– ருக்மணி பன்னீர்செல்வம்
மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற சிற்பங்களில் ஒன்று ‘தாவீது’ சிற்பம். இந்த சிற்பம் உருவான கதை மிகவும் சுவாரசியமானது. அது மட்டுமின்றி மற்றவர்களை ஊக்கப்படுத்தக் கூடியதுமாகும்.
இத்தாலி நாட்டின் புகழ்மிக்க சிற்பி அகஸ்டினோ அன்டானியோ. இவர் சிற்பமொன்றினை வடிப்பதற்காக மிகப்பெரிய சலவைக்கல் ஒன்றை தேர்ந்தெடுத்து செதுக்கத் தொடங்கினார். எப்படிச் செதுக்கியபோதும் ஏனோ அவரால் அக்கல்லில் சிற்பத்தை வடிக்க முடியவில்லை. எவராலும் இக்கல்லில் சிற்பம் வடிக்க முடியாது என்று கூறிச் சென்றுவிட்டார் அகஸ்டினோ.
இத்தாலி நாட்டின் மற்ற சிற்பிகளும் அக் கல்லில் சிற்பம் செதுக்க முயன்று முடியாமல் கை விட்டுவிட்டனர். அப்போது ‘தன்னால் முடியும்’ என்று முன்வந்தவர்தான் மைக்கேல் ஏஞ்சலோ.
உளியைக் கையில் எடுத்து அக்கல்லினை செதுக்க முற்பட்டபோது மற்ற சிற்பிகளாலும் மற்றவர்களாலும் பெரிதும் கேலிக்கு ஆளானார் ஏஞ்சலோ. ”இத்தனை பேர் முயன்றபோதும் முடியாதது உன்னால் மட்டும் எப்படி முடியும்?” என்று ஏஞ்சலோவை உற்சாகமிழக்கச் செய்யும் வார்த்தைகள் வந்து விழுந்தன.
அவற்றை பொருட்படுத்தாத மைக்கேல் ஏஞ்சலோ ‘நமது நம்பிக்கைதான் நம்முடைய மாபெரும் உந்துசக்தி’ என்று அவர்களுக்கு தெரிவித்துவிட்டு செதுக்கத் தொடங்கினார். மற்றவர்களால் கைவிடப்பட்ட கல்லில் அப்போது உருவாக்கப்பட்டதுதான் ‘தாவீது’ சிற்பம்.
பல நேரங்களில் வல்லுனர்களால் இயலாது என்று கைவிடப்பட்ட கடுமையான பணிகளை எடுத்து மிகச் சாதாரணமானவர்கள் சாதித்துக் காட்டி புகழ்பெற்றுள்ளார்கள். நாம் மேற் கொண்டுள்ள பணியில் நெருக்கடிகளை சந்திக்கும் போது பிறரைக் குறிப்பிட்டு நாம் அடிக்கடி பேசும் அல்லது கேட்கும் வசனங்கள்,
”அவர் எப்படிப்பட்ட செல்வாக்குப் படைத்தவர், அதி புத்திசாலி, அவராலேயே முடியாதபோது, நாம் சாதாரணமானவர்கள் நம்மால் மட்டும் எப்படி இது சாத்தியப்படும்? வேண்டாம். இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. விட்டுவிடுவோம்.”
கடைசிவரை முயற்சி செய்யாமல் பாதியிலேயே, இழப்பு வந்தால் பரவாயில்லை விட்டுவிடுவோம் என்கின்ற மனப்பான்மையை மாற்றுக்கோணங்களில் முயன்று பார்த்து விட்டால்தான் என்ன? என்று ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது?
சாக்குமூட்டைகள் நிரம்பிய அறையில் வெளிச்சம் பிரகாசிக்கும் வாய்ப்புகள் இல்லை. சாக்குபோக்கு சொல்பவர்கள் வாழ்வில் வெற்றிகள் பிரகாசிக்கும் வாய்ப்புகள் இல்லை.
மேற்குவங்கத்தின் மாபெரும் சமூகப் புரட்சியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். தன் நண்பர்க ளோடு சேர்ந்து பலரிடமும் நன்கொடைகளை திரட்டுவதற்காக பக்கத்து மாநிலங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டுவந்தார்.
செல்வாக்குமிக்க நவாப் ஒருவரைச் சந்தித்து நன்கொடை வேண்டி நின்றார் வித்யாசாகர். மக்களின் அறியாமையை அகற்றி கல்விக்கண் திறக்கும் நோக்கோடு, பல்கலைக் கழகம் அமைக்க நன்கொடை வேண்டும் வித்யாசாகரின் முயற்சியைப் பாராட்டாமல், ஆணவத்தோடு தன்னுடைய ஷூ ஒன்றை கழற்றி அவரின் பையில் போட்டார் அந்த நவாப்.
நவாப்பின் இச்செயலால் அதிர்ச்சியோ, மனத்தளர்ச்சியோ அடையாத ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்கள் புன்முறுவலோடு நவாப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த ஷூவை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
அடுத்த நாள் நவாப்பின் அரண்மனைக்குச் சற்றுதூரம் தள்ளி ஒரு ஏலவிற்பனைக்கு ஏற்பாடு செய்தார் வித்யாசாகர். ”பெருமதிப்பு மிக்க நவாப் அவர்களின் ஒற்றை ஷூ ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்” என்று கூறியவுடன் நவாப்பின் ஷூ பெருந் தொகைக்கு ஏலம் போனது. இந்தச் செய்தி உடனடியாக நவாப்பின் காதுகளுக்கும் எட்டியது.
தன் ஷூ ஏலத்தில் விடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்த நவாப் உடனடி யாக வித்யாசாகரை தன் அரண்மனைக்கு வர வழைத்தார்.
தான் அவமானப்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாமல் அதையே வெகுமானமாக்கிய’ வித்யாசாகரின் செயலைப் பாராட்டி விட்டு அந்த ஷூ ஏலம்போன தொகையளவிற்கு நன்கொடையும் கொடுத்தனுப்பினார்.
துளையிடுதலை பொறுத்துக் கொள்ளும் மூங்கில்தான், புல்லாங்குழலாகி இதழ்களோடு உறவாடி, இனிய இசைதந்து காற்றின்வழி காதுகளை வருடி நம் மனங்களை கொள்ளை கொள்கிறது.
துளையிடும்போது வலிபொறுக்காமல் உடைந்துபோகும் மூங்கில்கள் விறகாகி எரிந்து போகின்றன. நம்மோடு வாழும் பிற உயிரினங்களின் படைப்புத் திறனும், ஆற்றலும் நம்மை எப்போதுமே ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. எத்தனை முறை ஒட்டடை அடித்தாலும் அடுத்த நாள் காலை பார்க்கும்போது தன் இழை கொண்டு வலைபின்னி விடுகிறது சிலந்தி.
தேனீக்களின் கூட்டையும், தூக்கணாங் குருவியின் அடுக்கு அறைகள் கொண்ட கூட்டையும் இன்னும் எத்தனை அறிவியல் வளர்ச்சி கண்டாலும் நம்மால் உருவாக்க முடியாது. அனேகமாய் அவற்றைப் பார்த்துத்தான் நம் வீடுகளில் உள்ள பல அறைகள் உருவாகியிருக்கக் கூடும். ஆறடி உயரம் கொண்ட மனிதனின் கண்களுக்குக் கூட வசப்படாத தேன், அவனின் நகக் கண் அளவே உள்ள தேனீக்கு வசப்பட்டு விடுகிறது.
நம் கண்களின் முன்னே நிகழும் நம் கைகளுக்கு வசப்பட முடியா செயல்கள் எல்லாமே நமக்கு சவால்கள்தான். இது நாம் ஈடுபட்டிருக்கும் துறை சார்ந்து மட்டுமல்ல மற்றவற்றிற்கும் பொருந்தும்.
நமக்கு வசப்பட வேண்டிய செயல்கள் இன்னும் எவ்வளவோ உள்ளன என்னும்போது நம்முடைய நிலையில் இன்னும் எந்தளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டியுள்ளது என்பதை எப்போதும் கருத்தில் கொள்வது அவசியம்.
”வார்த்தைகளை விட வலிமை படைத்தவை செயல்கள்தான்” என்கின்ற முதுமொழிக்கு இலக்கணம் படைத்தவர்களை (பறவைகள் விலங்குகளாயிருந்தாலும் படைத்தவைகளையும் கூட) நமக்கு முன்னோடி களாக நாம் எடுத்துக் கொள்ளும் போதுதான் நம்முடைய இலக்குகள் கைவசப்படும்.
Leave a Reply