தேர்தல் என்பது எதுவரை

காதலும் கல்யாணமும் எதுவரை என்பதற்கு கவியரசு கண்ணதாசன் கேள்வி பதிலாகவே ஒரு பாடல் எழுதியிருப்பார். “காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை! கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும்வரை!” என்பது அந்தப் பாடல்.

கவிஞர் இன்று இருந்திருந்தால், “தேர்தல் என்பது எதுவரை” என்று புதிய பாடல் ஒன்றை இயற்றியிருப்பார். நடந்து முடிந்த தேர்தலில் பொது மக்களுக்கு இடையூறு பெருமளவு குறைக்கப் பட்டிருந்தது என்பது உண்மைதான். வெளிநாட்டி லிருந்து வந்திருந்த சில நண்பர்கள் ஒரு கொடியோ சுவரொட்டியோ இல்லாமல் தேர்தல் நடக்கும் அதிசயம் கண்டு வியந்தனர்.

உள்ளே தாழிட்டு உட்கார்ந்துவிட்டால் கதவைத் தட்டிக்கூட வாக்குக் கேட்கக்கூடாது என்று விதி வகுக்கும் அளவு வாக்காளர்கள் நலனிலும் சவுகரியங்களிலும் தேர்தல் ஆணையம் அக்கறை காட்டியது.

எல்லாம் சரிதான்… ஆனால் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும் என்பது போல தேசத்தின் மற்ற மாநிலங்களில் நடக்கும் தேர்தலைக் காரணங்காட்டி தேர்தல் முடிவுகளை ஒருமாத காலம் ஒத்திப் போட்டிருப்பது விசித்திரம்.
ஒரு மாநிலத்தின் அரசியல் நிலவரமும், மாநில அளவிலான கட்சிகளுடன் தேசியக் கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கும் விதமும் அடுத்த மாநிலத்தில் எதிரொலிக்கப் போவதில்லை.

அப்படியே எதிரொலித்தாலும் அது குறித்து கட்சிகள் கவலைப்பட வேண்டுமே தவிர தேர்தல் ஆணையம் கவலைப்பட வேண்டியதில்லை. அதே போல தேர்தல் நடந்து முடியும் வரை அரசின் செயல் பாடுகளில் தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டியது நியாயம்.
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, தேர்தல் முடிந்தபிறகும் அரசின் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சில வரையறைகளை தேர்தல் ஆணையம் கொண்டு வருவது விவாதங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இருப்பது போலவே தொடங்கிய பணிகளைத் தொடரும் உரிமை அரசுக்கு உண்டு.

பெருமளவு மக்கள் திரண்டு வாக்களித்தது தேர்தல் ஆணையத்தின் வெற்றி. அதேநேரம் தன் வரம்புகளையும் தேர்தல் ஆணையம் இன்னதென்று வரையறுத்து அறிவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *