ஒரு கனவின் கதை

-மரபின்மைந்தன் ம. முத்தையா

நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது
நாளும் வருமென்று நினைத்திருந்தேன்
தேனொரு கையில் இருக்கிறது – அதில்
தேவ மூலிகை மணக்கிறது

தானாய் ஒருதுளி பருகிவிட்டால் – பின்னர்
தேவரும் மூவரும் வரந்தருவார்
ஆனால் கைதான் அசையவில்லை – இதன்
அர்த்தம் நெடுநாள் புரியவில்லை

நீண்ட காலம் யோசித்தேன் – பல
நூல்களைத் தேடி வாசித்தேன்
மீண்டும் கனவு வரவுமில்லை – அதன்
மூல ரகசியம் புரியவில்லை
தூண்டும் தேடல் துரத்தியதால் – எனைத்
துளைத்துத் துளைத்து சிந்தித்தேன்
ஆண்டுகள் கொஞ்சம் போனபின்னே -அதன்
அர்த்தம் ஒருநாள் அறிந்துகொண்டேன்

நறுந்தேன் துளிதான் நம்பிக்கை – அன்று
நகராக் கைதான் தயக்க குணம்
மறுமுறை வாராக் கனவென்ன? – அது
மீண்டும் அமையா நல்வாய்ப்பு
“விறுவிறு” என்றே விழித்துக் கொண்டேன் – பின்
வருகிற வாய்ப்புகள் பற்றிக் கொண்டேன்
அறுத்திடும் அச்சங்கள் விட்டு வந்தேன் – ஆம்
அதன்பின் னால்தான் வெற்றிகண்டேன்

உள்ளங்கையில் தேன்துளிகள் – இங்கு
ஒவ்வொருவருக்கும் காத்திருக்கும்
வெள்ளம் போன்ற வெற்றிகளும் – நம்
வியர்வை வரும்வரை பார்த்திருக்கும்
பள்ளம் மேடுகள் எல்லாமே – நம்
புரிதலில் தானே இருக்கிறது
உள்ளம் துணிந்து இறங்கிவிட்டால் – இந்த
உலகே நம்முடன் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *