல ரூபங்கள் எடுத்து, பள்ளி உண்டு பாடம் இல்லை என்னும் நிலை வரை கொண்டு வந்துவிட்டுள்ளது.
மருத்துவம் மனிதனின் அடிப்படை உரிமை. ஆனால் அவரவர் தேர்வுக்கேற்ற மருத்துவம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. உணவு அடிப்படை உரிமை. அதிலும் அவரவர் தேர்வுக்கேற்ற தானியங்கள் வாங்கும் உரிமை இருக்கிறது.
மனிதனின் மற்ற அடிப்படைத் தேவைகளான உடை, உறையுள் போன்றவற்றிலும் தேர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் தங்கள் பிள்ளை களுக்கு என்னவிதமான கல்வியைத் தர வேண்டு மென்று தேர்வு செய்யும் உரிமை பெற்றோர்களுக்கு மிகவும் அவசியம்.
கல்வியில் சமச்சீர் திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்கிற போதே பல பள்ளிகள் சி பி எஸ் இ தகுதி பெற விண்ணப்பித்து, பல நிறுவனங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. எனவே சமச்சீர் கல்வி எல்லோராலும் ஒருமித்த குரலில் ஏற்கப் படவில்லையென்று தெரிகிறது. பாடத்திட்டம் தரமாக இல்லையென்றும கல்வியாளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளுடன் மோதக்கூடிய சூழலில் தரமுயர்ந்த கல்வியை, தொட்டனைத்தூறும் மணற்கேணி போல் எளிமையாகத் தரவேண்டிய காலகட்டம் இது. இன்னொருபுறம், அரசுப்பள்ளி ஆசிரியர்களும் தொடர் பயிற்சிகளுக்கும் நெறி காட்டுதலுக்கும் மேலும் ஆளாக்கப்பட வேண்டும்.
இன்னொரு புறம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் போல் சம்பள விகிதம் சமச்சீராகத் தரப்பட வேண்டும். கல்வியின் தரம் நாளுக்குநாள் மேம்படுவதில் எல்லாத் தரப்பினரும் அக்கறை செலுத்தி அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக் கனவுகளும், வல்லரசுக் கனவுகளும் மலர வாய்ப்பளிக்க வேண்டும். கல்வியே நிலையான செல்வம் என்ற திருவள்ளுவரின் தீர்ப்பு திசைகளெங்கும் எதிரொலிக்கட்டும்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி- ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”
Leave a Reply