கைவிளக்கு

– இசைக்கவி ரமணன்

பள்ளம் அழைத்தா பாய்ந்தது வெள்ளம்
பாய்தல் நீரின் இயல்பு!
பாதை போடும் பச்சைப்புல்லும்
பழகிய உழைப்பின் சிரிப்பு!
உள்ளம் உணர! உடலோ உழைக்க!
உயிரோ ஒளியை ஊட்ட!
ஒருநாள் உள்ளே கதவு திறக்கும்
உண்மையை உண்மை காட்ட!

3. நீங்கள் யாராக அல்லது என்னவாக ஆக விரும்புகிறீர்கள்? What or who do you want to become?


இந்தக் கேள்வியை நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய கேள்விகள் எதையுமே நாம் நம்மிடம் கேட்டுக் கொள்வதே நல்லது. ஆலமரத்தை அடக்கி வைத்த படிதான் விதை ஒரு விழிப்புக்காகக் காத்திருக்கிறது. அதுபோல் ஒவ்வொரு கேள்வியும் அதற்கான விடையின் ஒரு பகுதியைத் தாங்கித்தான் எழுகின்றன. அறவே விடை தெரியாத கேள்விகள் நம் அகத்தில் எழுவதில்லை. நாம் வாழ்வில் அனுபவமுள்ளவர்கள், நன்கு கல்வி கற்றவர்கள், நமது நலம்விரும்பிகள் இவர்களிடம் ஆலோசனைகள் கேட்பதில் தவறே இல்லை. சொல்லப் போனால் அதுதான் முறை. சரியான முடிவுக்கு நாம் வருவதற்கு அதுவே வழி. ஆனால் முடிவு என்பதை நாம்தான் எடுக்க வேண்டும்.

நாம் எடுக்க வேண்டிய முடிவை மற்றவர்களை எடுக்கவிடுவது நமது பல வீனத்தையே காட்டும்.

குட்டையில் நிட்டையில் இருக்கும் எருமைகள், கொப்பில் உயிரை இசையாக்கிக் கொட்டும் குயில் இவைபோன்ற தொடர்பற்ற விதி விலக்குகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் நாம் எல்லோரும் எதுவாகவோ ஆகத்தான் விரும்புகிறோம் என்பது புரியும். நான் அதுவாக வேண்டும் இதுவாக வேண்டும் என்னும் ஆர்வம் எதைக் காட்டுகிறது தெரியுமா?

1. சலனம் அல்லது ஓட்டமே தனது தன்மையான மனித மனம்

2. தான் யார் அல்லது என்ன என்பது தெரியாததால் ஏதோவாக ஆக வேண்டும் என்ற நமைச்சல்

3. மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு அதனால் விளையும் பரபரப்பு

ஒன்றும் மூன்றும் தவிர்க்க முடியாதவை. அவற்றை எப்போதும் நியாயப்படுத்திவிட முடியாது என்றாலும்கூட! இரண்டாவது அடிப்படையில் ஆன்மிகப் பிரச்சனை. மேல் மட்டத்தில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சரியாக அறியாததால் வருவது. எனவே அதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். முன்பு குறிப்பிட்டதுபோல் (1) நாம் எங்கே இருக்கிறோம்? (2) நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் நமக்கு தெளிவு நேர்ந்தால்தான் நாம் என்னவாக விரும்புகிறோம் என்னும் கேள்வியைச் சரியாக அணுக முடியும். நீங்கள்தான் அதில் தெளிவாக இருக்கிறீர்களே. எனவே மேலே செல்வோம்.

நமது கிராமங்களில் சில அற்புதமான வசனங்கள் வழக்கில் இருக்கின்றன. நம் வாழ்க்கைப் பாதையில் வெளிச்சம் காட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

‘அவரை நட்டா துவரை முளைக்குமா?’ இன்னொன்று, ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?’ இவை என்ன சொல்கின்றன?

இந்த உலகத்தில் அழகில்லாத குழந்தையே கிடையாது. அன்பில்லாத தாயும் கிடையாது. அதே போல் ஏதோவொரு சிறப்பில்லாத மனிதன் கிடையவே கிடையாது. உயிர் என்பதே சிறப்பு. அதிலும் மானுடம் என்பது பெரும் சிறப்பு. இந்த அடிப்படைத் தகவலை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆனால் சிறப்பு என்பது தனித்து வருவதில்லை. ஒளியும் இருளும் அறிவும் அறியாமையும் படைப்பில் சேர்ந்தேதான் காணப் படுகின்றன.

அதேபோல் சிறப்பும் சிறப்பின்மையும் இணைந்து காணப்படுவதுதான் மனிதனின் குண சித்திரம். இதை பலங்கள், பலவீனங்கள் என்பார்கள். ‘வலிமையே வாழ்வு, பலவீனமே சாவு’ என்று விவேகானந்தர் முழங்குவதால் நாம் வலிமைகள், வரம்புகள் என்ற சொற்களையே பயன் படுத்துவோம். வலிமை என்றால் என்ன? வரம்பு என்றால் என்ன என்பதைச் சுருக்கமாகப் புரிந்து கொள்வோம். பட்டப் படிப்பு என்பது வலிமை யல்ல. படிப்பில் ஆர்வம் என்பதே வலிமை. கல்லூரியில் நுழையாதது ஒரு பெரிய வரம்பல்ல. கற்க ஆர்வமே இல்லாததே வரம்பு. ஆக காரியத்தில் உறுதி வலிமை; பாதியிலே கைவிடுவது வரம்பு. சுறுசுறுப்பு வலிமை; சோம்பல் வரம்பு.

இப்படி நம் ஒவ்வொருவருக்கும் சில வலிமைகள், சில வரம்புகள் உண்டு. இதனால்தான் கண்ஸ்ங் ஹஸ்ரீஸ்ரீர்ழ்க்ண்ய்ஞ் ற்ர் ஹ்ர்ன்ழ் ள்ற்ழ்ங்ய்ஞ்ற்ட்ள் ஹய்க் ப்ண்ம்ண்ற்ஹற்ண்ர்ய்ள் என்பார்கள். நமது வலிமைகளை நாம் அடையாளம் காணவேண்டும். உணர்வோடு பேண வேண்டும். அப்போதுதான் அவை வெளிப்படும், விகசிக்கும். அன்றேல், யாருக்கும் உதவாத சுனையாக பூமிக்கு அடியில் புதைந்தே கிடக்கும். நமது வலிமைகளைப் போலவே நம் வரம்பு களையும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வரம்புகள் இரண்டு வகைப்படும். ஒன்று தீமையற்ற வரம்பு, இன்னொன்று தீய வரம்பு. உதாரணமாக சிலருக்குக் கணக்கு வருவதே இல்லை.

எத்தனை பேர் என்ன விதமாய்ச் சொல்லிக் கொடுத்தாலும். அவர்களும் எவ்வளவுதான் முயன்று கற்றாலும் ஏறவே ஏறாது. இது மூளையில் ஜ்ண்ழ்ண்ய்ஞ் ல்ழ்ர்க்ஷப்ங்ம்! குடும்பமே கூடி நின்று கவலைப்பட்டு அவர்களைப் பாடாய்ப் படுத்துவதைவிட, அவரை கவிதை எழுத விடலாமே. இப்படி இனங்காணாத வலிமைகளுக்கு வடிகால் அமைப்பதன் மூலம் இடைஞ்சலான வரம்புகளை சமாளிக்கலாம். ஆனால் பொறாமை, கருமித்தனம் போன்ற தீய வரம்புகளை என்ன செய்வது? அவை தீயவை என்று உணர்ந்தா லொழிய அவற்றிலிருந்து விடுதலை கிடையாது.

நமது வலிமைகள் நமது வரம்புகளைச் சமன்படுத்திவிடாது என்றாலும், நமது வரம்புகள் நம்மை ஆக்கிரமித்துவிடாமல் அவை நம்மைக் காக்கும். பிறகு அவையே அழகுகளாகவும் பேசப் படும். எடிசனின் கசங்கிய உடை, ஐன்ஸ்டீனின் ஞாபக மறதி, நெப்போலியனின் கிறுக்கலான கையெழுத்து இவையெல்லாம் சிறப்புகளின் பட்டியலில் சேர்ந்துவிட்டன.

ஒவ்வொருவரும் நம்மைப் போலவே வலிமைகளும் வரம்புகளும் கொண்டவர்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டால், ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் நாம் அழகான பாடங்கள் பல கற்கலாம். நம் வலிமைகளை வளர்த்துக் கொள்ளலாம். நம் வரம்புகளைச் செப்பனிட்டுக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையை முதலில் அமைத்துக் கொண்ட பிறகுதான், நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கேள்வியோடே ஒரு கிளைக் கேள்வியும் எழுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது. அதுதான், ‘அதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்பது. ஆமாம், முயற்சியில்லாமல் எதுவும் இங்கே நடக்காது. நின்றுபோன கடிகாரம்கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரம் காட்டும். அது உதவுமா? முயன்று, முயன்று உழைத்து உழைத்து, படிப்படியாக உயர்ந்தவர்களின் வாழ்க்கைதான் நம் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டுகிறது.

சரி, உங்கள் வலிமைகள், வரம்புகளை நன்றாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். உங்களுடைய சாத்தியங்களைப் பற்றி இப்போது தெளிவாக இருக்கிறீர்கள். இந்த மனநிலையில் உங்கள் கவனத்தை இந்தத் துணைக் கேள்வியின் பக்கம் திருப்புங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குப் புரிந்து விடும்.

அ. கண்ணைத் திறந்து கனவு காண்க.

இன்று நடந்த சாதனை நேற்று வரை. தீவிரத்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட்ட கனவு தான். கனவில்லாத கண்கள், கவிதை யில்லாத தேசம் போல. ஆனால், கனவு காண்பதும் ஒரு கலை தான். ஆயிரமாயிரம் விண்மீன்களில் ஒன்று தான் ஆதித்தனாகச் சுடர் விட்டு உலகின் வாழ்க்கைக்கு ஆதார மாகச் சுழல்கிறது. அது போல, எத்தனையோ கனவுகள் நம் சித்தத்தின் முற்றத்தில் சிறகடித்தாலும், ஒரு சில மட்டுமே ஒளிர்கின்றன. பல உதிர்ந்து போகின்றன. சில புள்ளிகளா கின்றன. வாழ்வின் அறுதி லட்சியம் என்று ஒன்று உங்களுக்கு இருக்கு மானால் அது காட்டுத் தீ போல், மற்ற கனவுகள் எல்லாவற்றையும் உண்டு கொழுந்துவிட்டு எரிகிறது.

அது நிறைவேற்றம் காணாவிட்டால் நம்மையே தின்று முடித்து விடும் போலத் தகிக்கிறது.

‘பெரிதினும் பெரிது கேள்’ என்னும் வாசகம் நீங்கள் அறிந்ததுதானே? மிகவும் எளிய கனவுகளைக் காண்பவர்கள், மிகவும் எளிதில் ஏமாற்றமும் அடைகிறார்கள். ஒரு கட்டத்தில் நிறைவேற்றக் கனவுகள் இல்லாத நிலைமையில் அவர்களுடைய மனம், திருமணம் முடிந்த சத்திரத்து வாசலில் தெம்பின்றி நிற்கும் வாழை மரங்கள் போல் உயிரற்ற அவலச் சித்திரமாகக் காட்சியளிக்கிறது.

இன்னொன்று, எனக்குச் செவ்வாய்க் கிரகத்தில் சின்ன வீடு வேண்டும். ஒபாமாவோடு கில்லி தாண்டு ஆட வேண்டும் என்பது போன்ற அர்த்தமில்லாத கனவுகளை அறவே தவிர்க்கவும்.

எந்தக் கனவில் நினைவின் அம்சம், நிஜத்தின் தன்மை தூக்கலாக இருக்கிறதோ அந்தக் கனவு உயிர் பெற்று நிறைவேறுகிறது. எந்தக் கனவு மறு படி மறுபடி காணப்படுகிறதோ அது நிறை வேறுகிறது. எந்தக் கனவு அந்தரங்கத்தில் இடை விடாது பேணப்படுகிறதோ அது நிறைவேறுகிறது. ஆகவே, realistic dreams என்றால் உயிர்ப்புள்ள கனவுகள் என்றே பொருள்.

ஆ. ‘முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி’

இது பாரதியின் வாக்கு. வாக்குமூலம் என்றும் சொல்லலாம். நம் வீட்டுக் கதவைத் தட்டி. நம் கண்முன்னே நிற்கும் காரியங்களை உடனடியாகச் செய்து முடித்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். கனவு நிறைவேற்றம் என்பது, கடமைகளைச் சோர்வின்றிச் செய்வதில் ஆதாரப்பட்டிருக்கிறது. வேறேதோ பெரிதாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பில், கண்முன்னே தென்படும் கடமையைச் செய்யாதிருப்பது, கனவையே கோட்டை விடும்படி ஆகிவிடும்.

ஒரு மகானை அவர் செய்யும் மகத்தான காரியங்களைக் காட்டிலும் சின்னச்சின்ன செய்கைகளிலும் அவற்றின் விவரங்களிலும் அவர் காட்டும் கவனம், அக்கறை இவற்றின் மூலமே என்று புரிந்து கொள்ளலாம்.

நோய்களின் தலைவன் புற்றுநோயோ, தொழுநோயோ அல்ல. நம்மை வாழவே விடாமல் செய்யும் நோய் ஒன்று இருக்கிறது. அதுதான் ஒத்திப் போடுவது. சில அலுவலகங்களில் நாம் எதைச் சொன்னாலும், ‘எல்லாம் திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளலாம்’ என்பார்கள். அவர்கள் அப்படி சொல்வதும் ஒரு திங்கட்கிழமையாகவே இருக்கும். எப்படி உருப்படும்?

தனக்கான கடமையைத் தட்டாமல் உடனடி யாகச் செய்பவனே வாழ்வில் உயர்கின்றான்.

இ. ‘செய்வன திருந்தச் செய்’

ஔவையின் இந்த அமிழ்த மொழியை எப்படிப் புரிந்து கொள்வது? கீதை, Yoga is skill in action என்கிறது. ‘செய்கையில் நேர்த்தியே யோகம்’ என்று தமிழில் வடித்தான் பாரதி. சிலர் பென்சில் சீவுவதைப் பார்த்தால் மரத்தை வெட்டிப் போட்டது போலிருக்கும். சிலர் மரத்தை வெட்டினாலும் பென்சில் சீவியது போலிருக்கும். சிலர் சாப்பிடும் இலையைப் பார்த்தால் போர்க் களம் போலிருக்கும். சிலர் சாப்பிட்டபின் அந்த இலையில் இன்னொருவர் சாப்பிடலாம் போலிருக்கும். சிலர் கார்டில் கம்ப ராமாயணம் எழுதுவார்கள். சிலர் ஒரேயொரு சேதியை நிதானமாகவும் நிறைவாகவும் சொல்லிச் செல்வார்கள்.

இரண்டு ஜோடி செருப்புகளை இங்கும் அங்குமாகச் சிதறவிடாமல் இணைத்து வைத்தால் அங்கே ஒரு கவிதைக்கான தறுவாய் தென்படும். ஒரு பக்கம் எழுதி வீணான காகிதங்களைக் கத்தரித்து நேர்த்தியாக வைத்துக் கொண்டால் எத்தனையோ செயல்களுக்குத் தோதாக இருக்கும். சில பெண்கள் விளக்கேற்றினால் தீபம் முத்துச் சுடர் போல் தவம் செய்வோனின் உள்ளம் போலப் பொலிந்து நிற்கும். சிலர் காய்களை நறுக்கிப் போடும்போது ஒவ்வொரு துண்டும் ஒரே அளவாக இம்மி பிசகாமல் இருக்கும்.

ஆக, எதை செய்தாலும் அதில் ஓர் எழில் தோன்றும்படிச் செய்வதே நேர்த்தி. அதுதான் திருத்தம்.

மேலும், எந்த செயலையும் அது உண்பது, உறங்குவதாக இருந்தாலும், ஓர் ஆராதனை உணர்வோடு, அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செய்யும்போது, அந்த திருத்தம் உள்ளத்திலும் நேரும். உள்ளம் திருந்தும். உயிர் ஒளிரும்.

ஈ. ‘பலன் கருதாமல் உழைக்கச் சொன்னாள். பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்’
இதுவும் பாரதி சொன்னதுதான். வாழ்ந்து, அதைச் சொன்னதால்தான் வார்த்தை வாக்காகி வரிகள் வாசகமாகின.

நாம் இதைச் சற்று எளிமையாகவே புரிந்து கொள்வோம்.

காரியத்தில் வெற்றி என்பது கணப் பொழுதில் நடப்பதில்லை. இன்று விதையூன்றி, நாளை கனி பறிக்க முடியாது. யாரோ நட்ட மரம், கனியுண்பது நாம். அந்த யாரோ எதிர்பார்த்த பலன் இதுதான். கானத்தை இசைக்கும் முன்னே கர வொலியை எதிர்பார்த்தல் முறையன்று. ராம கிருஷ்ண முனி சொல்வார்: நீர் வேண்டுமானால் கிணறு தோண்ட வேண்டும். ஒரே இடத்தில் நீர் வரும்வரையில் அன்றி இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தோண்டினால் நிலம் முழுவதும் பள்ளங்களாகிப் பாழாகும்.
முயற்சி நம் வசம். பயன், காலத்தின் வசம்.

எனவே பொறுமை, விடாமுயற்சி, இவை இன்றியமையாதவை. இந்தப் பண்புகளே நமக்குப் பக்குவத்தைத் தருகின்றன. அந்தப் பக்குவத்திற்குக் காலம் தரும் வெகுமதியே செயலின் பயன்.

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளைத்தான், வெற்றி பெறுவது எப்படி என்று நமக்குப் பாடம் எடுப்பவர்களும் சொல்கிறார்கள். முன்னதில் இருக்கும் ஈர்ப்பு, பின்னதில் இல்லையே ஏன்?

எதுவும் நம்மால் முடியும் என்பது
பொதுவாய்ச் சொல்கிற வார்த்தை
எதுவும் நாமே என்பது அனுபவம்!
இன்றோ அதுவும் வார்த்தை!
மெதுவாய் நடந்து மெல்ல நடந்து
மீட்பில்லாமல் கலந்து
அதுவாய் ஆனோர் அவர்தம் அமைதி
அதுதான் வார்த்தையின் வார்த்தை!

4. இலக்கு அழைக்கிறது!

எங்கே இருக்கிறோம், என்னவாக இருக்கிறோம், என்னவாக ஆக விரும்புகிறோம் போன்றவற்றில் தெளிவு வந்த பிறகு, அந்த தெளிவே இதுவரை தென்படாத நமது இலக்கு அல்லது இலக்குகளை நமக்குக் காட்டும்.

கண்ணில் இலக்கு தென்பட்டால், கால்கள் நடந்தே தீரும்.

இலக்கு இல்லாவிட்டால் எதுவும் நகராது. இலக்கு அமைந்துவிட்டால் எல்லாமே அதை நோக்கியே நகரும்.

நெஞ்சில் புலப்படாத இலக்கு நேரில் தெரியத் துவங்கும்போது, கருத்தில் வசப்படாத திறமைகள் கண்களுக்குத் தெரிகின்றன!

உண்மையில், இலக்குதான் நம்மை அழைக்கிறது. அதை அடைவதே நம் இலக்கு!
விழித்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பவனுக்குக் காலையும் மாலையும் நேற்றும் நாளையும் ஒன்றுதான். நாம் அப்படி இல்லையே! ஒரு நாளின் முகத்தில் நாம் விழிக்கும் போது, அந்த நாளை எப்படி எதிர்கொள்வது என்ற செயல்திட்டத்துடன்தான் நாம் விழிக்கிறோம்!

இன்றை வரவேற்பவனுக்கு, நாளை பாய் விரிக்கிறது!

காலங்காலமாய்க் கண்ட கனவின் இறுதிக் காட்சியே இலக்கு. இதை புரிந்துகொண்டோம், நடக்கவும் துவங்கிவிட்டோம். இப்போது நம் பயணம் இனிமையாக அமைய, சில ஏற்பாடுகளை, நாம் செய்து கொள்ள வேண்டும். அதாவது நமது இலக்கை மூன்றாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

1. இன்றைய இலக்கு
2. இடைப்பட்ட இலக்கு
3. இறுதி இலக்கு

அன்றாடக் கடமைகளைச் சலிப்பின்றி செய்பவனே அறுதி இலக்கை அடைகிறான். அதனால் இன்று நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை பட்டியலிட வேண்டும். சட்டைப்பையில் சமர்த்தாய் உட்கார்ந்து கொள்ளக் கூடிய ஒரு சின்ன நோட்டுப் புத்தகம் போதும்! வேண்டும்! அதில் இன்று நாம் செய்ய வேண்டியவற்றை நேற்றே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவை மிகச் சிறிய காரியங்களாக இருந்தாலும், இதைப் போய் ஒருவன் எழுதி வைத்துக்கொள்கிறானே என்று நண்பர்கள் பரிகசித்தாலும், எண்ணிட்டு வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். செய்தவற்றை அடித்து விட வேண்டும்.

நினைவில் இருக்க வேண்டியது, மனதில் சுமையாய் இல்லாதிருக்க இந்தச் சின்ன நோட்டுப் புத்தகம்தான் தோது. அடித்தவுடன் மறந்து விடலாம். செய்ததை நினைத்துக் கொண்டே இருப்பதும் ஒரு சுமைதான். இப்படிப் பழக்கப் படுத்திக் கொண்டால் நமது இறுதி இலக்கைப் பற்றி நாம் சிந்திக்க, திட்டமிட நமக்கு நிறைய அவகாசம் கிடைக்கும்.

இடைப்பட்ட இலக்கு எதுவாகவும் இருக்கலாம். நீங்கள் படிக்க விரும்பும் துறை பற்றி இருக்கலாம். உங்கள் திருமணம் அல்லது வீடு வாங்கும் திட்டம், வெளிநாட்டுப் பயணம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். அவையும் அவையாக வந்து நம்மை அடையாது. நாம் செய்ய வேண்டியதைச் செய்தே அவற்றை எய்த முடியும். அதற்கும் ஒரு கால அட்டவணை, திட்டம் இவை தேவை. இறுதி இலக்கு?

ஒரு பெரிய நூலை எழுதுவது இறுதி இலக்காகுமா?அல்லது ஓய்வு பெற்றபின் சொந்த கிராமத்தில் குடிபுகுந்து தினம் நதியில் நீராடி மகிழ்வதுதான் இறுதி இலக்காகுமா? அதற்குப் பிறகு மிஞ்சியிருக்கக் கூடிய ஆண்டுகளில் உங்களை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? நம்மை நோக்கி எழும் கேள்விகளில், பதில் சொல்வதற்கு மிகவும் கடினமான கேள்வி இதுதான்: What have you done with your self? நான் ஆறு பெண்களுக்குத் திருமணம் செய்தேன். அரசு விருதுகள் பெற்றேன். நான்கு தொழிற்சாலை களுக்கு அதிபதி, பலமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டேன். நான் 35 முக்கியமான கழகங்களில் உறுப்பினன். டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப் படத்தில் வந்தேன். இவை போன்ற எதுவும் இந்த கேள்விக்கு விடையாகாது!

என்னைப் பொறுத்தமட்டில் நான் யார் என்று தெரிந்து கொண்டு தன்னில் தானடங்கும் ஆன்மிக விடுதலைதான் இறுதி இலக்கு. மற்றவை யாவும் இடைப்பட்ட இலக்குகளே என்பது என் கருத்து. இதில் மாறுபட உங்களுக்கு முழு உரிமை உண்டு!

எது எப்படியோ, இலக்கை நோக்கிய பயணத்தில் எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதில் நமக்கு ஒரு தெளிவு வேண்டும்.

அந்தப் பட்டியல் மாறக்கூடியதுதான். ஆனால் வாரா வாரம் மாறுமானால் பட்டியல்தான் உங்கள் இலக்கு என்று பொருள். தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு விஞ்ஞானிக்கோ அல்லது எழுத்தாளருக்கோ அதேபோல் தொடர்ந்து சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கோ கேளிக்கை களுக்காக நேரம் ஒதுக்க முடியாது. நீங்கள் கோரும் ‘ரிலாக்ஸேஷன்’ அவர்களுக்கு ஒரு கோப்பை சூடான தேநீரிலோ, ஜன்னலைத் திறந்தவுடன் வரும் தென்றலிலிருந்தோ, மொட்டை மாடியில் நின்றால் தட்டுப்படும் வயிரக் குவியல்களி லிருந்தோ, பெயரத்தியின் குமிழ்ச் சிரிப்பிலிருந்தோ. பெயரனை உப்பு மூட்டை சுமப்பதிலோ கிடைத்து விடும். முனைப்போடு உழைப்பவர்களுக்குக் கொஞ்சம் ஓய்வே போதுமானது.

நாம் நம்முடைய கவனமாக இருக்க வேண்டும். அவை ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறக்கூடியவை என்று புரிந்து கொண்டு அந்த மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டும்.
பிறகென்ன? காலை வீசிப்போடுங்கள். நிதானமாக! Make haste, slowly!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *