காற்றே சிறகாய் மாறிய பின்னே
கைகளில் வானம் குடியிருக்கும்
நேற்றின் வலிகள் ஞாபகம் இருந்தால்
நேர்ப்படும் எதிலும் சுகமிருக்கும்
ஆற்றின் கரையில் ஆடிய நாணல்
ஆயிரம் அலைகளைக் கண்டிருக்கும்
மாற்றங்கள் எல்லாம் ஏற்கிற உள்ளம்
மறுபடி மறுபடி ஜெயித்திருக்கும்
மீண்டும் மீண்டும் அலைகளின் நடுவே
மீன்கள் துள்ளி விளையாடும்
தூண்டில் முனைக்குத் தப்பிய மீன்தான்
தொடர்ந்து நீந்தி உறவாடும்
நீண்ட வாழ்வே நதியின் பயணம்
நின்றால் எல்லாம் தடையாகும்
மூண்டெழும் வேகம் வெளிப்படும் நேரம்
மூன்று காலங்கள் துணையாகும்
பூமியும் தெரியும் வானமும் தெரியும்
பறவையின் உலகம் பெரிதாகும்
தாமெனும் கூண்டில் தவிப்பவருக்கோ
தாகம் பசியே துணையாகும்
ஆமையின் ஓடு அதுவெறும் கூடு
அறியாமல் அது உயிர் வாழும்
நாமெனும் உணர்வு நாளும் வளர்ந்தால்
நான்கு திசைகளும் நமதாகும்
சின்னஞ் சிறிய எல்லைகளுக்குள்
சிக்கிக் கிடப்பது சிறைவாழ்க்கை
தன்னைத் தவிர இன்னும் ஒன்றைத்
தெரியாதிருக்கவா தரைவாழ்க்கை?
அன்பில் உயிர்களை அரவணைப்பாயேல்
அதுதான் அதுதான் புதுவாழ்க்கை
ஒன்றும் உணர்வுகள் எங்கும் விரிந்தால்
உள்ளே நிகழும் ஒளிசேர்க்கை
மரபின்மைந்தன் முத்தையா
fathima
waw best