மரபின் மைந்தன்.ம.முத்தையா
அங்கும் இங்கும் திரியும் பறவை
ஆகாயத்தை அளப்பதென்ன?
அங்குச நுனியில் அடங்கும் யானை
ஆரண்யத்தை அழிப்பதென்ன?
கொத்தித் தின்னும் கோழிகள் கூடக்
காட்டுப் பருந்தை எதிர்ப்பதென்ன?
அத்தனை வெட்டும் தாங்கும் பூமி
பூகம்பத்தில் குதிப்பதென்ன?
இன்னொரு முகத்தை மறைத்துக் கொண்டே
எல்லாம் இங்கே இயங்கி வரும்
என்றோ ஒருநாள் எல்லை மீறிட
எல்லாம் நமக்கு விளங்கிவிடும்!
உருவம் பார்த்து எடை போடாதே
உள்ளே இருப்பது தெரியாது!
திரைகள் விலகத் தெரிவது தெரியும்
அதுவரை நமக்குப் புரியாது!
அவரவர் நோக்கில் அவரவர் வாழ்க்கை
அர்த்தமும் ஆழமும் கொண்டதுதான்
எவரையும் குறைவாய் எடை போடாமல்
இருக்கும் வரையில் நல்லதுதான்!
கண்ணில் படாமல் இருக்கும் திறமைகள்
காலம் வருகையில் வெளிப்படலாம்
மண்ணில் பிறந்தவை எல்லாம் சிறந்தவை!
மனதில் கொண்டால் ஜெயித்திடலாம்.!
Leave a Reply