அட்டைப்படக் கட்டுரை
மரபின்மைந்தன் ம.முத்தையா
கிழக்கு இந்திய கம்பெனியை விலைக்கு வாங்கிய இந்தியர்
மும்பையில் பிறந்து, சர்வதேச தொடர்புகள் கொண்ட தொழிலதிபராய் வளர்ந்த சஞ்சீவ் மேத்தா, இந்தியாவின் இணையில்லாத புதல்வராய் எழுந்து நிற்கிறார்.
1600ல் பிரிட்டனில் உருவான கிழக்கிந்திய கம்பெனி வணிகம் நடத்த இந்தியா வந்து ஆட்சியைப் பிடித்தது. 2010ல், அந்த கிழக்கிந்தியக் கம்பெனியை விலைக்கு வாங்கியிருக்கிறார் சஞ்சீவ் மேத்தா!
“எங்களை ஆண்ட நிறுவனம், இப்போது எங்கள் ஆளுகையில்” என்று பெருமிதம் பொங்கப் பேசுகிறார் இவர்.
“அன்று வியாபாரம் செய்ய வந்தவர்கள் அரசியல் நடத்தினார்கள். இன்று அரசியல் நடத்த வருபவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். இரண்டிலும் நஷ்டப்பட்டதென்னவோ நாம் தானே இந்தியனே!” என்றார் கவிஞர் வைரமுத்து.
இருநூறு ஆண்டுகள் இந்தியாவை தன் கட்டுக்குள் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனியை, நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று ஐந்தாண்டுகால முயற்சிக்குப் பிறகு கையகப் படுத்தியுள்ளார் சஞ்சீவ் மேத்தா.
முப்பது நாற்பது பேருக்கு சொந்தமாய் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் முழு உரிமை, இப்போது இவரிடத்தில்!.
உலகெங்கும் பயணம் செய்து, கிழக்கிந்தியக் கம்பெனி குறித்த பதிவுகளையும் ஆவணங் களையும் படித்துப் பார்த்து தன் கடும் முயற்சியில் வெற்றி கண்டார் சஞ்சீவ் மேத்தா.
மேஃபேர் என்னும் நகரத்தில் தலைமையகம் கொண்டு லண்டனில் கடை திறந்துள்ள இப்போதைய கிழக்கிந்தியப் கம்பெனி மிக விரைவில் இந்தியாவில், தன் கிளையைத் துவக்க உள்ளது.
இது உணர்வு பூர்வமான மீட்டுருவாக்கம் என்கிற சஞ்சீவ் மேத்தா, இந்தியத் தயாரிப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதுதான் இந்த நிறுவனத்தின் கனவு என்கிறார்.
வணிகம் நடத்த வந்து ஆட்சியைப் பிடித்த நிறுவனத்தை இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு விலைக்கு வாங்கியதன் மூலம், ஒவ்வோர் இந்தியனின் இதயத்திலும் இமயமாய் எழுந்து நிற்கிறார் சஞ்சீவ் மேத்தா.
கப்பலில் வந்திறங்கிய வெள்ளையனை, கப்பல் ஓட்டுவதன் மூலமே விரட்ட நினைத்த தீரர் வ.உ.சி.யின் கனவு வேறொரு வடிவத்தில் இன்று நனவாகியிருக்கிறது.
சஞ்சீவ் மேத்தாவுக்கு சரியான அங்கீகாரத்தை இந்தியா வழங்கவேண்டும். இந்த ஆண்டு இந்திய சுதந்திரத் திருநாளில் இந்திய அரசின் சிறப்பு விருந்தினராக சஞ்சீவ் மேத்தா அழைக்கப்பட்டு தேசத்தின் உயரிய விருதுகளால் கௌரவிக்கப்பட வேண்டும்.
வணிகத்தின் பெயர் சொல்லி வந்தவர்களை வணிகப் போர் செய்தே எதிர்கொள்ளும் உத்தியை முதன் முதலில் தொடங்கிய வ.உ. சிதம்பரனார் பெயரால் உயரிய விருது உருவாக்கப்பட்டு, சர்வதேச அளவில் இந்தியத் தயாரிப்புகளைக் கொண்டு செல்லும் இந்திய வம்சாவழி தொழிலதிபர்களுக்கு ஆண்டுதோறும் அந்த விருது வழங்கப்பட வேண்டும்.
சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வரும்போது சஞ்சீவ் மேத்தா குறித்தும் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படவேண்டும்.
இந்தியாவின் வல்லரசுக் கனவுக்கு வலிமை சேர்த்திருக்கும் சஞ்சீவ் மேத்தாவின் சாதனைக்கு நாம் தலை வணங்குகிறோம்.
கிருஷ்ணமூர்த்தி
வாழ்க வளமுடன்