நமது பார்வை

உலகெங்கும் 137 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்திருக்கிற நிலையில் அந்தப் பட்டியலில் தாமதமாகவேனும் சேரும் வாய்ப்பு இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய வர்கள் என்ற நிலையில் சிறையிலடைக்கப்பட்டு கால வரையறையே இல்லாமல் சிறையில் கிடந்து, வாழ்வின் வசந்தங்கள் வற்றிப்போன நிலையில் தூக்கு தண்டனை என்பது தனிமனித உரிமைகளுக்கு முற்றிலும் முரணானது.

தீர்ப்பு விதித்த நீதிபதி தாமஸ், புலனாய்வு உயர் அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இன்று தந்திருக்கும் எண்ணமும், மூவருக்கான தூக்கு தண்டனையை ரத்து செய்யலாம் என்பது தான்.

தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் கருணை மனுக்கள் மீது அன்றைய குடியரசுத் தலைவர் கலாம் எழுதிய குறிப்புகளைக் கணக்கில் எடுக்காமல் போகும் அளவு மத்திய அரசின் மறதிக்கு என்ன காரணமோ நாமறியோம்.

இதை ஓர் இயக்கத்தின் விருப்பமாகவோ பீடங்களை ஆள்பவர்களின் மனநிறைவுக்கான மார்க்கமாகவோ பாராமல் மனித குலப் பண்பாட்டு வளர்ச்சியின் முக்கிய அங்கமாய்க் காண வேண்டியுள்ளது.

மரணதண்டனையை நீக்கும் முக்கிய முடிவு நோக்கி இந்தியா நடையிட வேண்டிய காலம் வந்துவிட்டது. நமது நம்பிக்கை, கோடிக் கணக்கான இந்தியர்களுடன் இணைந்து இந்த நினைவூட்டலை முன்வைக்கிறது. இந்த இதழின் முதல் பக்கமும் கடைசிப்பக்கமும் இதையே சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *