உயிரின் குணம்

– மரபின் மைந்தன் ம. முத்தையா

விதைபோல் கனவு விழுகிறது
வெளித்தெரியாமல் வளர்கிறது
எதையோ பருகி நிமிர்கிறது
என்றோ வெளியே தெரிகிறது!

எண்ணமும் வேர்களில் நீர்வார்க்கும்
எத்தனம் வளர்ச்சியை சரிபார்க்கும்
மண்ணில் பெற்றவை உரமானால்
மிக நிச்சயமாய் பூப்பூக்கும்!

ஒவ்வொரு பருவமும் பலம்கொடுக்கும்
ஒவ்வொரு விடியலும் ஒளிகொடுக்கும்
ஒவ்வொரு முகிலும் துளி கொடுக்கும்
ஒவ்வொரு படியாய் வளர்ந்திருக்கும்!

வேர்விடும் வாழ்க்கை நிமிரட்டுமே
வேண்டிய உயரம் அடையட்டுமே
பார்வையில் பசுமை சிரிக்கட்டுமே
பலன்கள் ஒருநாள் பழுக்கட்டுமே!

தாவரம் போல்தான் கனவுகளும்
தாங்கி வளர்த்தால் வலிமை வரும்
தீவிரம் அதுதான் உயிரின் குணம்
தீரா வல்லமை தந்துவிடும்!

முளைவிடும் வரையில் பொறுத்திருப்போம்
முயற்சியில் கருப்பையில் உயிர்தரிப்போம்
களைகளை எல்லாம் களைந்திருப்போம்
கனவின் உச்சியில் மலர்ந்திருப்போம்!

2 Responses

  1. Siva

    தீவிரம் அதுதான் உயிரின் குணம்
    தீரா வல்லமை தந்துவிடும்!

    Arumbai.

Leave a Reply

Your email address will not be published.