வாழ்க்கையின் பாதை

– மரபின் மைந்தன் முத்தையா

புன்னகை வரைபடம் கைவசமிருந்தால்
புலப்படும் வாழ்க்கையின் பாதை
தன்னிடம் இருப்பது என்னென்று தெரிந்தால்
உண்மையில் அவன்தான் மேதை
இன்னொரு திருப்பம் எதிர்ப்படும் என்று
ஏங்கி நடப்பதா வாழ்க்கை?

எண்ணிய திருப்பம் ஏற்படும் விதமாய்
இன்றே நடத்திடு வாழ்வை

காலத்தின் புதையல் காற்றிலும் இருக்கும்
கண்களில் படும்வரை தேடு
தோல்வியின் கைகளில் துவண்டுவிழாதே
திசைகளைத் துளைத்தே ஓடு
நீலத்தை வானம் தொலைத்துவிடாது
நீ உந்தன் சுயத்தினை நாடு
கோலங்கள் புனைந்து மேடைக்கு வந்தோம்
குழப்பங்கள் மறந்தே ஆடு

பொன்னொரு பக்கம் மண்ணொரு பக்கம்
புதைத்தவன் உயரத்தில் இருப்பான்
இன்னொரு பக்கம் பூமிக்கும் உண்டு
என்பதை உணர்ந்தவன் ஜெயிப்பான்
உன்னிடம் என்ன உன்னையே கேள்நீ
உண்மை தெரிந்தவன் பிழைப்பான்
மின்னிடும் நெருப்பைக் கண்களில் வைத்தவனே
மூடிடும் இருளைக் கிழிப்பான்.

2 Responses

  1. fathima

    sahhhhhhhh i like it.v always expect such line thanks 4 your line.some line tune my life style

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *