-மரபின்மைந்தன் ம. முத்தையா
ஜன்னல் கம்பிகள் பின்னால் நின்றால்
சிறிதாய்த் தெரியும் ஆகாயம்
தன்னைமட்டுமே எண்ணிக் கிடந்தால்
தன்நிழல் வரைதான் பூகோளம்!
பார்வையின் பரப்பே வாழ்க்கையின் பரப்பு
புரிந்து நடந்தால் புகழ்சேரும்
காரண அறிவைக் கடந்ததுன் வலிமை
கண்டு கொண்டால்தான் பொற்காலம்!
வீசும் வலையில் விழுகிற மீன்களாய்
வாய்ப்புகள் உள்ளன கடலளவு!
ஆசை ஆசையாய் இலக்கை நெருங்குநீ
ஆயிரம் வளர்ச்சிகள் மலையளவு!
பேசும் வார்த்தையும் பணிகளும் ஒன்றாய்ப்
பொலிந்தால் வெற்றிகள் நிச்சயமே!
தேசம் முழுமைக்கும் நீ உடமை எனத்
துணிந்தால் தொடுவாய் இலட்சியமே!
முத்திரை பதிக்க முன்வரும் கடமை
மனிதர்கள் யார்க்கும் இருக்கிறது
எத்திசை போயினும் அத்திசை நமதெனும்
எண்ணம் உயர்வைக் கொடுக்கிறது!
வித்தைகள் கைவசம் இருப்பதை வளர்த்து
விஸ்வரூபங்கள் எடுத்திடு நீ!
நத்தையின் கூடல்ல உன்னிதயம் அது
நேசத்தின் உலகென உணர்த்திடு நீ!
Leave a Reply