புலப்படுத்து

– மரபின் மைந்தன் ம. முத்தையா

நகரும் நிமிடங்கள் முதலீடு – இதில்
நஷ்டக் கணக்குகள் கூடாது
சிகரம் தொடுவது நம் இலக்கு – இதில்
சுணக்கம் என்பதே ஆகாது!
முகமில்லாத தினங்களுக்கும் – ஒரு

முகவரி கொடுப்பது நம்உழைப்பு
பகலும் இரவும் நம்வசத்தில் – இதில்
பயன்கள் காணட்டும் நம்முனைப்பு

பத்துவிரல்களிள் பிடியினிலே – மிகப்
பத்திரமாய் நம் நிகழ்காலம்
யுத்த களத்தின் வீரனைப்போல் – நீ
எழுந்தால் உனக்கே எதிர்காலம்
புத்தகம் பேசும் உறுதிகளை – உன்
புத்தியில் இறக்கிப் பயன்படுத்து
நித்தமும் உன்னைப் புதுப்பித்து – அட
நீ யார் என்பதைப் புலப்படுத்து!

வீசும் புயல்கள் வீசட்டுமே – நீ
விலகி நிமிரப் பழகிவிடு
ஆசைகள் நிஜமாய் ஆகட்டுமே – நீ
அலுப்பில்லாமல் முயன்றுவிடு
பேசும் உதடுகள் பேசட்டுமே – உன்
பாதையில் பயணம் தொடர்ந்துவிடு
வாசல் திறவா இடங்களிலும் – நீ
வெய்யில் போல நுழைந்துவிடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *