– வழக்கறிஞர் த. இராலிங்கம்
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம்முடன் இருப்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு சொற்களில் வெளிப்படுத்துவது, மிகத் தேவையானது. மேடைகளில் பேசுவதைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக உரையாடும் போதே, இத்திறமை மிகவும் தேவைப்படுகின்றது. ஒரு திறமையாகவே இதைக் குறிப்பிடக் காரணங்கள் உண்டு.
நம் கருத்தினை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதே, நமது உறவுகளைத் தீர்மானிக்கிறது. குடும்பங்களில் குழப்பங்கள் இல்லாமல் இருக்க; நட்பு வட்டம் நிலைத்திருக்க; அலுவலகச் சூழலில், நமக்கு மூத்த நிலையில் உள்ளவர்கள் நம்மிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள… இப்படி எல்லா இடங்களிலும், மனதில் நினைப்பதை எப்படி வெளிப்படுத்துகின்றோம்? என்பது மிக முக்கியப்பங்கு வகிக்கின்றது.
உண்மையையே சொன்னாலும், கிண்டலுடன் ஏளனத்தைக் குரலிலும் முகத்திலும் வைத்துக்கொண்டு சொல்லும்போது, கேட்பவர் தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி மனம் புண்பட்டு, உறவே சிதைந்துபோகும் வாய்ப்பு மிக உண்டு.
‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்று வள்ளுவன் குறிப்பிடுவது இதனையே. இனிய குரலில், தெளிவான சொற்களில், முகத்தில் இயல்பான புன்னகையுடன் சொல்லும்போது, மாற்றுக்கருத்தைச் சொன்னாலும் கேட்பவர்களுக்குக் கோபம் வருவதில்லை.
யாருக்குச் சொல்கின்றோமோ அவருக்கே புரியாவிட்டால், நாம் சொல்லித்தான் பயனென்ன? இந்தக் குறைந்த பட்சத் தெளிவு நமக்கு இருந்து விட்டால், இந்தத் திறமையை வளர்த்துக்கொள்வது எளிது.
ஆனால் சொல்வதிலேயே மிக உயர்ந்த முறை என்ன தெரியுமா? மவுனமாக சொல்வதுதான். சரியான நேரங்களில் அமைதி காப்பது என்பது ஒரு பக்குவ நிலை. இதை அடைவது எளிதல்ல.
‘சொல்லின் செல்வர்’ என்று திரு. ஈ.வி.கே. சம்பத் அவர்கள் அழைக்கப்பட்டார். தனது சொல்லாற்றலால் இன்று உலகமெங்கும் வலம் வரும் சுகிசிவம் அவர்கள், அனைவராலும் சொல்லின் செல்வர் என்றே குறிக்கப்படுகின்றார். மேடையில் ஏறினால், மடை திறந்த வெள்ளமாகப் பொழியும் அவரது சொல்லாற்றல், மக்களைச் சிறைப்பிடித்து வைத்திருக்கும்.
இந்தப்பட்டத்தை முதன்முதலில் கொடுத்ததும், பெற்றதும் யார் தெரியுமா? கொடுத்தவன் கம்பன்; பெற்றவன் அனுமன். இராமன் வாயிலாக இப்பட்டத்தினை அனுமனுக்குக் கொடுக்கிறான் கம்பன்.
முதன் முறையாகத் தன்னைச் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்ட அனுமனின் சில சொற்களிலேயே, ‘யார் கொல் சொல்லின் செல்வன்…!’ என்று அவனை வியந்தானாம் இராமன். அனுமனுடன் சில காலம் பழகிய அவனது பேச்சாற்றலைப் பார்த்துக் கொடுக்கப் பட்ட பட்டமல்ல இது. சந்தித்த சில நிமிடங்களிலேயே கொடுக்கப்பட்டது. ‘இது நியாயமா?’ என்று நமக்குக் கேள்வி எழுவது இயல்பு. ஆனால் பின்னர் நடக்கும் நிகழ்வுகள், அதன் நியாயத்தினை உணர்த்துகின்றன.
வாலி வதைக்குப்பின்னர், ‘மழைக்காலம் முடிந்தவுடன் படையுடன் வா’ என்று சுக்ரீவனிடம் சொல்லிவிட்டு காட்டில் காத்திருந்தனர், இராமனும் இலக்குவனும். வாக்கு தவறினான் சுக்ரீவன். கடுங்கோபம் கொண்ட இராமன், சுக்ரீவனை எச்சரித்து வா என்று இலக்குவனை அனுப்பினான். ஒன்றுமில்லாததற்கே கோபப் படுபவன் இலக்குவன். இப்போது அண்ணனே கோபத்துடன் சொல்லி அனுப்பியதால், பொங்கித் ததும்பும் தனது சினத்துடன் சுக்ரீவனின் அரண்மனையை நெருங்கினான்.
இலக்குவனின் பெரும்கோபத்தை எப்படி எதிர்கொள்வது என்று எல்லோரும் திகைத்து நின்றார்கள். ‘இளம்பெண்களை அழைத்துக் கொண்டு எதிரே போனால், இலக்குவன் நாணப் பட்டு ஒதுங்கி நின்றுவிடுவான். அப்போது உங்களிடம் கோபத்தைத் தணித்துப் பேசுவான்’ என்று தாரைக்கு வழிமுறை சொன்னான் அனுமன்.
அவனது இந்தத்திட்டம் வெற்றி பெற்றது. பெண்கள் புடை சூழ வந்த தாரையைக் கண்டு, நாணித் தலைகுனிந்து நின்றான் இலக்குவன். அதைப் பயன்படுத்தி, நயமாகப் பேசி அவனது கோபத்தினைத் தணித்தாள் தாரை. அங்கதன் அனுமன் உட்பட அனைவரும், அதன் பின்னரே இலக்குவனை நெருங்கிப் புன்னகைத்தார்கள்.
இங்கு நம்மைப் பெரிதும் வியக்க வைக்கும் செய்தி என்னவென்றால், கோபத்துடன் வந்த இலக்குவனை சமாளிக்கும் வழியினைத் தாரைக்கு சொல்லிக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டான் அனுமன். அது மட்டுமல்ல; தாரைக்கும் இலக்குவனுக்கும் இடையில் நடந்த உரையாடலில் தலையிடாமல் தள்ளியே நின்றான். சொல்லின் செல்வன், ஒரு சொல்கூட பேசவில்லை.
சினம் பொங்கி நிற்கும் இலக்குவனிடம், தனது சொல்லாற்றல் எடுபடாது என்று உணர்ந்து அமைதி காத்தானே, அது பெரியது. உளவியல் அடிப்படையில் அவனை எதிர்கொள்ளத் தாரையை அனுப்பிவிட்டு, தான் ஒரு சொல்லும் சொல்லாது ஒதுங்கி நின்ற அனுமனின் செயலே நம்மை வியக்க வைக்கின்றது.
உண்மையான பேச்சாற்றல் என்பது, மேடையில் பேசுவதைவிட, உரையாடலில் தெளிவாக இருப்பது. மேடைப் பேச்சு நன்றாக அமைந்தால், சில நேரங்களில் கொஞ்சம் பாராட்டு கிடைக்கலாம்; ஆனால், தனிப்பட்ட உரையாடல்களே நல்ல உறவுகளை நமக்குப் பெற்றுத் தருகின்றது. உரையாடலிலும், எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பதை விட, எப்போது பேசாமல் இருப்பது என்று தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். அதனால்தான், சொல்லின் செல்வன் ஆனான் அனுமன்.
ஷேக்ஸ்பியரின் அழகாக உவமை ஒன்று உண்டு. ‘பேச்சு, காசுகளைப் போன்றது; சிறு அசைவுக்கும் அது சத்தம் போட்டுக்கொண்டே இருக்கின்றது. மவுனம் கரன்ஸி நோட்டைப் போன்றது; அது எப்போதும் அமைதியாகவே இருக்கும்’. பேச்சின் மதிப்பைவிட மவுனத்தின் மதிப்பே உயர்ந்தது என்பதனை இப்படிச் சொன்னார் இவர்.
மிகக் குறிப்பாக, மனம் சினம் வயப் பட்டிருக்கும்போது மவுனத்தினைவிட உயர்ந்த மருந்து எதுவுமில்லை. கோபத்தில் கொட்டிவிடும் சொற்கள், சூழலையே கெடுத்து விடுகின்றது. எவரிடம் சொற்களைக் கொட்டுகிறோமோ, அவர் மனத்தில் தீராத ரணத்தை ஏற்படுத்திவிடுகின்றது; கோபம் தணிந்த பின்னர், நமக்கே நம்மீது வெறுப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஆனால், கோபத்தில் நாம் காக்கும் அமைதி, நமக்கே மிகவும் பாதுகாப்பாக விளங்குகின்றது. அதில், எப்போதும் நாம் வருத்தப்பட ஏதுமில்லை. அதே நேரம், நமது அமைதியே அடுத்தவருக்கு தண்டனையாகவும் விளங்குகின்றது; நம்மை அவர்களுக்குப் புரியவும் வைக்கின்றது. ஒன்றை மனதில் கொள்ளுங்கள்; நமது மவுனத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், எப்போதுமே நமது சொற்களையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்; அதனை மதிக்கவும் மாட்டார்கள்.
தெரிந்ததை எல்லாம் சொல்லவும் கூடாது; எல்லாம் தெரியும் என்றும் சொல்லவும் கூடாது. நமக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்ல ஆரம்பித்தாலும் பேசிக்கொண்டேயிருப்போம்; எல்லாம் தெரியும் என்று நினைத்தாலும் பேசிக் கொண்டே இருப்போம். இந்த இரண்டுமே, மற்றவர்களிடம் நம்மைப்பற்றிய ஏளன உணர்வை உருவாக்கும்.
‘சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை’ என்ற கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகள், காதலருக்கு மட்டுமல்ல… வாழ்க்கையைக் காதலிக்கும் எவருக்கும் வழிகாட்டுபவை!
fathima
nice artical.so useful to me.
MMS PANDIAN
Enna Pesuvathu? Ethai Solvathu? Ini Ellam Mounamthan.
sumathi
I like this speech.