– மரபின் மைந்தன் ம. முத்தையா
பாய்ந்து வரும் ஜீவநதியைப் பார்க்கும்போது அதன் பாதையும் பயணமும் இன்னதென்று பொதுப்படையாக யாரும் வகுத்துவிட முடியாது. ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, பூமிப் பரப்பை ஈரப்படுத்தி, பயிர்களுக்கு உயிர் கொடுத்து, வேர்களை பலப்படுத்தி விரைந்து கொண்டே இருக்கிறது நதி.
அதே நேரம் தாகம் தாங்காமல் அள்ளிக் குடிக்க வரும் கைகளுக்கும் அள்ளிக் கொடுக்கிறது நதி. பாரதியும் ஒரு ஜீவநதிதான். சமூக மாற்றம் என்கிற பரந்துபட்ட நோக்கத்தில் அவன் பார்வையும் படைப்புகளும் பாய்ந்து சென்றால் கூட அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதனையும் தரம் மிக்கவனாகத் தயார்ப்படுத்துவதும் அவனது இலட்சியமாக இருந்தது.
கற்பனை மண்டலத்தில் அவன் சிறகு விரிந்தபோது கூட எட்டக்கூடிய லட்சியங்களையே கீதமாக இசைத்தான். புதிய இலக்குகள், புதிய கனவுகள், புதிய மனிதம் – இவையெல்லாம் பாரதி உருவாக்க நினைத்த உலகத்தின் அம்சங்கள்.
அவனை தேச விடுதலை, பக்திப் பாடல்கள், சமூக விழிப்புணர்வுப் பாடல்கள், காதல் பாடல்கள் போன்ற எல்லைகளுக்குள் நிறுத்திவிட எவராலும் இயலாது.
வானம்போல விரிந்தவன் பாரதி. திசைகளுக்கெல்லாம் தெரிந்தவன் பாரதி. சடங்குகள், சக மனிதனை மறந்துவிட்ட சம்பிரதாயங்கள், தன்னைத் தானே அடையாளம் கண்டுகொள்ள முடியாத வண்ணம் திரைபோடும் தாழ்வு மனப்பான்மை, ஆட்டிவைக்கும் அச்சம் போன்ற கண்ணுக்குத் தெரியாத விலங்குகளை உடைத்து ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குரிய ஆன்ம விடுதலையடையவும் வழிகாட்ட வந்தவன் அவன்.
எது புண்ணியம் என்பதைப் பற்றி எல்லாச் சமயங்களும் எத்தனையோ புனித விளக்கங்கள் தருகின்றன. ஆனால், மனித விளக்கம் தந்தவன் மகாகவி பாரதிதான்.
“பக்கத்திலிருப்பவன் துன்பப்படுவதைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி”என்கிறான் பாரதி.
ஒரு மனிதனின் வாழ்க்கை தனக்கு மட்டும் பயன்படும் விதமாய் அமைந்தால் அது சராசரி வாழ்க்கை. தன் சமூகத்திற்கும் பயன்படும் விதமாய் அமைந்தால் அதுதான் சாதனை வாழ்க்கை. ஆகவேதான் பாரதி”வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே”என்று பராசக்தியை வேண்டுகிறான்.
இலட்சியம் சார்ந்த வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பதற்கான வழிகாட்டுதல் பாரதியின் பாடல் வரிகளுக்குள் பயணமாகிறபோது நமக்குக் கிடைக்கிறது.
முன்னேற விரும்புகிறவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய பால பாடத்தை பாரதி தன்னுடைய பாடலில் சொல்கிறான். ஒன்றை செய்யத் தொடங்குகிறபோதே அது சார்ந்து ஏற்படும் எதிர்பார்ப்பு, அந்த வேலையை சரியாகச் செய்யவிடாமல் வேகத்தைக் குறைக்கிறது.
தன்னுடைய கடமையை சரிவரச் செய்து, அதன் விளைவையும் பலனையும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிராமல் அந்தப் பொறுப்பை நம்மினும் மேம்பட்ட சக்தியிடம் ஒப்படைப்பதே புத்திசாலித்தனம்.
“நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்”என்கிறான் பாரதி.
அப்படியானால் குடும்பத்தைப் பற்றி அப்போது சிந்திக்க வேண்டாமா?
“உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்சிந்தையே இம்மூன்றும் செய்”வேலை நேரத்தில் வேண்டாத கவலைகள் எதற்கு என்று பாரதி கேட்கிற கேள்வியாய் இந்தப் பாடலை நாம் புரிந்துகொள்ள முடியும்.
பொதுவாகவே, ஒரு மனிதன் தன் கனவுகளை நிறைவேற்றத் திணறுகின்றான் என்றால் அவனுக்கு உறுதி போதவில்லை என்று அர்த்தம். உறுதி குலைகிறபோது பதட்டம் காரணமாய் வார்த்தைகளில் கடுமை ஏறுகிறது. உடனே நினைவிலும் எதிர்மறை எண்ணங்கள் எழுகின்றன. இந்தச் சூழலில் எட்டக்கூடிய இலட்சியங்கள் கூட எட்டப்படாமலேயே போய்விடுகின்றன.
எனவே, மனதில் உறுதி, இனிய சொற்கள் நல்ல எண்ணங்கள் ஆகிய அம்சங்களை வளர்த்துக் கொள்ளுமாறு பாரதி வலியுறுத்துகிறான்.
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்
இது ஒரு பாடல் மட்டுமல்ல. வெற்றியை நோக்கிய வரைபடமும் கூட.
ஒரு நாடு தன்னிறைவு பெற்றுத் திகழ வேண்டுமென்றால் அதற்கு பல்விதத் தொழில்களிலும் வளர்ச்சி வேண்டும்.
“குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
நடையும் பறப்பு முணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்
மந்திரங் கற்போம் வினைத் தந்திரங் கற்போம்
வானை யளப்போம் கடல்மீனை யளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரங் கற்போம்”.
என்றெல்லாம் பாடிக்கொண்டே வருகிற பாரதி, “உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்” என்கிறான். உலகத் தொழில்கள் என்கிற விரிந்த பார்வை அத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட எவ்வளவு தொலைநோக்கு வேண்டும்!
உலகத் தொழில்களை ஒரு நாடு செய்யத் தொடங்குவதன் மூலம் அதற்கு இரண்டு விதமான நன்மைகள் ஏற்படுகின்றன. ஒன்று பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய தேவை குறைகிறது. இன்னொன்று, பிற நாடுகளோடு வணிக உறவுகள் வளர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதையெல்லாம் தாண்டி 21ம் நூற்றாண்டின் போக்கில் நின்று பார்க்கிறோம். வெவ்வேறு தேசங்களில் வித்தியாசமான வாழ்க்கை முறைகளைக் கடந்து சில வசதிகள் பொதுவானவையாக விளங்குகின்றன. தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்றவற்றில் தொடங்கி பல சின்னச்சின்ன பொருட்களும்கூட உலகம் தழுவிய அளவில் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய நவீன யுகத்தின் ஆரம்ப நிமிஷங்களை அடையாளம் கொண்ட தொலைநோக்கோடு பாரதி “உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்” என்று பாடி இருக்கிறான்.
39 ஆண்டுகள்தான் பாரதி பூமியில் வாழ்ந்தது. ஆனால், அவனைப் பொறுத்தவரை “பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்” என்கிற பிரகடனம் உண்மையாகிவிட்டது.
அவன் கடவுளிடம் பிரார்த்திக்கும் போதெல்லாம் உலக நன்மைக்காகவே வேண்டியிருக்கிறான். தனக்காக வைக்கும் வேண்டுதலில் கூட தன்னை உலக நன்மைகளுக்கான கருவியாய் ஆக்கும்படியே வேண்டியிருக்கிறான்.
“பாட்டுத் திறத்தாலே-வையத்தைப்
பாலித்திட வேணும்”
“எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றிஇராது
என் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்”
“இடையின்றிக் கலைமகளே
நினதருளில் எனதுள்ளம் இயங்கொணாதோ”
என்றெல்லாம் எழுதுகிறான்.
இதற்குத்தான் இலட்சிய வேகம் என்று பெயர். என்ன வந்தாலும் குலைந்துவிடாத இலட்சியத்திற்கு பாரதி என்று பெயர்.
Leave a Reply