வல்லமை தாராயோ!

திருச்சி 15.02.2009

வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி

உங்கள் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும், உடலின் ஒவ்வோர் அசைவும் உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது.

ஒரு துளி விழிப்புணர்வை நம் வாழ்வில் சேர்க்கிறபோது அத்தனை பரிமாணங்களும் மாறிவிடும்.

ஓர் இளைஞன் இருந்தான். சுமாரான தோற்றம் உள்ளவன். எந்தப் பெண்ணும் காதலிக்கவில்லையென்ற வருத்தம் அவனுக்கு, அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து, அந்தப் பகுதியின் அழகான பெண்ணொருத்தி அழைத்து ஆறுதல் படுத்த ஒரு காபி க்ளப்பிற்கு சென்றாள். காபி ஆர்டர் கொடுக்கும்போது காபியில் எனக்கு உப்பு அதிகம் இடுங்கள் என்றான். சர்வர் திரும்பக் கேட்டான். ஆம், உப்பு நிறைய போடுங்கள் என்று திரும்பவும் சொன்னான்.

சர்வர் சென்றபின், அந்தப் பெண் கேட்டாள், “நீங்கள் ஏன் காபியில் உப்பு இடச் சொன்னீர்கள்” என்று. அதற்கு அவன், “நான் ஒரு கடற்கரை கிராமத்தில் பிறந்தேன், என் தந்தை ஒருநாள் மீன் பிடிக்கச் சென்றவர் அலையடித்துக் கொண்டு போய்விட்டது. பிறகு, என் தாய் நகரத்திற்கு அழைத்து வந்துவிட்டாள். நான் சிரமப்பட்டு படித்தேன். இன்னும் அந்த கடற்கரை நினைவுகள் அப்படியே இருக்கின்றன. ஒரு துளி உப்பு என் நாவில் படும்போதெல்லாம் நான் வாழ்ந்த அந்த சமுத்திரத்தின் காற்று என்னைத் தொட்டுவிட்டுப் போவது போல் உணர்கிறேன்! அதனால்தான் நான் காபியில் கூட உப்பு போட்டு சாப்பிடுகிறேன்” என்றான்.

இது அந்தப் பெண்ணின் மனதைத் தொட்டது. தன்னுடைய பழைய வாழ்க்கையை இவ்வளவு தூரம் நினைக்கக்கூடிய இவனோடுதான் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாள். ஒரு கோடீஸ்வர வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், அவனை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்கிறாள். பார்க்க சராசரி, வசதியில்லாத போதும் திருமணம் நடக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு இளைஞனின் வாழ்க்கையே மாறுகிறது. ஐம்பது வருடம் சேர்ந்து வாழ்கிறார்கள். திருமணப் பொன்விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று இரவு தன் மனைவியிடத்தில் அவன், “நீ என்னை மன்னித்துவிடு”. எதற்கு? “ஐம்பது வருஷம் முன்னால் ஒரு பொய் சொன்னேன். கடற்கரையில் பிறந்தேன் என்பது பொய். உப்புக்காற்று படுகிறபோதெல்லாம் என் மனம் பழைய நினைவுக்குப் போகிறது என்பது பொய். எல்லாமே பொய்”. பிறகு ஏன் உப்பு போட்ட காப்பி கேட்டீர்கள் என்றாள் மனைவி.

“நான் காபியில், சர்க்கரை கொஞ்சம் அதிகமாக போடுங்கள் என்றுதான் கேட்க நினைத்தேன். உன்னோடு அமர்ந்திருந்த பதற்றத்தில் உப்பு என்று வந்துவிட்டது. எல்லோரும் கேலி செய்தார்கள். அதைக் கட்டமைப்பதற்கு ஒரு கதையைச் சொன்னேன். அதை நம்பி விட்டீர்கள்”.

ஒரு சின்ன சறுக்கல். உதட்டில் சொன்ன வார்த்தையிலிருந்து வந்ததை இவனுக்குள் படைப்பு மனம் திறந்து அதற்கென்று ஒரு காரணத்தை உருவாக்குகிறபோது அவன் வாழ்க்கையே மாறுகிறது. பதட்டத்தில் ஒரு சின்ன சறுக்கலில் இருந்து எழுகிறபோதுகூட விழிப்புணர்வோடு எழுந்தால் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெறலாம் என்பதைத் தான் இந்தக்கதை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த அம்சம், படைப்பு மனம் இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் விடப்பட்டிருக்கிற சவால், அவன் செய்யக் கூடியதற்கும்., செய்து கொண்டிருப்பதற்கும் இருக்கிற இடை வெளி.

பெரிய பெரிய லட்சியங்களை எட்டினால்தான் உங்கள் வாழ்க்கை முழுமையடையும் என்றில்லை. மனதிற்குள் நீங்கள் பொத்தி வைத்த சின்ன விருப்பங்கள், சின்ன சின்ன லட்சியங்கள், குறிப்பிட்ட இளமையில் நிறைவேறாவிட்டாலும், எல்லா வயதிலும் முயற்சி செய்துகொண்டே இருங்கள். அப்போதுதான் நாம் தேங்கிப் போகமாட்டோம். இன்றைக்கும் நமக்கு உத்வேகம், உற்சாகம் இருக்கிறது. புதியதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். வாழ்க்கை வாழ்கிறபோதுதான் முழுமையான வாழ்க்கையாக அது மாறுகிறது.

ஒரு மனிதரைப் பற்றி எதிர்மறையாக சிந்திக்க சிந்திக்க உங்கள் முழு சக்தியையும் நீங்கள் அவருக்கு கொடுக்கிறீர்கள். எதிரியை பலசாலியாக்குவதற்கு ஒரே வழி சதா சர்வகாலமும் அவனை நினைத்துக் கொண்டேயிருப்பது. ஒரு மனிதர் மேல் கோபம் இருந்தால், ஒரு காகிதத்தில் அவர் மேல் என்ன கோபம் என்று எழுதுங்கள் சாபம் இடாதீர்கள். இவ்வளவு சிரமங்களை ஏற்படுத்திய மனிதனை மன்னித்துவிட்டேன். அவனை கடந்து போகிறேன் என்று எழுதுங்கள்.

ஒரு மனிதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவரைத் தாண்டிச் செல்லுங்கள். நீங்கள் அவர் மேல் கோபம் கொள்வதின்மூலம் அவரை நீங்கள் தாண்டிச் செல்லவில்லை. உங்கள் தோளிலே சுமந்து கொண்டு செல்கிறீர்கள். இதனால் உங்கள் நடை தாமதமாகும், சக்தி வீணாகும்.

உணர்ச்சி களுக்கு அவ்வளவு பலமிருக்கிறது. உணர்ச்சியை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்பதில் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பார்க்கிற ஒவ்வொரு மனிதர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது. இதனால் நம் சக்தி கூடுகிறது.

ஒரு மனிதரை திட்டுகிறபோது சக்தி செலவாகிறது. அது மட்டுமல்ல. அந்தக் கோபத்தோடு இருக்கிறோம்.

உணர்ச்சிகளை சிலபோது தடை செய்து வைத்திருக்கிறோம். இது பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும். கோபமோ, அன்போ எதையும் அடக்கி வைத்தால் அது நம் சக்தி வட்டத்தில் அடைப்பாய் நிற்கிறது. அது நமக்குத் தெரியாமல் வேண்டாத இடத்தில் வெளிப்படுகிறது.

கோபத்தைக்கூட வெளிக்காட்டுகிறோம். ஆனால் அன்பை வெளிக்காட்ட வாய்ப்பே தரப்படுவதில்லை.

வெறுப்பைக்கூட வெளிக்காட்டிவிட்டு மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், வெளிக்காட்டாத அன்புக்கு மறுபடியும் வாய்ப்பே இருக்காது. தயவு செய்து இதை மறந்து விடாதீர்கள்.

சக மனிதர்களோடான உறவு வட்டம் விரிய விரிய உங்களுக்கு நிறைய பலம் கிடைக்கிறது. உங்கள் தனித்தன்மையை எந்த நேரத்திலும் இழக்காதீர்கள். நம்மை காப்பாற்றப் போவது தனித்தன்மைதான். அதை நாம் அடகு வைத்தால், சமரசம் செய்தால் சராசரி மனிதனாக்கிவிடும்.

ஒரு புலவர் இருந்தார். இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. இந்தப் புலவருக்கு பெரிய வசதி இல்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். கந்தல் உடை. சிலர் ஒரு ராஜாவைப் பார்த்து பாட்டுப் பாடினால் பரிசு கொடுப்பார் என்றார்கள். ராஜாவிற்கு அன்றைக்குப் பிறந்த நாள். நிறையக் கூட்டம். கூட்ட நெரிசலில் பிச்சைக்காரர்கள் பக்கம் போய் சேர்ந்துவிட்டார் புலவர். பிச்சைக்காரர்கள் நெருக்கியதில் முன்னால் போய் விழுந்துவிட்டார்.

இவ்வளவு கூட்டத்தைப் பார்த்த எரிச்சலிலிருந்து ராஜா, “டேய், பறக்காதே! இரு” என்றான்.

விழுந்த இந்தப் புலவர் எழுந்தார்.

“கொக்குப் பறக்கும்; புறா பறக்கும்; குருவி பறக்கும்

குயில் பறக்கும்; நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் – நான் ஏன் பறப்பேன் நராதிபனே”

என்றதும் ராஜா மிரண்டு போய் ஒரு புலவரை இப்படி அவமதித்துவிட்டோமே என்று வருத்தப்பட்டு புலவரின் கையைப் பிடித்தான். மீண்டும் புலவர் பாடலைத் தொடர்ந்தார்.

“திக்கு விஜயம் செலுத்தி உயர் ஆட்சிசெலுத்தும் அரங்கா – உன்

பக்கம் இருக்க ஒரு நாளும் பறவேன் – பறவேன் – பறவேனே”

வசைக் கவியையே வாழ்த்துக் கவியாக மாற்றினார். உங்கள் அடையாளம் அற்றுப் போகிற இடத்திலேகூட தன்னுடைய தனித்தன்மையை அந்தப் புலவர் இழக்கவில்லை.

எத்தனை பேரிடம் வியாபாரத்திற்கோ, ஏதேனும் உதவி கேட்டோ செல்கிறபோது நம்மை முதலில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடிகிறதா. தட்டுத்தடுமாறுகிறோம்.

பஙஹஹ் இஹழ்க் என்று அமெரிக்காவில் இருக்கிறது. எவ்வளவு சுருக்கமாக தன்னை அறிமுகப்படுத்த முடியுமென்று விமான நிலையத்தில் காத்திருக்கும் போதோ, வேறெங்காவது காத்திருக்கும் போதோ எழுதி எழுதிப் பார்ப்பார்கள்.

என்னுடைய தனித்தன்மையை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது. நான் யார்? என்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்றால் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்குள்ளே பார்க்க வேண்டும். எது என் தனித்தன்மை? எப்படி நான் ஜெயிக்கிறேன். இதை நாம் பார்க்க வேண்டும்.

நாம் குறுகிய வட்டத்திற்குள் வாழப் பிறந்தவர்கள் அல்ல. நம்முடைய சக்தி வட்டம் என்ன என்பதை உணர்கிறோம். அதன் மூலம் நம் அன்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டே போகிறோம். அதன் மூலம் புதுமைமிக்க செழுமை மிக்க ஒரு சமுதாயத்தை நாம் படைக்கிறோம்.

விழாவின் இறுதியில் “வல்லமை தாராயோ” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கிய திரு. சிவகுருநாதனுக்கு சிறப்புச் செய்யப்பட்டது.

தொகுப்பு: சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *