தீயாய் எழுந்தால்…

– மரபின் மைந்தன் முத்தையா

உன்னில் எழுகிற கனலில் – இந்த
உலகே ஒளிபெற வேண்டும்
மின்னில் எழுகிற சுடராய் – உன்
முயற்சிகள் மழை தர வேண்டும்

தன்னில் கனல்கிற தணலால் – எட்டுத்
திசைகளைத் திறந்திட வேண்டும்
இன்னும் என்கிற தேடல் – உன்னை
இயக்கி விசைதர வேண்டும்

ஊக்கச் சிறகுகள் விரித்தால் – உனை
உயர்த்தத் துடிக்கும் வானம்
தூக்கம் உதறி எழுந்தால் – உன்
தோள்விட்டோடிடும் பாரம்
ஆக்கும் காரியம் எதிலும் – அட
ஆர்வம்தானே மூலம்
ஏக்கம் இனியும் எதற்கோ – நீ
இசைத்திடு வெற்றியின் கானம்!
போராட்டங்கள் சுழல்போல் – அதன்
போக்கினில் போனால் வெற்றி
நீரோட்டங்கள் எதிலும் – நீ
நினைத்தால் நிகழும் வெற்றி
யாராரோ எதையோ சொல்வார் -உன்
எண்ணத்தின் உறுதியில் வெற்றி
தீரா வலிகளும் தீரும் – நீ
தீயென எழுந்தால் வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *