எது விடியல்?

– மரபின்மைந்தன். ம. முத்தையா

இருளை உருக்கி வார்த்த பின்னே
எட்டுத் திசைக்கும் எதுவிடியல்?
இரவின் ரகசியத் தீர்ப்புகளை
எரித்துப் பிறக்கும் புதுவிடியல்!


வறுமைச் சோகம் சூழ்ந்துகொண்டு
வாட்டும் குடிசைக்கு எது விடியல்?
உரிமைப் போரிடும் பாட்டாளி
உதிரத்தில் பிறக்கும் புது விடியல்!

மூட இருளைப் பருகிவிட்ட
மூளைத் திசுவிற்கு எது விடியல்?
பாடம் புகட்டும் நம்பிக்கைப்
பாடல் வரிகளே புது விடியல்!

தொட்டால் சிணுங்கிப் பழகிவிட்ட
தாவரங்களுக்கு எது விடியல்?
நச்சென்று பாயும் நெருஞ்சிமுள்ளின்
நுனியில் உள்ளது புதுவிடியல்!

சோகம் வாங்கிய மனதுக்கு
சோர்வை நீக்கிட எதுவிடியல்?
வேகம் கொண்டு மறுபடியும்
வாழ வருகையில் புதுவிடியல்!

கிழக்கில் தினமும் விடிகிறதே
கவிதைக்காரா… எதுவிடியல்?
உனக்குள் கதிரவன் எழுகிறதே…
உண்மையில் அதுதான் புதுவிடியல்!

Leave a Reply

Your email address will not be published.